ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு மத்தியில், சீனாவின் வடமேற்கு மாகாணமான ஷின்ஜியாங்கைச் சேர்ந்த கசாக் இனத்தவர் ஏனைய உக்ரேனிய அகதிகளுடன் போலந்துக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எர்சின் எர்கினுலி என்ற சீன குடிமகன் உக்ரைனில் பல மாதங்களாக குடியேற்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை சீனாவிற்கு திருப்பி அனுப்பினால் சிறையில் அடைக்கப்படலாம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்பதன் காரணமாக உக்ரேனிய அதிகாரிகளால் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.
முறையான ஆவணங்கள் இல்லாமல் போலந்திற்குள் செல்ல முயன்றமைக்காக எர்கினுலி முதன்முதலில் ஒக்டோபர் 2020இல் உக்ரேனிய எல்லைக் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், அவரை மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்துவதற்கான கீழ் நீதிமன்றத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து, அந்த ஆண்டு டிசம்பரில் மேற்கு நகரமான லிவிவ்வில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், ஓகஸ்ட் 2021இல், உக்ரேனிய-ஸ்லோவாக் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற எர்கினுலியை ஸ்லோவாக் எல்லைக் காவலர்கள் தடுத்து நிறுத்தி அவரை உக்ரேனுக்கு திருப்பி அனுப்பினர், அங்கு அவர் கைது செய்யப்பட்டு குடியேற்ற மையத்தில் வைக்கப்பட்டார்.
ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான உக்ரேனிய அகதிகளுடன் எர்கினுலி போலந்திற்குள் நுழைந்துள்ளார். ரஷ்ய ஆயுதப் படைகள் உக்ரேன் மீதான தாக்குதலைத் தொடர்ந்ததால் தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான அகதிகளுடன், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் தான் இப்போது போலந்து எல்லையில் இருப்பதாக எர்கினிலி கூறியுள்ளார்.
ஷின்ஜியாங்கில் உய்குர்களுக்கு அடுத்தபடியாக துருக்கிய மொழி பேசும் பழங்குடி சமூகமாக கசாக் மக்கள் உள்ளனர்.
இப்பகுதி கிர்கிஸ், தாஜிக் மற்றும் டங்கன்கள் என்றும் அழைக்கப்படும் ஹுய் இன மக்களின் தாயகமாகவும் உள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், பல உய்குர்கள், கசாக்ஸ் மற்றும் ஷின்ஜியாங்கின் பிற பெரும்பான்மையான முஸ்லிம், பூர்வீக இனக்குழுக்களின் உறுப்பினர்கள் தடுப்புக்காவலுக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஷின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியானது சீனாவின் மிகப்பெரிய மாகாணமாகும், இது பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த 25 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது, ஆனால் அவர்களில் 43சதவீதம் பேர் உய்குர்கள், அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, இந்த இனக்குழுக்களின் 2 மில்லியன் உறுப்பினர்கள் சீனத் தடுப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த தடுப்பு மையங்களை ‘மறு கல்வி மையங்கள்’ என்று சீனா குறிப்பிடுகிறது.
ஒகஸ்ட் 2018 இன் இறுதியில், இனப் பாகுபாடு ஒழிப்புக்கான ஐ.நா குழுவின் வல்லுநர்கள், சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் ‘மறு-கல்வி முகாம்கள்’ என்று அழைக்கப்படும் இடங்களில் ஒரு மில்லியன் இன உய்குர்கள் வரை இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அண்டனி பிளிங்கன், சீன அரசாங்கம் ஷின்ஜியாங்கில் பெரும்பான்மையான முஸ்லிம் உய்குர்கள் மற்றும் பிற சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறது’ என்று கூறினார்.