புடின் உக்ரைனுக்கு வன்முறை அலையை கொண்டு வந்ததாக, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய தாக்குதலை, புடினின் அருவருப்பான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முயற்சி என்றும் விபரித்துள்ளார்.
தனது தொலைக்காட்சி அறிக்கையில், ரஷ்யர்களிடம் நேரடியாக உரையாற்றிய ஜோன்சன், இது உங்கள் பெயரில் செய்யப்படுகிறது என்பதை தன்னால் நம்ப முடியவில்லை’ என கூறினார்.
உக்ரேனியர்களிடம் நேரடியாக உரையாற்றிய ஜோன்சன், ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.
சுதந்திரத்தின் சுடர் உக்ரைனில் மீண்டும் பிரகாசமாக எரியும் என்று எனக்குத் தெரியும். ரஷ்ய சர்வாதிகாரி உக்ரேனியர்களின் தேசிய உணர்வை அடக்குவார் என்று நான் நம்பவில்லை’ என கூறினார்.
மேலும், ஐரோப்பாவில் உக்ரைனுக்கு உதவ தற்காப்பு ஆயுதங்களை அனுப்பிய முதல் நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று எனக் கூறினார்.
மற்ற நட்பு நாடுகளும் இதைப் பின்பற்றியுள்ளன. மேலும் வரும் நாட்களில் பிரித்தானியா இன்னும் பலவற்றைச் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ‘இது உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இது ஒரு நாட்டின் சொந்த எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பற்றியது. எங்கள் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் நிச்சயமாக எல்லாவற்றையும் செய்வோம்.’ என்றும் கூறினார்.