ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பொலிஸாருடனான மோதலில், குறைந்தது 57 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் சமமாக மதிக்கும் இடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மோதல் பதிவாகியுள்ளது.
பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் ஆம்புலன்ஸ் சேவையின் படி, 14 பாலஸ்தீனியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யூத வழிபாடு நடந்து கொண்டிருந்த மேற்கு சுவரை நோக்கி, நூற்றுக்கணக்கான மக்கள் பாறைகள் மற்றும் வானவேடிக்கைகளை வீசத் தொடங்கியபோது தங்களது படைகள் தலையிட்டதாக இஸ்ரேலிய பொலிஸ் கூறியுள்ளது.
காலை தொழுகைக்குப் பிறகு பொலிஸார் வளாகத்திற்குள் நுழைந்ததாகவும், சுமார் 200 பாலஸ்தீனியர்கள் கலந்துக்கொண்ட கூட்டத்தின் மீது ரப்பர் தோட்டாக்கள் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியதாகவும், அவர்களில் சிலர் பதிலுக்கு கற்களை வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூதர்களால் டெம்பிள் மவுண்ட் என்றும், இஸ்லாமியர்களால் உன்னத சரணாலயம் என்றும் அழைக்கப்படும் வளாகத்தில் வன்முறை கடந்த வாரத்தில் அதிகரித்து, தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது, இஸ்ரேல்- ஹமாஸ் போருக்கு வழி வகுத்து வருகிறது.
பாலஸ்தீனிய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, மார்ச் மாதத்திலிருந்து, இஸ்ரேலியப் படைகள் மேற்குக் கரைத் தாக்குதல்களில் குறைந்தது 29 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன. மேலும் தொடர்ச்சியான கொடிய அரபு வீதித் தாக்குதல்களில் இஸ்ரேலில் 14பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய பொலிஸ்துறை மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.