கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சட்டநாதர் தெருவில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கையை அனுப்பிய ஆறு கட்சிகளும் இணைந்து அக்கருத்தை ஒழுங்குபடுத்தியிருந்தன.ஆறு கட்சிகளின் சார்பாகவும் ஈபிஆர்எல்எப் அமைப்பு அக்கருத்தரங்கை முன்னின்று ஒழுங்குபடுத்தியதாக தெரிகிறது.ஒன்பதரை மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட கருத்தரங்கு பத்தரைக்குத்தான் தொடங்கியது. அந்த மண்டபம் ஆகக்கூடியது 400 அல்லது 500 ஆட்களைத்தான் கொள்ளக்கூடியது.
அதிகளவு தொகை மக்களைத் திரட்டுவது என்று ஏற்பாட்டாளர்கள் யோசித்திருக்கவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறு யோசித்து இருந்திருந்தால் கருத்தரங்கை வீரசிங்கம் மண்டபத்தில் ஒழுங்குபடுத்தியிருந்திருக்கலாம்.
அல்லது ஒரு பொது வெளியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்திருக்கலாம்.அவ்வாறு ஒரு பொது வெளியில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டும் நோக்கம் ஆறு கட்சிகளுக்கும் இருந்திருக்கவில்லையா? அல்லது அவ்வாறு ஆயிரக்கணக்கானவர்களை திரட்டக் கூடிய சக்தி அந்த ஆறு கட்சிகளுக்கும் இருக்கவில்லையா?
ஞாயிற்றுக்கிழமை நடந்த கருத்தரங்கில் 200 க்கும் குறையாதவர்களே பங்குபற்றினார்கள். ஆறு கட்சித் தலைவர்களும் ஆளுக்கு 50 பேரைக் கொண்டு வந்திருந்தாலாவது ஆகக் குறைந்தது 300 பேர்களாவது வந்திருப்பார்கள்.
ஆனால் 200க்கும் குறையாத தொகையினர்தான் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அவர்களில் அதிகமானவர்கள் கட்சிகளை சேர்ந்தவர்கள்தான். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவுக்கு வந்திருக்கவில்லை.
அழைக்கப்பட்ட தலைவர்களில் செல்வம் அடைக்கலநாதனும் மாவை சேனாதிராஜாவும் பங்குபற்றவில்லை.ஸ்ரீகாந்தா உடல்நலக் குறைபாடு காரணமாக சற்று பிந்தி வந்தார். செல்வம் அடைக்கலநாதன் தனிப்பட்ட காரணங்களால் பங்குபற்றவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும் அவர் தனது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாவை அனுப்பியிருந்தார். மாவை சேனாதிராஜா அக்கருத்தரங்கில் கலந்து கொள்வதாக உறுதி கூறியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் அவர் பங்குபற்றவில்லை மட்டுமல்ல அவருடைய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறு எவரையும் மேடைக்கு அனுப்பியிருக்கவில்லை.
ஆனால் அன்று காலை யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து வேட்டையில் மாவை சேனாதிராஜா முதலாவது ஆளாக கையெழுத்திட்டிருந்தார்.அவருக்கு பெரும் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு சில நாட்களே என்று கூறப்படுகிறது.
அதன் காரணமாகத்தான் அவர் கருத்தரங்கில் பங்குபற்றவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் அப்படி என்றால் தனக்கு பதிலாக பேசுவதற்கு ஏன் வேறு எவரையும் அவர் அனுப்பவில்லை?
மாவை அக்கருத்தரங்கில் பங்குபற்ற மாட்டார் என்று ஏற்கனவே தமிழரசுக் கட்சி வட்டாரங்களில் செய்திகள் கசிந்திருந்தன. கருத்தரங்குக்கு பல நாட்களுக்கு முன்னரே அவ்வாறு செய்திகள் கசிந்தன.இனிவரும் காலங்களில் ஏனைய கட்சிகள் ஒழுங்குபடுத்தும் கூட்டங்களில் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றக் கூடாது என்று தமிழரசுக் கட்சியின் உயர்மட்டம் கூடி முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் அதனால்தான் மாவை கலந்து கொள்ளவில்லை என்றும் ஓர் ஊகம்.
ஆனால் அன்று பின்னேரம் நடந்த கட்சித் தலைவர்களுக்கான சூம் சந்திப்பில் அவர் பங்கு பற்றியிருக்கிறார்.
தொடக்கத்திலிருந்தே இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கை அனுப்பும் விடயத்தில் தமிழரசுக் கட்சி முரண்டு பிடித்து வந்தது. அந்த விடயத்தில் மட்டுமல்ல அதற்கு முன்னரும் ஐநாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்பும் போதும் அக்கட்சி முரண்டு பிடித்தது.
டெலோ இயக்கத்தின் முன்னெடுப்பில் அவ்வாறு ஏனைய கட்சிகள் இணைந்து கூட்டு ஆவணங்களை தயாரிக்கும் விடயத் தில் தமிழரசுக்கட்சி பெரியளவிற்கு அக்கறை காட்டவில்லை.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கி டெலோ இயக்கம் முன்னெடுக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி ஒருவித ஈடுபாடு இன்றி பங்கெடுத்து வருகிறது. சந்திப்புக்களில் தொடக்கத்தில் மாவை கலந்து கொள்வார். ஆனால் கடைசி நேரத்தில் பின்னடிப்பார்.
ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்பும் விடயத்தில் அவர் அப்படித்தான் நடந்து கொண்டார். அதன்பின் இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்ப முயன்றபோது அதிலும் அவர் முதலில் பின்னடித்தார்.
ஆனால் இறுதியில் ஒப்புக்கொண்டார். அவரும் சம்பந்தரும் மிகவும் பிந்தித்தான் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் இணைந்தார்கள். சுமந்திரனும் கூட அதில் இணைந்தார். கூட்டுக் கோரிக்கையின் வடிவத்தை மாற்றியது தானே என்றும் அவர் பெருமையாகக் கூறினார்.
ஆனால் அக்கோரிக்கை அனுப்பப்பட்ட பின் சுமந்திரன் அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நடந்து கொள்கிரார். சில வாரங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் காணி சம்பந்தமாக நடந்த ஒரு சந்திப்பில் சுமந்திரன் பங்குபற்றினார்.
அதில் ஊடகவியலாளர்கள் அவரிடம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை தொடர்பாக கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதை அனுப்பியவர்களிடமே கேளுங்கள் என்று அவர் கூறியதாக ஒரு தகவல் உண்டு.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இளங்கதிர் மண்டபத்தில் ஆறு கட்சிகளும் ஒரு கருத்தரங்கை ஒழுங்குபடுத்திய பொழுது அதேநாளில் காலை சுமந்திரன் தனது கையெழுத்து வேட்டையை யாழ் நகர மையத்தில் ஒழுங்குபடுத்தியிருந்தார்.
அது தற்செயலானதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடு தீர்க்கப்படவில்லை என்றே தெரிகிறது. ஒப்புக்காக எல்லாருமாக சேர்ந்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பி விட்டார்கள். ஆனால் அதன் பின் மீண்டும் முரண்பாடுகள் வெளிப்படுகின்றன.
இது ஏறக்குறைய கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு சிவில் சமூகங்களின் ஒருங்கிணைப்பில் மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கடிதத்தை ஜெனிவாவுக்கு அனுப்பிய பின் தங்களுக்கிடையே கேவலமாகமுரண்பட்டுக் கொண்டதை ஒத்தது.
இப்போதுள்ள குழப்பங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் தமிழரசுக் கட்சியும் சம்பந்தரும்தான். தமிழரசுக் கட்சிக்கும் தலைமை பலமாக இல்லை. கூட்டமைப்புக்கும் தலைமை பலமாக இல்லை. கூட்டமைப்பின் தலைமை பலமாக இருந்திருந்தால் டெலோ முன்கை எடுக்கும் ஒரு நிலைமை தோன்றியிருக்காது.
தமிழரசுக் கட்சியின் தலைமை பலமாக இருந்திருந்தால் கடந்த 10 மாத கால குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது. டெலோ முன்கை எடுத்த பொழுது சம்பந்தர் அதை தடுக்க முடியாதவராக காணப்பட்டார்.
அதுபோலவே மாவையும் டெலோவின் முன்னெடுப்புக்கள் தொடர்பாக உறுதியான முடிவுகளை எடுக்கத் தவறினார்.
இந்தியாவுக்கு கடிதம் எழுதுவது என்று முடிவெடுத்திருந்திருந்தால் தமிழரசுக் கட்சியை அந்த முயற்சிக்கு தலைமை தாங்கியிருந்திருக்க வேண்டும். அல்லது இந்தியாவோடு என்கேஜ் பண்ணுவதில்லை என்று முடிவெடுத்து விட்டு தனி வழியில் போயிருந்திருக்க வேண்டும். ஆனால் மாவை. இரண்டையும் செய்யவில்லை.
ஓம் என்று சொல்லி ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறார். பின் கடைசி நேரத்தில் கை விடுகிறார். அல்லது ஓம் என்று சொல்லி கையெழுத்து வைக்கிறார். அதன்பின் கருத்தரங்கை தவிர்க்கிறார். இது விடயத்தில் தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன ? அக்கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் கட்சித் தலைமையை மீறி கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
அண்மைக்காலமாக அவர் தெரிவித்துவரும் கருத்துக்களைத் தொகுத்து பார்த்தால் அவர் கட்சித் தலைமைக்கு எதிராகவும், இந்தியாவுக்கு கடிதம் அனுப்பிய கட்சிகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருவதைக் காணலாம்.
இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பிய கட்சிகளைத்தான் அவர் எதிர்க்கிறார் இந்தியாவை அல்ல என்ற ஒரு தோற்றத்தை கட்டியெழுப்பும் விதத்தில் அவர் அண்மையில் கிளிநொச்சியில் நடந்த ஒரு அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் இரண்டாம் நிலைத் தூதுவரை அழைத்திருந்தார்.
அதாவது அவர் இந்தியாவுக்கு பகை இல்லை ஆனால் இந்தியாவுக்கு கோரிக்கை அனுப்பிய கட்சிகளுக்குத் தான் பகையாம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலையும் ஏறக்குறைய அப்படித்தான் தெரிகிறது.
மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் நமக்கு கிடைக்கும் சித்திரம் என்ன? இந்தியாவுக்கு கடிதம் அனுப்புவது, ஐநாவுக்கு கடிதம் அனுப்புவது போன்ற அனைத்தும் வெளிவிவகார நடவடிக்கைகளே.
இந்த வெளிவிவகார நடவடிக்கைகளை தமிழ்த் தரப்பு ஒன்றாகக் கூடி முடிவெடுக்கும் நிலையில் இல்லை. ஒரு பொதுக்கட்டமைப்புக் கூடாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலையிலும் இல்லை.
ஒரே கூட்டுக்குள்ளே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித் தனியாக ஐநாவுக்கு கடிதங்களை அனுப்புகிறார்கள். ஒரே கூட்டமைப்புக்குள் இருந்தபடியே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு கூட்டுக்குள் இணைந்து கடிதங்களை அனுப்புகிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கின் போதும் இந்தியாவுக்கு கூட்டு கோரிக்கையை அனுப்பிய கட்சிகள் தங்களுக்கிடையே உருகிப்பிணைந்த ஒரு கூட்டாக இல்லையா என்ற கேள்வி எழுந்தது.
ஒரு தலைமையின் கீழ் அல்லது பலமான இணைத் தலைமைகளின் கீழ் ஐக்கியப்பட்டு முடிவை எடுத்து ஒரு கருத்தரங்கை அமோகமாக நடத்த அக்கட்சிகளால் முடியவில்லை. அவ்வாறு நடத்த நாங்கள் விரும்பவில்லை என்று அவர்கள் கூறக்கூடும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பலத்தைக் காட்டும் நோக்கம் நமக்கு கிடையாது, மக்களுக்கு தெளிவூட்டுவதே நமது நோக்கம் என்றும் அவர்கள் கூறலாம்.
ஆனால் இவர்கள் யாவரும் ஆட் கணக்கை காட்டும் தேர்தல் மைய அரசியல்வாதிகளே. அது தானாக வந்த கூட்டமா அல்லது வாகனங்களில் ஏற்றி இறக்கிய கூட்டமா என்பதல்ல பிரச்சினை, தங்களால் ஒரு பிரமாண்டமான கூட்டத்தை கூட்ட முடியும் என்று எதிர்த் தரப்புக்கு நிரூபித்து காட்டுவது என்பது தேர்தல் அரசியலின் மாயாஜாலங்களில் ஒன்று.
ஆனால் இளங்கலைஞர் மண்டபத்தில் நடந்த கருத்தரங்கு அவ்வாறான எழுச்சிகரமான ஒரு நிகழ்வாக அமையவில்லை. ஒரு கருத்தரங்கும் பேரணியும் ஒன்று இல்லைதான். ஆனால் ஒரு பேரணிக்கு பதிலாக மற்றொரு பேரணியை நடத்தும் பலம் மேற்படி ஆறு கட்சிகளுக்கும் இல்லையா?
எனைய கட்சிகளோடு சேர்ந்து கையெழுத்தை வைத்து விட்டு தமிழரசுக் கட்சி கருத்தரங்குக்கு தனது பிரதிநிதியையும் ஆதரவாளர்களையும் அனுப்பாமல் விட்டது நேர்மையற்றது.அதே சமயம் நேற்று முன்தினம் சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும் கொழும்பில் உள்ள இந்தியத்தூதுவரைச் சந்தித்ததை எப்படி விளங்கிக்கொள்வது?
பூகோள அரசியலையும் புவிசார் அரசியலையும் வெற்றிகரமாக கையாளப் போகிறோம் என்று அடிக்கடி கூறி வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கடந்த 12 ஆண்டுகளாக அதன் முதல் அடியைக் கூட எடுத்து வைத்திருக்கவில்லை.
எனவே வெளியுறவுச் செயற்பாட்டைப் பொறுத்தவரை தமிழ் தேசிய அரங்கில் உள்ள கட்சிகளைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்கள் புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் பொருத்தமான விதங்களில் கையாளத்தக்க ஓரினமா? என்ற கேள்வியே எழுகிறது.
-நிலாந்தன்-