இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவர், கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இந்தநிலையிலேயே இன்று காலை அவர் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினை சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் காலங்களிலும் இந்தியா, இலங்கைக்கு உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர், இதன்போது உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று பிற்பகல் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரினை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.