ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அமைச்சர் நசீர் அஹமட் இவ்வாறு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நடந்தவற்றை உரியவாறு சமூகத்திடம் ஒப்புவிக்கும் பொறுப்பிலிருந்து தாமும் கட்சியின் தலைவரும் நழுவி விட முடியாது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் யார் குற்றவாளி அல்லது சுற்றவாளி என்பதையும் எவரது பொறுப்புகள் சமூகக் கட்டமைப்பிலிருந்து நழுவியது என்பதையும் சமூகமே தீர்மானிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
20 ஆவது திருத்தத்திற்கு தான் உட்பட H.M.M.ஹாரிஸ், பைசல் காசிம், M.S. தௌஃபீக் ஆகியோர் ஆதரவளித்ததன் பின்புலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், அவை இடம்பெற்ற இடங்கள் இன்றும் எழுந்தமானமான கதைகளாகவே உள்ளதாக நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
இதன் உண்மைத்தன்மையை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவும், அதனை ஆதாரபூர்வமாக முழு ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் அனுமதியுடனேயே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்ததாக அமைச்சர் நசீர் அஹமட் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.