இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகள் அடங்கிய குழு மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேச்சையாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள தீர்மானித்திருந்தனர்.
இந்தநிலையிலேயே குறித்த கலந்துரையாடலினை பிற்போட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் பிரதமருடனான சந்திப்பின் போது ஆளுங்கட்சி சார்பாக 109 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதைத் தொடர்ந்து, பிரதமருக்கு ஆதரவாக 117 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது உறுதியாகியுள்ளதாக நம்பப்படுகிறது.
இதனையடுத்து, இன்றைய தினம் இடம்பெறவிருந்த சர்வகட்சிகளுடனான சந்திப்பை ஜனாதிபதி திடீரென ஒத்திவைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரமே இன்று காலை ஜனாதிபதியின் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.