நெதர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றி, நெதர்லாந்து அணியை வயிட் வோஷ் செய்தது.
ஹமில்டனில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 333 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வில் யங் 120 ஓட்டங்களையும் மார்டின் கப்டில் 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில், ப்ரெட் க்ளாசென், வென் பீக், க்ளேடொன் ப்ளோயிட் மற்றும் ஆர்யன் டுத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 334 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணி, 42.3 ஓவர்கள் நிறைவில் 218 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீபன் மைபர்க் 64 ஓட்டங்களையும் லோகன் வன் பீக் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மெட் ஹென்ரி 4 விக்கெட்டுகளையும் டொக் பிரஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீஸன், மைக்கேல் பிரேஸ்வெல், கொலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் நியூஸிலாந்தின் வில் யங் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்தப் போட்டியுடன் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஸ் டெய்லர் ஓய்வுப் பெற்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.