திருக்கேதீஸ்வர யாத்திரிகள் தங்கும் இடம் மீள அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டாம் என கோரி திருகேதீஸ்வர கிராம மக்கள், மன்னாரில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரம் கிராம அபிவிருத்திச் சங்கம், சிவபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த கிராம மக்களுடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் இறுதியாக மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் ஆகியோருக்கு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளதோடு, தமக்கான உரிய தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் பொது மக்கள் மற்றும் யாத்திரிகளின் நன்மை கருதி உரிய அனுமதியுடன் அமைக்கப்பட்டு வந்த குறித்த தங்குமிடத்தின் பணிகள் அண்மையில் எள்ளுப்பிட்டி பகுதியை சேர்ந்த சில மக்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டு அமைக்கப்பட்டு வரும் இந்த யாத்திரிகள் தங்குமிடம் மீள அமைக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டாம் என கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) கிராம மக்கள், மகஜரை கையளித்தனர்.
அத்துடன், குறித்த பகுதியில் யுத்தத்திற்கு முன்னர் யாத்திரிகர் மடம் ஒன்று காணப்பட்டதாகவும் யுத்தத்தின் போது அழிவடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், குறித்த அபிவிருத்தி பணியை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை என்பதை தெரிவித்துள்ளதோடு, இவ்வாறான இடையூறுகளை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம் என திருக்கேதீஸ்வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.