சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்ட சம்பவங்களுக்கு சௌதி அரேபியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் நேற்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டது.
அதில், ‘முஸ்லிம்களையும் குரானையும் இழிவு படுத்தும் வகையில் வேண்டுமென்றே செய்யப்பட்ட இச்செயல்களுக்கு சௌதி அரேபியாவின் கண்டனத்தை வெளியுறவுத் துறை பதிவு செய்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘சௌதி அரேபியா உரையாடல், சகிப்புத்தன்மை, சகவாழ்வு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அத்துடன், வெறுப்பு, தீவிரவாதம் மற்றும் அனைத்து மதங்கள் மற்றும் புனித தலங்களை அவமதிப்பதையும் எதிர்க்கிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்ட் லைன் இயக்கத்தின் தலைவரும் டேனிஷ்- சுவீடன் அரசியல்வாதியும் வழக்கறிஞருமான ரஸ்மஸ் பலுடன், ‘இஸ்லாத்தின் புனித நூலைத் தாம் எரித்ததாகவும் அதை மீண்டும் செய்யப்போவதாகவும்’ கூறினார்.
இதனைத்தொர்ந்து, அங்கு போராட்டம் வெடித்தது. ஞாயிற்றுக்கிழமை கிழக்கு நகரமான நார்ஷாபிங்கில் தொடர்ச்சியான கலவரங்கள் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன, இதில் கலவரக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயமடைந்தனர். குறைந்தது 17 பேர் கைது செய்யப்பட்ட அதேவேளையில் பல வாகனங்கள் எரிக்கப்பட்டன.