நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி நேற்று முன்தினம் தம்மைச் சந்தித்தபோது இந்த அழைப்பினை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தங்களை மீண்டும் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்காத பட்சத்தில் தாங்கள் அவ்வாறு செய்ய முன்வந்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது மற்றவர்களுடன் தானும் இதனையே கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலைமை தொடர்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பதவிகளை வகித்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகள் அண்மையில் பறிக்கப்பட்டன.
அத்தோடு, அமைச்சருக்கான கடமைகளில் இருந்து விலகியிருக்க வாசுதேவ நாணயக்காரவும் தீர்மானித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.