பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 220 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா முன்னிலைப் பெற்றுள்ளது.
டர்பன் மைதானத்தில் கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 367 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெம்பா பவுமா 93 ஓட்டங்களையும் டீன் எல்கர் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், காலீல் அஹமட் 4 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் 3 விக்கெட்டுகளையும் எபொட் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமதுல் ஹசன் ரோய் 137 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்மர் 4 விக்கெட்டுகளையும் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஒலீவியர் மற்றும் முல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதன்பிறகு 69 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக டீன் எல்கர் 64 ஓட்டங்களையும் ரெயான் ரெக்கொல்டன் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் மற்றும் எபொட் ஹொசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 53 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 220 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நஜ்முல் ஹொசைன் சந்தோ 26 ஓட்டங்களையும் டஸ்கின் அஹமட் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளையும் சிமோன் ஹார்மன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.