வீட்டில் இருந்தவாறே இந்த ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக நாளை எதிர்ப்பை வெளியிடுங்கள். வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கிடுங்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலவாக்கலையில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் மின்சாரம் இல்லை, வீட்டிலே உணவு பொருட்கள் இல்லை, எரிபொருள் விலை, எரிவாயும் இல்லை.
பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. இவை தொடர்பில் தமது உள்ளக்குமுறல்களை நாளை வெளிப்படுத்துவதற்கு மக்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் மக்கள் எழுச்சிக்கு பயந்து, ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
தடையையும்மீறி போராடுவோம் என மக்கள் அழைக்கின்றனர். ஆனால் மக்களை பாதுகாப்பதே தலைமைகளுக்கு அழகு. அந்தவகையில்தான் நாம் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம்.
எனினும், வீட்டில் இருந்து எதிர்ப்பை வெளியிடுங்கள். வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கவிடங்கள். சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யவும்.
மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களுக்கு அரசு அஞ்சியுள்ளது. அதுமட்டுமல்ல ஊடகவியலாளர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளது. அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, ஜனநாயகத்தை நசுக்க முற்படும் இந்த அரசை விரட்டியடிப்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.