பொலிஸ் ஊடகப்பிரிவு சுயாதீனமாக செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த இரண்டு வார காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் பன்குளம் மொறவௌ பிரதேச செயலக பிரிவில் யானையொன்று உயிரிழந்துள்ளது.
இது துரதிஷ்டவசமானது. இவ்விடயம் குறித்து வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அவரிடம் தொலைப்பேசியில் உரையாடினேன். இச்சம்பவம் குறித்து ஆராய்வதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரே இடத்தில் 14 நாட்கள் இருந்த நிலையில் அந்த யானை உயிரிழந்துள்ளது. யானையின் தந்தம் வெட்டப்பட்டுள்ளதாகவும், யானைக்கு உரிய மருத்து சிகிச்சையளிக்கப்படவில்லை எனவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
காலநேரம் போதாத காரணத்தினால் இவ்விடயம் குறித்து அதிகம் பேசமுடியவில்லை. இவ்விடயத்தை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன். இதனை அமைச்சர் பெற்றுக்கொள்ள வேண்டும். தாளம் என்ற சூழல் அமைப்பு இச்சம்பவம் குறித்து பல விடயங்களை சான்றுப்படுத்தியுள்ளது.
அதற்கு மேலதிகமாக யானை – மனித மோதலுக்கு யானை வேலி அமைக்கும் கொள்கையுடன் அரசாங்கம் வந்தது. ஒரு இலட்சம் கிலோமீற்றர் யானை வேலி அமைப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதுவரையில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை வேலி அமைப்பதற்கு 24 மில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. யானை வேலி அமைக்காமல் யானை – மனித மோதலுக்கு தீர்வு காணவும் முடியாது. வனஜீவராசிகளை பாதுகாக்கவும் முடியாது.
அதேபோல் தற்போது மின்விநியோகம் தடைப்படும்போதும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் யானை வேலிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகளுக்குமான மின்விநியோகம் துண்டிக்கப்படுகிறதாக குறிப்பிடப்படுகிறது.
விசேடமாக புல்லுமலை பிரதேசத்தில் பதுளை பகுதியில் யானை மின்வேலிகளுக்காக மின்விநியோகம் துண்டிக்கப்படுகிறது. மின்விநியோகம் துண்டிக்கப்பட வேண்டுமாயின் பகல் பொழுதில் துண்டித்து இரவு வேளைகளில் துண்டிக்காமலிருக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
வெள்ளை வேன் விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் நான் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட விடயம் குறித்து பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையில் கவலைக்குரியது, பொலிஸ் ஊடகப்பிரிவு சுயாதீனமாக செயற்பட வேண்டும்.
சிவில் செயற்பாட்டாளர் செஹான் நாலக கடத்த முற்பட்ட போதும் வெள்ளை வேன் போன்ற வேனும் அம்பாறை மாவட்டத்தில் இளைஞர் ஒருவரை கடத்த முற்பட்ட போதும் வெள்ளை வேன் போன்ற வேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதையே குறிப்பிட்டோம்.
இவ்விடயம் குறித்து பொலிஸ் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சமூக வலைத்தளங்களின் பதிவேற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊடக அறிக்கை விடுவது எந்தளவிற்கு சுயாதீனமானது.
ஜனாதிபதியை சந்திக்க நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகம் சென்றிருந்த போது அதற்கு அனுமதி வழங்கப்படாததை தொடர்ந்தே போராட்டத்தில் ஈடுப்பட்டோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை புகைப்படம் எடுக்கும் அரச புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பு பிரதேசத்தில் எந்தவகையில் செயற்படுவார்கள் என்பது தெளிவாகின்றது.
ஜனாதிபதியை எந்நேரமும் சந்திக்க முடியும் என தற்போது குறிப்பிடுகிறார்கள். நாங்கள் முறையாக அனுமதி பெறவில்லையாம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியை சந்திக்க பலமுறை கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு இதுவரை ஜனாதிபதி பதலளிக்கவில்லை.
ஜனாதிபதி ஜனாதிபதி செயலகத்தில் உள்ளதை அறிந்து கொண்டதன் பின்னரே அவரை சந்திக்க ஜனாதிபதி செயலகம் சென்றோம். நாம் வருவதை அறிந்துக்கொண்டதன் பின்னர் அவர் புகையிரத பெட்டிகளை காணசென்று விட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எம்மால் எந்நேரமும் நாடாளுமன்றில் சந்திக்க முடியும். தமிழ் மக்களை பிரிநிதித்துவப்படுத்தும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. அவர் தமிழர்களின் ஜனாதிபதி அல்ல என்ற நோக்கில் உள்ளாரா என்று என்ன தோன்றுகிறது.
எமது செயற்பாடு வெட்கமடைய கூடியதாம் நாட்டில் மின்துண்டிப்பு தீவிரமடைந்துள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இருளில் கல்வி கற்கிறார்கள் இதற்கே வெட்கப்பட வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.