திட எரிபொருளில் இயங்கும் ரொக்கட்டில் உளவு செயற்கைக்கோளை ஏவி தென் கொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இதன் மூலம் விண்வெளி கண்காணிப்பில் தென் கொரியா முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளதாக தென்கொரியா பெருமைக் கொண்டுள்ளது.
இந்தச் சோதனை தென் கொரிய இராணுவ அமைச்சர் சூ வூக் முன்னிலையில் தலைநகர் சீயோலில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேன் என் எனும் பகுதியில் நடத்தப்பட்டது.
இது குறித்து தென் கொரிய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது நமது இராணுவத்தில் ஒரு மைல்கல். அதுமட்டுமல் விண்வெளி ஆராய்ச்சிகளில் சுதந்திரமான முயற்சி. இதனால் நமது கண்காணிப்பு திறனும் அதிகரிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தென் கொரியாவுக்கு தனியாக உளவு செயற்கைக்கோள்கள் இல்லை. அமெரிக்காவின் செயற்கைக்கோள் தரவுகளையே பயன்படுத்தி வந்தது. இந்நிலையில், இந்த சோதனையை தென் கொரியா வெற்றியாகக் கருதுகிறது.
திரவ எரிபொருள் ரொக்கெட்டுகளை ஒப்பிடும் போது திட எரிபொருள் ரொக்கெட்டுகளை தயாரிப்பது எளிது. அதன் கட்டமைப்பு அதிக சிக்கல் இல்லாதது. அதேபோல், அதன் உற்பத்தி செலவும் குறைவு. அதை விண்ணில் ஏவுவதற்கான நேரமும் ஒப்பீட்டு அளவில் குறைவு. இதனாலேயே முதன்முறையாக முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட எரிபொருள் ரொக்கெட் மூலம் உளவு செயற்கைக்கோளை ஏவியுள்ளதை தென் கொரியா முக்கியமானதாகக் கருதுகிறது.