கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், இந்த சோதனை உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஏவுகணை மாஸ்கோ நேரப்படி புதன்கிழமை 15:12 மணிக்கு வடமேற்கு ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்லெசெட்ஸ்க் காஸ்மோட்ரோமில் இருந்து ஏவப்பட்டதாகவும், இந்த ஏவுகணை நாட்டின் அணுசக்தி படைகளின் போர் ஆற்றலை கணிசமாக அதிகரிக்கும் என்றும் சர்மாட் உலகின் மிக நீண்ட தூர இலக்குகளை அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்மாட் சோதனைக்குப் பிறகு கருத்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், ‘புதிய ஏவுகணை மிக உயர்ந்த தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் எதிர் ஏவுகணை தாக்குதலை தவிர்க்கும் வகையில் அனைத்து நவீன வழிமுறைகளையும் சமாளிக்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது. இது ரஷ்யாவின் அடுத்த தலைமுறை ஏவுகணைகளில் ஒன்றாக உள்ளது.
சர்மாட் ரஷ்ய ஆயுதப் படைகளின் போர் திறனை பலப்படுத்தும், வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து ரஷ்யாவை பாதுகாக்கும், ரஷ்யா மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்த நினைப்பவர்களை இனி இரு முறை சிந்திக்க வேண்டும்’ என கூறினார்.