12ஆவது மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், அவுஸ்ரேலிய அணி ஏழாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், அவுஸ்ரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அலிசா ஹீலி 170 ஓட்டங்களையும் ரேச்சல் ஹெய்ன்ஸ் 68 ஓட்டங்களையும் மூனி 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், அன்யா ஷ்ரப்சோல் 3 விக்கெட்டுகளையும் எக்லெஸ்டோன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 357 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 43.4 ஓவர்கள் நிறைவில் 285 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், அவுஸ்ரேலிய அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
இதற்கு முன்னதாக 1978, 1982, 1988, 1997, 2005, 2013ஆம் ஆண்டுகளில் அவுஸ்ரேலிய மகளிர் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதுதவிர ஐந்து ரி-20 உலகக்கிண்ணத்தையும் அவுஸ்ரேலிய அணி வென்றுள்ளது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நடாலி ஸ்கிவர் ஆட்டமிழக்காது 148 ஓட்டங்களையும் டாமி பியூமண்ட் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அலனா கிங் மற்றும் ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மேகன் ஷட் 2 விக்கெட்டுகளையும் தஹ்லியா மெக்ராத் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆஆட்டநாயகியாகவும் தொடர் நாயகியாகவும் அவுஸ்ரேலிய அணியின் அலிசா ஹீலி தெரிவுசெய்யப்பட்டார்.