உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 51ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனின் இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய விசாரணை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனரக ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ரஷ்ய வான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த உக்ரைனின் 2 இராணுவ ஹெலிகொப்டர்கள், பிரையன்ஸ்க் (Bryansk) பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடங்களின் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய விசாரணை குழு தெரிவித்துள்ளது.
ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிகாரபூர்வமாக ரஷ்யா குற்றம்சாட்டியது இதுவே முதல் முறையாகும்.
எவ்வாறிருப்பினும் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் நிராகரித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியது முதல் கார்கிவ் பகுதியில் குறைந்தது 503 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாகாண ஆளுநர் ஓலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.