உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் போரை நிறுத்துவது தொடர்பாக, இன்று (திங்கட்கிழமை) துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இரு தரப்பிலும் பலத்த உயிர் மற்றும் பொருட் சேதங்கள் மட்டுமன்றி உலகளவிலும் இந்த போரின் தாக்கம் எதிரொலித்துள்ள நிலையில், இப்பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
போர் நிறுத்தம் தொடர்பாக முன்னதாக பெலராஸில் இதுவரை நடைபெற்ற 3 கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதனைத்தொடர்ந்து துருக்கியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா நடத்திய பேச்சுவார்த்தையும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில், தற்போது போரை நிறுத்துவது தொடர்பாக துருக்கியில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதனை உக்ரைன் அமைச்சர் டேவிட் அரகாமியா சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தினார்.
நாட்டு மக்களிடம் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி, துருக்கியில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், உக்ரைனின் முன்னுரிமைகள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகும். ஆகவே, உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.