ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியா தனது நிலைப்பாட்டை எடுக்கும் போது அதன் வெளிவிவகாரக் கொள்கைகளை மையப்படுத்துகின்றது. இது சர்வதேச இராஜதந்திரத்தின் கோட்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருக்கின்றது. அதனால் இந்தியா நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன், இரு நாடுகளின் தேசிய நலனைப் பாதுகாத்தல், அமைதியான வெளியுறவுக் கொள்கையைப் பராமரித்தல், உடனடியாக வன்முறையை நிறுத்தல், விரோதங்களை முடிவுக்குக் கொண்டு வந்து, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர பாதைக்குத் திரும்புதல் ஆகிய விடயங்களை இரு நாடுகளிடத்திலும் முன்வைத்து அழைப்பும் விடுத்தது.
நீண்டகால வெளியுறவுக் கொள்கையின் அங்கங்களாகவுள்ள சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் அனைத்து மாநிலங்களின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கான மரியாதை ஆகியற்றின் அடிப்படையில் உலகளாவிய ஒழுங்கை வளர்க்கவும் இந்தியா வலியுறுத்தியது.
உக்ரைன் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சகை ஆகியவற்றின் அனைத்து வாக்கெடுப்பு அமர்வுகளில் இருந்தும் இதுவரை விலகியிருக்கும் இந்தியாவின் முடிவு, தேசிய நலனைப் பாதுகாத்தல் மற்றும் கொள்கை ரீதியான வெளியுறவுகளை இரு கண்ணோட்டங்களில் நோக்கவதாலாகும்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து இந்தியாவின் முடிவின் மீது அமெரிக்க நிர்வாகம் ஆரம்பத்தில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது, ‘மொஸ்கோவுடன் மிகவும் வெளிப்படையான மூலோபாய ஒருங்கிணைப்பின்’ விளைவுகள் குறிப்பிடத்தக்கதாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும்’ என்றும் அமெரிக்கா கூறியது, ஆனால் அமெரிக்கா படிப்படியாக இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய புரிதலை உருவாக்கியது.
ரஷ்யா தொடர்பான ஐ.நா. வாக்கெடுப்பினை இந்தியா புறக்கணித்ததே தவிரவும் வன்முறை மற்றும் விரோதப் போக்கைத் எந்த நாட்டுக்கும் எதிராக முன்னெடுக்கவில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைன் போருக்கு முன்பே வளர்ந்த நீண்ட கால வரலாற்று பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவின் பின்னணியில், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவை படிப்படியாக புரிந்து கொண்டன.
இந்தியா தனது தேசிய நலன் மற்றும் இறையாண்மை பற்றி விழிப்புடன் முடிவுகளை எடுத்துள்ளது. அதே நேரத்தில் ஏனைய நாடுகளுடன் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை ‘வெற்றி-வெற்றி’ என்ற இருதரப்புக் கட்டமைப்பில் பராமரிக்கிறது என்பது தெளிவாகிறது.
ரஷ்யாவுடன் இந்தியா நீண்டகால உறவுகளைக் கொண்டிருப்பதால், அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்த போதிலும், ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா தொடர்ந்தும் இறக்குமதி செய்து வருகிறது.
ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு வரலாற்று உறவுகள் இருந்தபோதிலும், உக்ரைனின் புச்சாவில் நடந்த கொலைகளை இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்தது. மேலும் ‘ஆழ்ந்த கவலையளிக்கும் அறிக்கைகள்’ வெளியிட்டதோடு ஒரு சுயாதீன விசாரணைக்கான கோரிக்கைகளையும் ஆதரித்திருநதது.
இந்தியாவின் நிலைப்பாடு ‘அமைதிவாத நாடு’ என்ற பிம்பத்துடன் ஒத்துப்போகிறது மற்றும் வெகுஜன மரணங்கள் மற்றும் புதைகுழிகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் சான்றுகள் தோன்றியவுடன் உக்ரைன் போரில் பொதுமக்களின் உயிரிழப்புகள் இடம்பெற்றவுடன் கண்டனம் செய்தது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் வதிவிடப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், ‘மோசமான சூழ்நிலையில் உள்ள உக்ரைன் குறித்து ஆழ்ந்த அக்கறையுடன் இந்தியா உள்ளது.
வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். விரோதங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அழைப்பை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது’ என்று குறிப்பிட்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கூட உக்ரேனிய நகரமான புச்சாவில் நடந்த பொதுமக்கள் படுகொலைகளுக்கு இந்தியாவின் கண்டனத்தை நாடாளுமன்றத்தில் வைத்து பகிரங்கமாகத் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனான தனது உறவை இந்தியா முக்கியமானதாக பார்க்கிறது. அமெரிக்க – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான 2102 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் அமெரிக்காவும் ‘ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவம்’, ‘பன்முக இருதரப்பு நிகழ்ச்சி நிரல்’ , ‘மூலோபாய நலன்களின் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு’ ஆகியவற்றிற்கான தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.
‘இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும், ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதோடு, அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் நெகிழ்ச்சியான செயற்பாடுகள்’, ‘சட்டங்களின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை பின்பற்றுதல்’ ஆகிய விடயங்களில் இருதரப்புக்களும் தொடர்ந்து ஊக்குவிப்பைச் செய்யும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளன.
இந்தியாவும், அமெரிக்காவும் உக்ரைன் போரில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான கவலையைப் பகிர்ந்து கொண்டன, மேலும் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான பரஸ்பர முயற்சிகளை மதிப்பாய்வு செய்தன.
அதேநேரம் இந்தியா ரஷ்யாவுடன் சுதந்திரமான சிறப்பான இருதரப்பைக் உறவைக் கொண்டுள்ளது. தற்போதைய நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யா புரிந்துகொண்டுள்ளது. உக்ரைன் போரில் இந்தியா ஒரு அளவிடப்பட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
ஏனெனில் ரஷ்யாவுடனான அதன் உறவு காரணமாக உக்ரேனில் சிக்கித் தவிக்கும் ஏராளமான தனது நாட்டினரை வெளியேற்றுவதில் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக அந்தச் செயற்பாட்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா பாரம்பரியமாக ரஷ்யாவின் நம்பகமான மூலோபாய பங்காளியாக இருந்து வருகிறது. கடந்த கடினமான காலங்களில் சோவியத் ஒன்றியம் இந்தியா வழங்கிய உதவிகளை வெகுவாகப் பாராட்டியுமுள்ளது.
உக்ரைன் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அழைப்பு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அறிக்கையின் பிரதிபலிப்பைப் பெற்றது. பேச்சுவார்த்தை மேசையில் ரஷ்ய தரப்பு நேர்மையாகவும் நிலையானதாகவும் பணியாற்ற தயாராக உள்ளது என்ற உண்மையை சர்வதேச சமூகம் அறிய வேண்டும்.
முன்னதாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டுத் தலைவர்களுடன் இந்தியாஇந்தியப் பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளைச் செய்திருந்தார். இருவரிடமும் நேரடியாகப் பேசி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
‘உக்ரைன் போர் பல ஆண்டுகளாக நீடிக்கும். இதனால் உலகம் மிகவும் நிலையற்றதாக போகும் ஆபத்துள்ளதோடு குறிப்பிடத்தக்க சர்வதேச மோதலுக்கான சாத்தியக்கூறுகள்’ இருப்பதாகவும் அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லியினால் வெளிப்படுத்தப்பட்ட அச்சம் குறித்து இந்தியா விசேட கரிசனையைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி இந்தியா எப்போதுமே மனிதப் பிரச்சினைகளை உணர்திறன் கொண்ட பொறுப்புள்ள நாடாகச் செயல்பட்டு வருகிறது. உக்ரைன் போரின் போது ரஷ்யாவுடன் தற்போதுள்ள முழு பொருளாதார உறவுகளை இந்தியா உறுதிப்படுத்த விரும்புவதாகவும், அதை அதிகரிக்க வேண்டாம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவாக கூறியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய எரிசக்தி மற்றும் உரங்களின் இறக்குமதியைத் தொடர்வதால் தேசிய நலனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முடியாது, மேலும் அதனுடன் ஒப்பிடும்போது இந்திய எண்ணெய் இறக்குமதி மிகவும் சிறிய அளவானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பலர் ரஷ்யாவிலிருந்து செலுத்திய பணம் நாணயப் பரிமாற்றத்திலிருந்து விலக்கப்பட்டதன் காரணமாக முடக்கப்பட்டுள்ளது. எனினும், உக்ரைன் போருக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்திய மற்றும் ரஷ்ய வர்த்தக ஒப்பந்தங்களும் மதிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டியுமுள்ளது.
இந்தியா வன்முறை மற்றும் விரோதப் போக்கை எப்போதுமே ஆதரிக்கவில்லை, ஆனால் அது தனது தேசிய நலனைப் பாதுகாக்க தலைப்பட்டுள்ளது. தற்போது அதைத்தான் செய்கிறது, அதேநேரத்தில் போரிடும் நாடுகளுக்கு இடையே அமைதியை மீட்டெடுக்க உதவுவதற்கு தயார் நிலையில் உள்ளது.