ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவியில் இருந்து அகற்றுவதற்கான வீதிப் போராட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை இதுவரை கண்டிராத மிகப்பெரிய எதிர்ப்பு பேரணி கண்டியில் இருந்து ஆரம்பமாகும் என தெரிவித்தார்.
தலதா மாளிகையை வழிபட்ட பின்னர் போராட்டத்தை ஆரம்பித்து மே 1 ஆம் திகதி கொழும்பை சென்றடைவோம் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்கும் முயற்சியை SJB ஆரம்பிக்கும் என்றும் கொழும்பில் தங்களின் போராட்டத்தை ஆரம்பிக்கும் இடத்தை பின்னர் அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
மேலும் “நாங்கள் மார்ச் 15 அன்று நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க ஒரு மாத கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கினோம். அந்த ஒரு மாதம் இப்போது முடிவடைகிறது. எனவே இந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டத்திற்கான நேரம் இது. மே 1, 2022 அன்று நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை அனைவரும் பார்க்க முடியும்.
ஒவ்வொரு போராட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாலும் SJB போராட்டத்தை தொடரும். மக்களுக்காக சிறை செல்ல நாங்கள் அஞ்சமாட்டோம்” என்று அவர் மேலும் கூறினார்.