இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, மீனவர்களின் குடும்பத்தினர் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மீனவ மற்றும் மீனவ பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 1200க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக இந்த மீன்பிடி தொழிலை சார்ந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை மற்றும் வருவாய் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது,
உடனே மத்திய மாநில அரசுகள் மீனவரின் மீது அக்கறை கொண்டு உடனடியாக அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு ராமேஸ்வரம் மீனவ சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டது.
கடந்த புதன்கிழமை காலை ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் அன்றிரவு தனுஷ்கோடிக்கு இரனைதீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 16 மீனவர்களை கைதுசெய்ததோடு, அவர்களது 2 மீன்பிடி விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.