ரஷ்யா மீது விதிக்கப்படும் எந்தவொரு பொருளாதாரத் தடையும் இந்திய நலனில் தாக்கம் செலுத்தும் என வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் -ரஷ்ய போர் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ” ரஷ்யா மீது இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சில தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகள் நமது நலன்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
எந்தவொரு தடைகளும் இந்தியா-ரஷியா உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதை ஒப்புக்கொள்வது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்கள் வெளியேறவும், பாதுகாப்பான இடங்களை அடையவும் சாலைகள் வரையப்பட்டுள்ளன.
உக்ரைனின் நிலைமை குறித்து விமானப் போக்குவரத்து திறனைப் பராமரிக்க, பாதுகாப்பு அமைச்சகத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
எங்கள் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கான செயல்பாட்டில் நாங்கள் பல்கலைக்கழகங்கள், மாணவர் ஒப்பந்த தாரர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.