ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலிலும், அலரி மாளிகை வளாகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இன்றைய தினமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, காலி முகத்திடலில் இன்று(வெள்ளிக்கிழமை) 21 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு அப்பால் இந்த போராட்டத்தில் மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய கடந்த காலங்களில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகளும் இந்தப் போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கோட்டா கோ கம எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் தொடர்ச்சியாக கலந்து கொண்டு இரவு – பகலாக அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பி வருகின்றனர்.
தேசியக் கொடிகளை ஏந்தியும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக பதாதைகளை ஏந்தியும் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் போராட்டத்தின் காரணமாக, ஜனாதிபதி செயலக வளாகம் மற்றும் அதனை அண்டியப் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாகவும் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மைனா கோ கம என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இடத்தில், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டக்காரர்களின் கோஷங்களை முடக்கும் வகையில், அலரிமாளிகையில் ஒலிப்பெருக்கி ஊடாக மிகவும் சத்தமாக பிரித் ஓதப்பட்டு இடையூறு விளைவிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.
அதேநேரம், இங்குள்ள போராட்டக்கார்களுக்கு எதிராக, குறித்த பகுதியின் நடைப்பாதைகளில் பொலிஸார் பஸ்கள் உள்ளிட்ட பொலிஸ் வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த வாகனங்கள் மீது போராட்டத்தில் ஈடுபடுவோர் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளைக் காட்சிப் படுத்தியமையால், இன்று காலை போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலைமையொன்றும் ஏற்பட்டது.
குறித்த பதாதைகளை பொலிஸ் வாகனங்களிலிருந்து அப்புறப்படுத்துமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை போராட்டக்காரர்கள் ஏற்காதமையினாலேயே இந்த சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, பொலிஸார் குறித்த பதாதைகளை அப்புறப்படுத்தியதோடு, போராட்டக்காரர்களை அங்கிருந்து செல்லுமாறும் அறிவித்தனர்.
எவ்வாறாயினும், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.