சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதற்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நடைபெற்று வரும் பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆம் ஆண்டு வசந்தகால கூட்டத்தின் ஒரு பகுதியாக எஃப்ஏடிஎஃப் அமைச்சா்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) பங்கை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
எஃப்ஏடிஎஃப் அமைப்புக்குத் தேவையான வளங்களையும் ஆதரவையும் இந்தியா தொடா்ந்து வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.