கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இயல்புநிலை திரும்பி அமைதி நிலவினால் மட்டுமே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு சீரடையும்’ என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி’யிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி’உடன் டெல்லியில் இடம்பெற்ற மூன்று மணிநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு இராணுவ வீரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருப்பதற்கு, படை விலக்கல் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
அத்துடன், எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவுபடுத்துவது தொடர்பாக சீன அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விரைவில் சீனாவுக்குத் திரும்பி கல்வி கற்பதற்கான பாகுபாடற்ற நடைமுறைகளை சீன அரசாங்கம் மேற்கொள்ளும் என தான் நம்புவதாகவும் முறையான சந்தை வாய்ப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் சீன அமைச்சரிடம் தான் வலியுறுத்தியதாக எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
பாகிஸ்தானில் இருந்து எழும் பயங்கரவாத அச்சுறுத்தல், ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் மற்றும் உக்ரைன் விவகாரத்தில் இருதரப்பின் அணுகுமுறை குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.