ஐ.பி.எல். ரி-20 தொடரின் 34ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி, இரண்டில் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதுவே நடப்பு தொடரின் அணியொன்றின் அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 116 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 54 ஓட்டங்களையும் சஞ்சு சம்சன் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், காலீல் அஹமட் மற்றும் முஷ்டபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 223 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 44 ஓட்டங்களையும் பிரத்வீ ஷா மற்றும் லலித் யாதவ் ஆகியோர் தலா 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், பிரசீத் கிருஸ்ணா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் ஒபெட் மெக்கொய் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 65 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 9 பவுண்ரிகள் அடங்களாக 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.
இது நடப்பு தொடரில் ஜோஸ் பட்லரின் மூன்றாவது சதமாகும். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்த ஐ.பி.எல். தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் நடப்பு தொடரின் வீரரொருவரின் அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.