சீனாவின் ஒரு பிராந்தியமாக கருதப்படும் ஹொங்கொங்கின் தலைவர் கேரி லாம், இரண்டாவது முறையாக பதவியை தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு சீனாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 64 வயதான கேரி லாம், தலைமை நிர்வாகியாக செயற்பட்ட போது, பாரிய ஜனநாயக சார்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அதிக சீனக் கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்தன.
இந்த சர்ச்சைக்குரிய பதவிக்காலத்திற்குப் பிறகு இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்திப்பின் போது, தனது முடிவை சீனா ஏற்றுக்கொண்டதாக கூறினார்.
சமீப காலங்களில் தனது அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்ட போதிலும், ஒரு வருடத்திற்கு முன்பு இரண்டாவது முறையாக பதவியேற்க வேண்டாம் என்ற தனது விருப்பத்தை சீனாவிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கேரி லாம், பதவியிலிருந்து பின்வாங்கி தனது குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக கூறினார்.
ஹொங்கொங்கின் தலைமைச் செயலர் ஜான் லீ, கேரி லாமுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
அடுத்த மாதம் புதிய தலைமை நிர்வாகியை தேர்வு செய்ய உள்ளனர். இரண்டாவது மிக உயர்ந்த அதிகாரியான லீ, இந்த வாரம் தலைமைப் பதவிக்கான தனது வேட்புமனுவை முன்வைக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் பொலிஸ்துறை அதிகாரியான லீ, 2019ஆம் ஆண்டு போராட்டங்களின் போது முன்னணி பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்தார். ஹொங்கொங்கில் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் பெய்ஜிங்கின் நோக்கத்தின் அடையாளமாக, அவர் கடந்த ஆண்டு தலைமைப் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.