ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்க்க, உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
ரஷ்ய துருப்புக்கள் தொடர்ந்து தலைநகர் கீவ் மீது உக்கிர தாக்குதலை தொடுத்து வருகின்ற நிலையில், ஜோ பைடனின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பைடன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனியர்களை திறந்த கரங்களுடன் வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 13.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஓர் அவசர ஆணையில் ஜோ பைடன் கடந்த வார இறுதியில் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், பிரிவினைவாத பிராந்தியமான டொனியட்ஸ்க் மீது உக்ரைனிய ஏவுகணை தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை நிறுவனங்களை இலக்கு வைப்போம் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மேலும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் உக்ரைனியர்கள் மற்றும் அருகில் வசிக்கும் மக்களை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது.