வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக மனிதாபிமான அடிப்படையிலான நிவாரணமே ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதென்ற அறிவிப்பு என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அதனை உயிர்களின் விலையாகவோ, போராட்டத்தனை மலினப்படுத்தும் செயற்பாடாகவோ உறவுகளின் உணர்வுகளை கொச்சப்படுத்தும் நோக்கமாகவோ கொண்டுவரப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
காணாமலாக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் ஒரு இலட்சம் ரூபாயை வழங்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது,
இந்நிலையில், குறித்த அமைச்சரவை முடிவுக்கு எதிராக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் மிகக் கடுமையான எதிர்பை வெளியிட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் குறித்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, அரசாங்கத்தின் தற்போதைய நிலையில் இந்த தொகையைவிட அதிகமானதை வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்தார்.
இதேவேளை சுயாதீனக் கட்டமைப்பான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான அலுவலகத்திற்கான நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட வசதிகளை நீதி அமைச்சு வழங்கி வருகின்றது என்றும் கூறினார்.
அதேநேரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தொழிற்பயிற்சி, சுயதொழில் ஆரம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி தொழில் புரிவேராக உருவெடுப்பத்கு உதவிகளை வழங்குவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.