அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கும் 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக மீண்டும் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
சபாநாயகர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் பொதுநிர்வாக அமைச்சர் தினேஸ் குணவர்தன, கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவித்தார் என மனோ கணேசன் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மிகவும் பொறுப்பான அரசாங்கத்தை பொதுமக்கள் கோரிவருகின்ற நிலையில் இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என பிரதமர் ராஜபக்ஷ நம்புவதாக பிரதமர் ஊடகப்பிரிவு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி தொடர்ச்சியான மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த கோரிக்கைகளை மீறி நேற்று புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.