இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கரையோரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, இந்தோனேசியாவின் பிஎம்கேஜி புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி அல்லது பெரிய பேரழிவுக்கான உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
கடலுக்கு அடியில் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா வரையிலும், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள படாங் மற்றும் ரியாவ் மாகாணத்தின் பெகன்பாரு ஆகிய நகரங்களிலும் வலுவாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.