வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்.சிறைச்சாலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இரண்டு அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கைதிகளின் உறவினர்களும் இன்று முன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்களை ஆளுநர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது சிறைச்சாலையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுவதாக ஆளுநர் தெரிவித்ததாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நாளை காலை ஆளுநரின் செயலாளருடன் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் உறுப்பினர்களும் யாழ்.சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதிகளுடன் கதைப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இன்றைய ஆளுநரின் வாக்குறுதியை ஏற்று ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்திருந்த தாம் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு வீடு செல்லுவதாக தெரிவித்துள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் நாளை காலை சிறைச்சாலைக்கு சென்று தமது உறவினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.