1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முதற்தடவையாக மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. அண்மைய காலத்தில் தெற்காசிய நாடொன்று முகங்கொடுத்த மிக மோசமான நிலைமை இதுவாகவுள்ளது.
இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடு நெருக்கடியான நிலைமையில் உள்ளதையும், மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதையும் ஏற்றுக்கொண்டதோடு நிலைமைகளை முகங்கொடுப்பதற்காக தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்துள்ளதாக தனது உரையில் கூறினார்.
அத்துடன், ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் என்றும், கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளதாகவும் அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 03 பில்லியன் டொலர்களும், வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 02 பில்லியன் டொலர்களும், கிடைக்கவுள்ளமையால் வர்த்தகப் பற்றாக்குறை 05 பில்லியன் டொலர்களாக குறைவடையவுள்ளதாகவும் கூறினார்.
எனினும், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர்கள் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டி உள்ளதாகவும் அப்போது 11.9 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை ஏற்படவுள்ளதாகவும் ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கு மொத்தம் 9.4 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது என்றும் இதனால் கடுமையான நிலைமைகளுக்கு முககொடுப்பதற்கு தயாராக இருக்குமாறும் பொதுமக்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காது உயர்வடைந்துள்ள நிலையிலும், மருந்துப்பொருட்கள், எரிபொருட்கள், என்று தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளமையாலும் மிகுந்த நெருக்கடியில் மக்கள் உள்ளனர். அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளிலும் உள்ளர்.
இதனைவிடவும், 26வருடங்களுக்கு பின்னராக ஏழரை மணிநேர மின்வெட்டு அமுலில் இருப்பதால் தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் செயற்படுவதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன.
இந்நிலைமைகளை சமாளிப்பதற்காக, இந்தியா, உடனடியாகவே நடவடிக்கைகளை எடுத்திருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியா 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை அளிப்பதாக உறுதியளித்தது.
அந்த உறுதிப்பாட்டிற்கமைய 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் பரிமாற்று ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டது. இது, அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்காக பயன்படுத்தப்பட்டது.
அதற்கடுத்தபடியாக, உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருட்களின் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்கப்பட்டது. தொடர்ந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
எனினும், இலங்கையின் நிலைமைகள் மோசமடைந்து செல்ல ஆரம்பித்த நிலையில், இதுவரை காலமும் கடைபிடித்துவந்த கொள்கையை மாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்திடம் செல்லத் தீர்மானித்தது.
அத்துடன், இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏன்-மெரீ கல்டே-வூல்ஃப் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் பெரிடானுஸெட்யாவான் ஆகியோரை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான குழுவினர் அவரசரமாக உதவி அளிக்குமாறு கோரியுள்ளனர்.
இதனை, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் உறுதிப்படுத்தியதோடு, இலங்கையின் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து நிலைமைகளை கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையின் அந்நியச் செலாவணியானது கடந்த பெப்ரவரி மாதம் 2.3பில்லியன் டொலர்களாக இருந்துள்ளது.
எனினும், இந்த ஆண்டு 6.9பில்லியன் டொலர்கள் கடனைச் செலுத்த வேண்டியுள்ளதோடு மொத்தக் கடனாக 51 பில்லியன் டொலர்கள் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலைமைகளைச் சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முதலில் சீனாவை நாடியிருந்தபோதும் பீஜிங்கிடமிருந்து உத்தியோக பூர்வமான பதில்கள் எவையும் கிடைத்திருக்கவில்லை.
இதனால் நிலைதடுமாயிறிருந்த இலங்கை உடனடியாக அயல் நாடான இந்தியாவை மீண்டும் அனுகியது.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ புதுடில்லிக்குச் அவசரமாக பயணம் செய்தார். அங்கு பிரதமர் நரேந்திரமோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், மற்றும் வெளிவிவகார செயலாளர் ஷிரிங்லா ஆகியோரைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தினார்.
இதன் பயனாக, இந்தியா மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டது. அத்துடன் உடனடியாகவே, ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிக்கலவும், இந்திய ஸ்ரேட் வங்கியின் துணை பொது முகாமையாளர் ஸ்ரீ புஷ்கர் ஜஹாவும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக, இலங்கைக்கு தேவையான கோதுமை மா, சீனி மற்றும் அரிசி உட்பட மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் என்பதோடு எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா ஏற்கனவே வழங்கிய 500 மில்லியன் டொலர்கள் 750 மில்லியன் டொலர்களாக அதிகரிக்குமாறும் இலங்கை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ‘அயலகத்திற்கு முன்னுரிமை’ எனும் கொள்கைக்கமைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-யே.பெனிற்லஸ்-