உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மீது மேற்கத்திய நாடுகள் தனிப்பட்ட தடைகளை விதித்துள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள இவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் முடக்கப்படும், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பயணத் தடை விதிக்கப்படும்.
அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய இரண்டாவது நாளில் இந்த அறிவிப்பு வெளிவந்தது.
தலைவர்களுக்கு எதிரான இத்தகைய தண்டனை நடவடிக்கைகள் அரிதானவை. உதாரணமாக, சிரியா மற்றும் பெலாரஸ் ஜனாதிபதிகள் மீது மட்டுமே ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்கா, தனது பங்கிற்கு, சிரியாவின் பஷர் அல்-அசாத் தவிர, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் கனடாவில் புடின் மற்றும் லாவ்ரோவ் ஆகியோரின் சொத்துக்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதும், பொருளாதாரத் தடைகள் என்ன நடைமுறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
வெளியுறவுக் கொள்கையில் மேற்குலகின் முழுமையான இயலாமையை அவர்கள் காட்டுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.