உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இந்த தாக்குதலில் முதலாவதாக உக்ரைன் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என அமெரிக்க உளவுத்துறையின் கணிப்பு தெரிவிக்கின்றது.
எதிர்வரும் நாட்களில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்த நிலையில், இந்த செய்தி வந்துள்ளது.
மேலும், ரஷ்ய படைவீரர்கள் சுமார் 169,000-190,000 பேர் உக்ரைனிலும் அதற்கு அருகிலும் குவிந்துள்ளனர் என்றும் இது கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளில் ரஷ்ய ஆதரவு போராளிகளை உள்ளடக்கியது என்றும் அமெரிக்கா கணித்துள்ளது.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை இரவு, டொனெட்ஸ்கில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு சேவை கூறியது.
உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை வீரர்களின் பரவல் இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல், என, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்புக்கான அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.