கடந்த ஆண்டு ‘ரவிஹன்சி’ என்ற இலங்கை படகில் இலங்கைப் பிரஜைகளிடமிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் 3.59 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட சொத்துக்களில் சுரேஷ் ராஜ், சற்குணம், ரமேஷ் மற்றும் சௌந்தரராஜன் ஆகிய குற்றவாளிகளுக்கு சொந்தமான ஆறு நில சொத்துக்கள், 12 வாகனங்கள், பணம் மற்றும் வங்கி வைப்புக்கள் உள்டங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் திகதி, இந்தியக் கடலோரக் காவல்படையினர், இலட்சத்தீவு, மினிகாய் தீவு அருகே, ‘ரவிஹன்சி’ என்ற இலங்கை மீன்பிடிப் படகு இந்திய கடல் எல்லைக்குள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன்போது, அந்தப் படகில் ஏராளமான கடத்தல் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக 300.323 கிலோகிராம் ஹெரோயின் ஐந்து துப்பாக்கிகள் மற்றும் ஆயிரத்து 9 மி.மீ வெடிமருந்துகள் ஆகியன மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.