மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட சகலதுறை வீரரான கெய்ரன் பொலார்ட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணியின் தலைவரான பொலார்ட், தனது ஓய்வுக் குறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,
‘கவனமான ஆலோசனைக்குப் பிறகு, நான் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். பல இளைஞர்களைப் போலவே, நான் 10 வயது சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே மேற்கிந்திய தீவுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது எனது கனவாக இருந்தது. மேலும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டை இரண்டிலும் (ஒருநாள் மற்றும் ரி-20) பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்.
2007ஆம் ஆண்டு எனது குழந்தைப் பருவ ஹீரோ பிரையன் லாராவின் தலைமையில் நான் சர்வதேச அரங்கில் அறிமுகமானதை நான் இன்னும் தெளிவாக நினைவுகூருகிறேன். அந்த மெரூன் நிறங்களை அணிந்துகொண்டு, அத்தகைய ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடுவது எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம்’ என குறிப்பிட்டுள்ளார்.
‘கடந்த பதினைந்து ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் மற்றும் ரி-20 அணிகளுக்கு கீய்ரன் பொல்லார்ட் செய்த சிறந்த சேவைக்காக மேற்கிந்திய தீவுகள கிரிக்கெட் சபையில் உள்ள அனைவரின் சார்பாகவும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மேற்கிந்திய தீவுகள கிரிக்கெட் சபையின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 35 வயதாகும் பொல்லார்ட், 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் அறிமுகமானதில் இருந்து இதுவரை 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 26.01 சராசரியில் 2706 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் மூன்று சதங்கள் 13 அரைசதங்கள் அடங்கும். அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை 119 ஆகும்.
மேலும், 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாகும்.
2008ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ரி-20 போட்டியில் அறிமுகமான பொலார்ட், இதுவரை 101 ரி-20 போட்டிகளில், 135.14 ஸ்டிரைக் ரேட்டில் 1569 ஓட்டங்களை குவித்துள்ளார். ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்கள் எடுத்ததே அவரது அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
மேலும், 42 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த
பந்துவீச்சாகும்.ஆனால், பொலார்ட், மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒருபோதும் டெஸ்ட் விளையாடவில்லை.
உலகம் முழுவதும் ரி-20 கிரிக்கெட் விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்திய பொலார்ட், கரீபியன் பிரீமியர் லீக், ஐ.பி.எல், பிக் பேஷ், பங்களாதேஷ் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சுப்பர் லீக், கவுண்டு போட்டிகள், குளோபல் ரி-20 உள்ளிட்ட வெளிநாட்டு ரி-20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லருக்குப் பிறகு, டெஸ்டில் விளையாடாமல் அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் பொலார்ட் ஆகும்.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தென்னாப்பிரிக்காவில் ஒரு தொடருக்கு முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் சபை மற்றும் வீரர்கள் சங்கம் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, டேரன் சமி மற்றும் டுவைன் பிராவோ ஆகியோருடன் இணைந்து அணியிலிருந்து விலகினார்.
பின்னர், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார், பின்னர் 2019ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் ரி-20 அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, உள்நாட்டில் அயர்லாந்திற்கு எதிராக, இலங்கைக்கு எதிராக உள்நாட்டிலும் ரி-20களில் இலங்கைக்கு எதிராகவும் தொடர் வெற்றிகளை அவர் வழிநடத்தினார்.
குறிப்பாக, அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றிகள் அவரது பதவிக்காலத்தில் சிறப்பம்சங்கள் ஆகும்.
ஒட்டுமொத்தமாக, அவர் மேற்கிந்திய தீவுகளை இரண்டு வடிவங்களில் 61 போட்டிகளில் வழிநடத்தினார், அதில் அணி 25 வெற்றி மற்றும் 31 தோல்விகளை சந்தித்தது.
இதுதவிர, 2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பொல்லார்டும் இடம்பெற்றிருந்தார். மேலும், காயம் காரணமாக 2016 ரி-20 உலக்கிண்ணத் தொடரில் அவரால் மேற்கிந்தியத் தீவுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை.
15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், 100க்கும் மேற்பட்ட ரி-20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கே உரித்தானது.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சயவின் பந்துவீச்சுக்கு ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் ஹெர்ஷல் கிப்ஸ் மற்றும் யுவராஜ் சிங்குடன் இணைந்து ஆண்களுக்கான சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றார்.
இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ரி-20 உலகக் கிண்ணம், அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரும் நடைபெறவுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இப்போது இரண்டு வடிவங்களிலும் புதிய அணித்தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.