அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிகொள்ளவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கரு பரணவிதான தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெறும் எதிர்க்கட்சிகளின் வேலைத்திட்டமாக மாறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க ராஜபக்ச உறுப்பினர் எவரையும் உள்ளடக்காத இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாரவது இடைக்கால அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயங்கினால், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதனை ஏற்றுவழிநடத்த தயாராக இருப்பதாகவும் கரு பரணவிதான தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் கையொப்பமிடத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே அதனை வெற்றியடையச் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என கரு பரணவிதான கேட்டுக்கொண்டுள்ளார்.