மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி வரும் வடகொரியா, தனது ஆயுதக் களஞ்சியத்தை நவீனமயமாக்கும் முயற்சியில் கூடுதல் ஏவுகணை சோதனைகளை நடத்தலாம் அல்லது அணு ஆயுதத்தை விரைவில் சோதிக்கலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.
எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் நாட்டின் தாக்குதல் திறனை வளர்ப்பதற்கான உறுதியை கிம் வெளிப்படுத்தியதாக, கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
‘அதிகமான தாக்கும் திறன்கள், யாராலும் தடுக்க முடியாத அமோகமான இராணுவ பலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் போது மட்டுமே, ஒரு போரைத் தடுக்க முடியும். இதன்மூலமே நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியும், மேலும் ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்தவும் முடியும்’ என கிம் கூறியதாக கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், வட கொரியா இன்னும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை உருவாக்கும் என்று கிம் கூறினார். மேலும் தனது நாடு அணுவாயுதப் போரைத் தடுப்பதை இன்னும் தீவிரமாகச் செய்யும் என்று அவர் எதிர்பார்த்தார் என கேசிஎன்ஏஷஷ கூறியுள்ளது.
வடகொரியா கடந்த வியாழக்கிழமை நடப்பு ஆண்டின் 12ஆவது ஆயுத சோதனையை நடத்தியது. புதிதாக உருவாக்கப்பட்ட, நீண்ட Hwasong-17 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அறிமுகப்படுத்தியது. இது அமெரிக்காவில் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமைக் கொண்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள நீரில் தரையிறங்குவதற்கு முன், Hwasong-17 அதிகபட்சமாக 6,248 கிமீ (3,880 மைல்கள்) உயரத்திற்கு பறந்து 67 நிமிடத்தின் போது 1,090 கிமீ (680 மைல்கள்) பயணித்ததாக வடகொரியா கூறியுள்ளது.
செங்குத்தான சோதனைக் கோணத்தை விட தட்டையான நிலையான பாதையில் ஏவுகணை ஏவப்பட்டால், அது 15,000 கிமீ (9,320 மைல்கள்) வரை பறக்கும். இது அமெரிக்காவின் நிலப்பகுதி மற்றும் அதற்கு அப்பால் எங்கும் சென்றடைய போதுமானது என்று வெளிப்புற நிபுணர்கள் தெரிவித்தனர்.
சுமார் 25 மீ (82 அடி) நீளம் கொண்டதாக நம்பப்படுகிறது, Hwasong-17 என்பது வடக்கின் மிக நீண்ட தூர ஆயுதம் மற்றும் சில மதிப்பீடுகளின்படி, உலகின் மிகப்பெரிய மொபைல் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பு ஆகும்.