ரூபிள்களில் செலுத்த மறுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் அச்சுறுத்தலை ரஷ்யா இரட்டிப்பாக்கியுள்ளது.
ஏற்கனவே தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிள்களை கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறியிருந்தார்.
ஆனால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விதி இருப்பதால், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என புடின் எச்சரித்துள்ளார்.
இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிள்களாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புடின் கூறுகையில், ‘யாரும் எங்களுக்கு இலவசமாக தரவில்லை. நாங்கள் தொண்டு செய்யவும் போவதில்லை. எனவே ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும்’ என கூறினார்.
அத்துடன், ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று (வியாழக்கிழமை) ஒரு ஆணையில் கையெழுத்திட்டார். இது நட்பற்ற நாடுகளிலிருந்து இயற்கை எரிவாயு வாங்குபவர்கள் ரஷ்யாவின் மூன்றாவது பெரிய வங்கியான காஸ்ப்ரோம்பேங்கில் கணக்கு வைத்திருக்க வேண்டும் மற்றும் ஒப்பந்தங்களை ரூபிள்களில் தீர்க்க வேண்டும். இது இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
ரஷ்யாவின் எரிவாயுவை பெரிய அளவில் நம்பியுள்ள ஜேர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த செய்தி பெரும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.