அண்மைக் காலமாக இலங்கையின் தென்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் உருவாகிய ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் நாடெங்கிலும் பேசு பொருளாகியுள்ளது. இந்த அடிப்படையில் ஏப்ரல் மாத ஆரம்ப காலத்திலிருந்து இளைஞர் குழுமங்கள் முகாமிட்டு போராடத் தொடங்கியுள்ளன. அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக, அரசில் இருப்பவர்கள் சிலரும், அரசுக்கு எதிரானவர்களும் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இப்போராட்டம் தொடங்கியதிலிருந்து பல மாற்றங்களையும், உருமாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்போராட்டம் தெற்கில் நடைபெறுகின்ற அதேவேளை, எத்தனையோ போராட்டங்களை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்கள் அல்லது இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ள மக்கள் பல ஆண்டுகளாக தமது உரிமைகளுக்காகச் செய்து வந்தபோதும், தென்பகுதி மக்களால் அவற்றுக்கான அங்கீகாரம் போதியளவு வழங்கப்பட்டிருக்கவில்லை. இருந்தும், தற்போது அரசுக்கு எதிராக இடம்பெறுகின்ற போராட்டத்தில் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த மக்கள் இணைந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்த போதும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பங்கேற்பென்பது ஒப்பீட்டளவில் பெரிதும் குறைவாகவே உள்ளது.
இந்த அடிப்படையில் இப்போராட்டத்தினைப் புரிந்து கொள்ளவும், அதனை இயக்கும் கருத்தியலை விளங்கிக் கொள்ளவும், தமிழ்பேசும் மக்கள் மத்தியில் இந்த விடயங்களை சரிபிழைக்கு அப்பால் எத்திவைக்கவும், அதன் விளைவாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கான வசதிப்படுத்தலைச் செய்வதற்குமாக, களவிஜயத்தினை (18.04.2022 – 21.04.2022 வரை) மேற்;கொண்டு, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களுடன் நேர்காணல்களைச் செய்து, அதனை எழுத்து வடிவில் கொண்டு வந்து, தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பகிர்ந்து அதன் ஊடாக கருத்தாடலினைச் செய்யவேண்டும் என்ற அவாவின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
இது தொடர்ச்சியான களவிஜயங்கள், நேர்காணல்கள், மற்றும் இணையவழியான ஏனைய எழுத்தாக்கங்கள், செய்திகள் மற்றும் அறிக்கைகளிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
மட்டுப்பாடுகள்
பிரதான மொழியாக சிங்களமொழி காணப்பட்டமையால் தொடர்பாடலில் மொழிப்பிரச்சினை காணப்பட்டது. தேவையான இடங்களில் மொழிபெயர்ப்பாளர்களின் உதவி பெறப்பட்டது.
முன்பின் அறிமுகமற்றவர்களாக இருந்த சந்தர்ப்பங்களில் குறுகிய காலத்துக்குள் போராட்டங்களில் பங்கெடுத்தவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இடையிலான நம்பகமான உறவினை கட்டியெழுப்புதலில் இருந்த சிக்கல்தன்மை.
நேர்காணல் செய்யப்பட்டவர்கள் போராட்ட களத்தில் ஈடுபாட்டுடன் இருந்தமையால் நேர்காணலில் அதிக நேரத்தைச் செலவிட முடியாத நிலை காணப்பட்டமை
* நேர்காணல் செய்கையில் எமக்குள் தொடர்ச்சியாக இருந்து பாதுகாப்பு பற்றிய உள்ளுணர்வு
*இந்;த அரசுக்கு எதிரான எதிர்ப்பினை மக்கள் பல்வேறு காலகட்டங்களில் விவசாயிகள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், மலையக மக்கள் போராட்டம், சுதந்திர வர்த்தக வலைய ஊழியர்களது போராட்டம், ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதிகோரிய ஆர்ப்பாட்டங்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போன்று பல்வேறு விதமாகத் தெரிவித்து வந்திருந்தபோதும், பொருளாதார நெருக்கடியின் பின்னரான அண்மைய ஆர்ப்பாட்டங்களை மட்டுமே இக்கட்டுரை குறித்து நோக்குகிறது. செய்திகளில் இடம்பிடிக்காத பல ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறக் கூடும். இந்தக் கட்டுரை பிரதானமாக கோட்டாகோகம பற்றியும், (26.04.22 காலை வரை) – அதேகாலப்பகுதிக்குள் நிகழ்ந்த வேறும் சில பிரதான ஆர்ப்பாட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது பூரணமான தகவல் தொகுப்பொன்று அல்ல என்பதனைக் கவனத்தில் கொள்க)
அறிமுகம்
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பல ஆண்டுகளாக வாங்கப்பட்டு வந்த பில்லியன் கணக்கான கடன் சுமை, பணவீக்கம், டொலர் கையிருப்பின்மை, பாரிய ஊழல், அரசாங்கத்தின் முறைகேடான முகாமைத்துவம் என்பன இலங்கையை அதள பாதாளத்துக்குள் தள்ளி விட்டுள்ளன. பால்மா, பெற்றோல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு, எரிபொருட்களுக்கான மிக நீண்ட வரிசைகள் போன்றவை உள்ளடங்கலாக அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும், தட்டுப்பாடும் இலங்கையில் பாரிய நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளன. இவற்றின் காரணமாக தத்தமது பகுதிகளில் மக்கள் இன, மத, மொழி, பால், பொருளாதார அந்தஸ்து போன்ற வேறுபாடுகள் இன்றி தமது எதிர்ப்பைக் காட்டவாரம்பித்துள்ளனர். (படம் 1)
மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவுகளில் பாதைகளுக்கு இறங்கி பல்வேறு இடங்களில் பதாதைகளை ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினைத் தெரிவிக்க ஆரம்பித்தனர். இது கொழும்பிலும், ஏனைய பல்வேறு இடங்களிலும் இன்றளவும்; தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்கலாம். (படம் 2)
அமைதியான முறையில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில், கடந்த 31.03.2022 அன்று மிரிஹானை என்ற விடத்தில் ஜனாதிபதியின் வீட்டிற்கு முன்னால் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் திரண்டிருந்த இச்சம்பவம் வன்முறைச் சம்வமாக மாறியது. இதில் ஒரு பொலிஸ்வண்டி, 2 மோட்டார் சைக்கிள்கள், தீக்கிரையாக்கப்பட்டன. 17 பொதுமக்களும், 17 பாதுகாப்புத் தரப்பினரும் 3 ஊடகவியலாளர்களும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். (படம் 3) விலைவாசியுயர்வை, மின்துண்டிப்பை, எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினை எதிர்த்து மக்கள் போராடியதனை, ‘தீவிரவாத’ செயற்பாடாக ஜனாதிபதி ஊடகங்களுக்குத் தெரிவித்தமை மக்கள் மத்தியில் மேலும் ஆத்திரமூட்டும் கூற்றாக அமைந்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 54 பொதுமக்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் அடுத்த நாள் காலையிலேயே நீதிமன்றில் தன்னார்வத்துடன் திரண்ட சட்டத்தரணிகளின் உதவியினால், நீதிமன்றம் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கியது.
ஜனாதிபதி கோட்டாபய, தனது வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடந்தது மட்டுமன்றி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருவதைக் கண்டு இரவோடிரவாக 01.04.2022 அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியிருந்தார். இது, சந்தேகத்துக்கு இடமானவர்கள்
என்ற பெயரில் எவரையும் இராணுவம் கைது செய்து நீண்ட காலத்திற்கு தடுத்து வைத்திருக்கும் அதிகாரத்தை வழங்கியிருந்தது. அது மட்டுமன்றி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டது.
இலங்கையின் நெருக்கடி நிலைமைக்கு எதிராக பாரிய எதிர்ப்பைத் தெரிவிக்க அனைவரையும் ஒன்றிணையும்படி ஏப்ரல் 3ஆம் திகதி சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த வேளையில் அரசால் 1ஆம் திகதி மாலை 6 மணி தொடங்கி 36 மணித்தியாலங்களுக்கான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனாலும் ஊரடங்கையும் தாண்டி மக்கள் தெருக்களில் இறங்கிக் கோசமிட்டனர். ஊரடங்கோடு சேர்த்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. ஆயினும் மக்கள் விபிஎன் இனூடாக சமூக வலைத்தளங்களில் இணைந்ததும், உள்நாட்டில் பூதாகாரமாக வெடித்திருந்த ‘கோட்டாகோஹோம்’ ஜேர்மனி, சிங்கப்பூர் போன்ற வேறு நாடுகளிலும் பரவலாக ஆக, அரசு உடனடியாக தனது முடக்கலை மீளப்பெற்றது. அது மட்டுமன்றி மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பின் விளைவாக 06.04.2022 அன்று அவசரகால நிலைப்பிரகடனத்தையும் மீளப் பெற்றது.
அதேசமயம் மிரிஹானவில் மக்கள் கிளர்ச்சி இடம்பெற்ற இரு தினங்களின் பின்னர், சமூக வலைத்தளங்களில் வெற்றிகரமாகக் கோஹோம்கோட்டா ஹேஸ்டெக் இனை ஆரம்பித்திருந்த இளம் செயற்பாட்டாளர் திசார அனுருத்த பண்டார, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் வரையும் பொலிஸார் அவரைக் கைது செய்ததனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு, அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியப்படுத்தப்படவில்லை. என்றபோதும், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தன்னார்வ அடிப்படையில் முன்வந்த பல்வேறு சட்டத்தரணிகளின் முயற்சியினால் அவர் மோதர பொலிஸில் இருப்பது கண்டறியப்பட்டு, 02.04.2022 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தலைநகரையொட்டி இச்சம்பவங்கள் இடம்பெற்ற அதேவேளை வெலிஓயவில் பெண்கள் குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. (05.04.2022) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெண்கள், குழந்தைகளுடன் வந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு எதிராக போராட்டம் செய்தனர். (07.04.2022) பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் உள்ள10ர் கலைஞர்கள் மரண ஊர்வல சடங்கொன்றை நடத்தியிருந்தனர். நீர்கொழும்பில் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதிகோரி பல ஊர்வலங்கள் இடம்பெற்றன. (09.04.2022). இவை தவிரவும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
கோட்டாகோகம இனது தோற்றமும், வளர்ச்சியும்
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எனக் கோரி மக்களினால் கொழும்பில், முக்கியத்துவம் வாய்ந்த காலிமுகத்திடலில், 09.04.2022 போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முதலிரு நாட்கள் இப்போராட்டக்காரர்கள் வந்து சென்றபோதும் பின்னர் அங்கேயே தங்கியிருந்து தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தினைச் செய்தனர். மழைக்காலம் என்பதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தில் முகாம்களை அமைத்துக் கொண்டதுடன், மூன்றாவது நாள் அவ்விடத்திற்கு ‘கோட்டாகோகம’ 11.04.2022 எனப் பெயரும் இட்டுக் கொண்டனர்.
இங்கு குறிப்பிடத்தக்க முரண்நகையான விடயம் யாதெனில், கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதன் பின்னர், இதே நிலப்பரப்பில் ஆர்ப்பாட்டத்திற்கான இடம் என பதாகையிட்டு ஒரு இடத்தை ஒதுக்கி இருந்தமையாகும். இன்று அந்த இடம் தாளாத வகையில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் ஒன்று திரண்டு ‘கோட்டாகோஹோம’; என்று கோசமிடுகின்றனர்.
கூகிள் மெப் இல் இந்தக் கிராமம் காட்டப்படுவதனை மக்கள் சந்தோசமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமையை அவதானிக்க முடிந்தது. (படம் 5) இக்கிராமம் ஒருசில முகாம்களுடன் ஆரம்பிக்கப்பட்டதாயினும், அடுத்த நாளே பல முகாம்கள் முளைத்தன. (படம் 6)ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. (படம் 7) தற்போது இது ஒரு கிராமமாக பல அம்சங்களைக் கொண்டு வளர்ச்சி கண்டுள்ளது. படம் 8)
நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து இணைந்து கொள்கின்றனர். தம்மால் ஒரு சில மணித்தியாலங்களை ஒதுக்க முடிந்தாலும் இவ்விடத்தில் வந்து கோசங்களை எழுப்பிச் செல்கின்றனர். ஜனநாயகத்தினைக் கட்டியெழுப்ப தங்களது பங்களிப்பினை மக்கள் ஒவ்வொரு விதமாக அர்த்தப்படுத்துகின்றனர். இதுவொரு முன்மாதிரிக் கிராமமாகக் காணப்படுகின்றது. இங்கு கொழுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், எதனையும் பொருட்படுத்தாது மக்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். கறுப்புக் கொடிகளில் ‘மக்கள் சக்தி’ என்று எழுதப்பட்டுள்ளன. அதிகமான இடங்களில் ‘இனிப் போதும்’ ‘திருடிய பணத்;தைத் திருப்பிக் கொடு’ என்ற பதாதைகளையும் காண முடிகிறது. (படம் 9)
இது ஒருபுறமிருக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து சமூக வலைத்தள செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு இப்பிரதேசத்தில் வைபை – ஜிஎஸ்எம் ஜேம்மர்ஸ் இனை கொண்டு வந்து வைத்துள்ளது. அதனையும் ஒளிப்படமெடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பரவலாக்கியிருந்தனர். (படம் 10) அதேவேளை அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாகவிருப்பதனால், சேவையை வழங்கவென டயலொக் ஒரு கோபுரத்தை திடீரென நிறுவியது. இது யார், என்ன வாகனங்கள் வருகின்றன என்று அரசு தகவல் சேகரிப்பதற்கான, கண்காணிப்புக்கானதாக இருக்கலாம் என சந்தேகமும், எதிர்ப்பும் வெளியிடப்பட்ட நிலையில் 16.04.2022 அன்று அடுத்த டயலொக் அந்த கோபுரத்தினை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தது.
கோட்டாகோகமவில்…
மக்களது ஆதரவுடன், அங்கு வருகின்ற மக்களுக்குத் தொடர்ச்சியாக மக்கள் அனுசரணையுடன் இலவச உணவும், குடிநீரும் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இது போராட்டகளத்தில் அவற்றுக்கான சிந்தனைகள் இன்றி, வலுவுடன் தொடர்ந்தும் போராட உதவி செய்கின்றது. தன்னார்வத்துடன் மக்கள் தமது வாகனங்களில் முடியுமானளவு, பெட்டிகளில் உணவுப் பொருட்களையும், தண்ணீர்ப் போத்தல்களையும், தேநீர், சோடா போன்றவற்றையும் வழங்கிச் செல்கின்றனர். (படம் 11) மேலும் பாதை நெடுகிலும் தண்ணீர்த் தாங்கிகளும் வைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்ரிக் பாவனையைக் குறைப்போம் என்ற பதாகையுடன், ‘உங்களது தண்ணீர்ப் போத்தல்களைக் கொண்டு வந்து இங்கு நீரை மீள்நிரப்பிக் கொள்ளுங்கள்’ என்ற பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ முகாம் – பல இளைஞர்களைக் கொண்டதாக இப்போராட்டம் காணப்படுகின்றபோதும், தனியே இளைஞர்களை மட்டும் கொண்டதல்ல. கடும் வெயில், மழை, கடலை அண்டிய குளிர் காற்று என்பவற்றை முகங்கொடுத்தே இங்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் இங்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அடிப்படையான மருத்துவ உதவிகளுடன் முகாமிட்டிருக்கிறது. (படம் 12) சில வயதானவர்கள் களைப்படைகையில் அல்லது மயக்கமடைகையில் அவர்கள் உடனடியாக மருத்து கண்காணிப்பை பெறக் கூடியதாக உள்ளது. இதில் உளவள நலத்துக்கானதொரு முகாமும் இணைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். ஒரு அம்புயுலன்ஸ் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
தொலைபேசி சார்ஜ் செய்யும் முகாம் – தொடர்ச்சியாக இங்கு தங்குபவர்கள், வந்து செல்பவர்கள் தமது தொலைபேசிகளை இந்த முகாமில் கையளித்து சார்ஜ் செய்து பின்னர் வந்து பெற்றுக் கொள்கின்றனர். (படம் 13)
வாசிகசாலை – ஒரு சில நூற்களைக் கொண்டு சிறியதொரு முகாமில் ஆரம்பிக்கப்பட்ட வாசிகசாலையானது இன்று உள்ளவற்றிலேயே பெரிய முகாமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதற்குத் தன்னார்வ அடிப்படையில், மும்மொழிகளிலும், பெரியோர் மற்றும் சிறியோருக்கான நூற்களையும், அவற்றைக் காட்சிப்படுத்துவதற்கான அடுக்குகளையும் மக்கள் நன்கொடை செய்துள்ளனர். (படம் 14)
மக்கள் மன்றம் – இங்கு மக்கள் இலங்கையில் காணப்படும் எந்தவொரு பிரச்சினையைப் பற்றியும் தமது கருத்தை எம்மொழியிலும் தெரிவிக்க முடியும். அதனை எழுதி பெட்டியில் இடவோ அல்லது பேசவோ முடியம். (படம் 15)
சூழலைப் பேணுவோம் முகாம் – பிளாஸ்ரிக் பாவனையை இல்லாதொழிப்போம் – பொதுவாக போராட்ட களத்தில் பலவிதமான கழிவுப் பொருட்களும், குப்பைகளும் நிரம்பியிருக்கும். ஆனால் இங்கு தண்ணீர்ப்போத்தல்கள் ஒரேயிடத்தில் சேர்க்கப்படுகின்றன. ‘மாற்றத்தை குப்பைத் தொட்டியிலிருந்து ஆரம்பிப்போம்’ என்ற பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர்ப்போத்தல்களைச் சேகரித்து இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமன்றி கழிக்கப்பட்ட தண்ணீர்ப் போத்தல்களைக் கொண்டு தமது எதிர்ப்பைக் காட்டும் விதமாக காலிமுகத்திடலில் ‘கோட்டாகோஹோம்’ என்று நடுவிரலைக் காட்டும் காண்பியக் கலை நிறுவப்பட்டுள்ளதுடன், ஆங்கில எழுத்துகளால் அலங்கரித்த வேலைப்பாடொன்றையும் செய்துள்ளனர். (படம் 16)
நடு இரவில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிப் பாய்ந்த ‘கோட்டாகோஹோம்’ ஒளிவெள்ளம் – இந்த ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலானவர்களாக இளைஞர்கள் காணப்படுகின்றனர். இவர்களது கோச வாசகங்களில் ஒன்று ‘லழர அநளளநன றiவா ய றசழபெ பநநெசயவழைn’ (‘நீ தப்பான தலைமுறையோட மோதிட்ட மாப்பு’) – அதன்படி தினமும் இளைஞர்கள் தமது ஆக்கபூர்வமான சிந்தனைகளோடும், செயற்பாடுகளோடும் ஆர்ப்பாட்டத்தைக் களைகட்ட வைக்கின்றனர். அதில் ஒன்றுதான் ப்ரொஜெக்டர் மூலம் ஜனாதிபதி செயலகத்தை ஒளிவெள்ளமாக்கியது. இதற்கு பொலிஸார் தடைவிதித்ததும், அடுத்த நாள் அதனை விடவும் அதிசக்தி வாய்ந்த வகையில் வானை முட்டும் வெளிச்சமாக ‘கோட்டாகோஹோம்’ பரவியது. அதுமட்டுமன்றி காலிமுகத்திடல் எல்லையை நியோன் விளக்குகளால் ‘கோட்டாகோஹோம்’ என அலங்கரித்துள்ளமையையும் காண முடியும். (படம் 17)
சட்ட உதவி முகாம் – இந்த முகாம் சட்டத்தரணிகளாலும், சட்ட மாணவர்களாலும் நடாத்தப்படுகின்றது. அவர்கள் எந்நேரமும் தம்மாலான சட்ட விளக்கங்களையும், உதவிகளையும் வழங்குவதற்கான தயார் நிலையில் உள்ளனர். இது தொடராக இருந்து வந்த நிலையில் தற்போது மற்றுமொரு நகரும் கெண்டயினர் வாகனத்தை மேடையாக்கி சட்ட உதவி அலுவலகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சட்;டத்தரணிகள் சட்டங்களைப் பற்றி ஒவ்வொரு தலைப்பிலும் மக்களுக்கு உரையாற்றி வருகின்றனர். அது மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் இங்கு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். (படம் 18)
ஊடகம் – ஆர்ப்பாட்டங்கள் நடக்கவாரம்பித்ததிலிருந்து பல்வேறு இடங்களில் ஊடகவியலாளர்கள் பலர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இதனைக் கண்டித்தும், ஏற்கனவே கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதிகோரியும்
கோட்டாகோகமவில் பல வாசகங்கள் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு முகாம் அமைத்து உள்ள10ர் மற்றும் சர்வதேசத்திற்கு அங்கு நடக்கும் சம்பவங்களை எத்தி வைக்கின்றனர். அத்துடன் ஊடகவியலாளர்களாக தாம் மாற்றத்துக்கு என்ன செய்யலாம், என்பது உள்ளடங்கலாக பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்களும் தினமும் நடந்து வருகின்றன. (படம் 19)
காணாமலாக்கப்படல் மற்றும் கொலைகளுக்கான நீதியை நிலைநிறுத்தக் கோரும் முகாம் – இதில் பல்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு அரசாங்கங்களாலும் அடக்குமுறைக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட மக்களது தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கான நீதியைக் கோரி இங்கே முகாமிட்டுள்ளனர். (படம் 20)
பொதுவாக சமூகத்தில் வெளிப்படையாக நடமாடும் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட மக்கள் – மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக வாய்பேச முடியாத மற்றும் செவிப்புலனற்ற மாற்றுத் திறனாளிகள் இணைந்து முகாமிட்டு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். பலர் சக்கரநாற்காலிகளில் அமர்ந்தும் ஆர்ப்பாட்டத்திற்கு வருகின்றனர். அதேபோன்று பால், பால்நிலை, பாலியலீர்ப்பு காரணமாக ஒடுக்கப்படும் குயர் சமூகத்தினரும் வெளிப்படையாக வானவில் கொடியுடன் போராட்டங்களில் ஈடுபடுவதனை அவதானிக்க முடிந்தது. மேலும், அபாயா, ஹிஜாப் அணிந்து முஸ்லிம் இளம் பெண்கள் தனியாகவும், கூட்டாகவும் சனத்திரளுக்குள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது. தமது அடையாளம் பற்றிய எதுவித பயமுமின்றி ‘இந்த இடத்தில் மிக சுதந்திரமாக உணர்கிறோம்’ என அவர்கள் தெரிவித்திருந்தனர். அத்தோடு வேடுவ சமூகத்தைச் சேர்ந்த ஆதிக்குடிகளும் இயற்கை வளங்களை இந்த அரசு சுரண்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்போராட்டங்களில் பங்கெடுத்திருந்ததை காண முடிந்தது. (படம் 21,22)
ஜனாதிபதி செயலகத்தின் ஒரு பகுதியில் ஏறியமர்ந்து ‘கோட்டாகோஹோம்’, ‘திருடிய காசைத் திருப்பிக் கொடு’, ‘அண்ணா சுனாமி- தம்பி கொரோனா’ என்பவை உள்ளடங்கலாக கோஷங்களை எழுப்பும் குழு – எந்தவொரு நேரமும் ஓய்வின்றி மாறிமாறி இந்த இடத்தில் ஆர்ப்பாட்ட கோசங்கள் ஒலித்த வண்ணமேயுள்ளன. (படம் 23)
எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயக்க சிலைக்கு முன்னால் இடம்பெறும் நிகழ்வுகளும், உரைகளும் – அன்றாடம் வௌ;வேறு குழுக்கள் இங்கு உரைகளை நிகழ்த்துகின்றன. பொதுவாக காலிமுகத்;திடல் பக்கமாக வரும் மக்கள் வந்து இணைந்து கொள்ளும் ஆரம்பப் புள்ளியாக இது காணப்படுகின்றது. (படம் 24)
மக்கள் பாராளுமன்றம் – இது இருநாட்களுக்கானதாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் மக்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்வதாகும். அதாவது எதிர்காலத்தில் வரக்கூடிய அனைத்து அரசாங்கங்களும் மக்களுக்குப் பொறுப்புச் சொல்லக் கூடிய வகையில் ஒரு ஆணையைப் பிறப்பிப்பதாகும்.
‘வடக்கிலுள்ள தமிழர்கள் நீண்ட காலமாக அனுபவித்த வலியை தற்போது தெற்கிலுள்ள மக்கள் உணர்கிறார்கள். பசியை நாம் இப்போது உணர்கிறோம். அவர்கள் பசியை எப்போதோ உணர்ந்தவர்கள். மலையக மக்களும் கூட. இப்போது அந்த பசி எமது வயிற்றைத் தாக்குகிறது. எனவே இப்போது நாம் போராடுகிறோம்.’ ஒரு பங்குபற்றுநர் (13.4.2022)
வுநயஉh ழரவ ளநளளழைn (போராட்ட களத்தில் வகுப்புகள்)- போராட்டத்துக்கு மத்தியில் உரிமைகள் சார்ந்த கற்பித்தல் வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இது சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் இணையும் மக்களோடு ஆரம்பிக்கப்பட்டு இன்று
கோட்டாகோகமவிலும், இடம்பெறுகின்றது. உதாரணமாக, அரச வன்முறையும், பயங்கரவாத தடைச்சட்டமும், ஆர்ப்பாட்டங்களின் வரலாறு, இலங்கையில் இனத்துவ வரலாறு, பாரிய அளவிலான ஊழல் எம்மை எவ்வாறு பாதிக்கின்றது? நாம் அதற்கு என்ன செய்யலாம், இலங்கையில் பெண்களது தொழில் உரிமைகளும், பொருளாதார நெருக்கடியும், சுதந்திர வர்த்தக வலையத்தில் பெண் தொழிலாளர்கள்: நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு போன்ற தலைப்புகளில் இவ்வகுப்புகள் இதுவரை இடம்பெற்றுள்ளன.
கொள்கைத் திட்டமிடலுக்கான முகாம்- இதில் மக்கள் அரசு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தமது அபிலாஷைகளை எழுதிப் பெட்டியில் இடுகின்றனர். இவற்றைச் சேகரித்துப் பரிந்துரைகளை அரசியல் கட்சிகளிடம் கையளிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
மக்கள் பல்கலைக்கழகம் – இது பிரசைகளால் உருவாக்கப்பட்ட சுதந்திரமான ஒரு தளமாகும். இங்கு பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. உதாரணமாக, இலங்கையில் தற்போது நிலவி வரும் சுகாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் என்பன எதை நோக்கியவை? அஹிம்சைப் போராட்டத்தின் மூலம் அரசியல் மாற்றத்தை அடைய முடியுமா? புதியதொரு அரசியல் மொழியையும், சின்னங்களையும் விருத்தியாக்கல் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. (படம் 25)
தாய்-சேய் பராமரிப்பு முகாம் – போராட்டத்தில் குடும்பங்களாக இணைந்து கொள்கின்றனர். பல சிறுவர்களைக் காண முடிகிறது. அவர்களை ஊக்கமுடனும், ஈடுபாட்டுடனும் வைத்திருப்பதற்காக பல தொண்டர்கள் முகாம்களில் அச்சிறுவர்களுடன் நேரத்தைச் செலவிடுகின்றனர். இங்கு சில செஸ் போன்ற பலகை விளையாட்டுகள், நிறங்கள், நிறந்தீட்டுவதற்கான காகிதங்கள் போன்றன வைக்கப்பட்டுள்ளன. தாய்மார் அமர்வதற்கு கதிரைகளைக் கொண்ட முகாமாகவும் இது காணப்பட்டது. (படம் 26)
ரணவிரு முகாம் – யுத்த இராணுவவீரர்கள் – மாற்றுத்திறனாளிகளான இவர்கள் தமது நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றியதாகவும், தற்போது கோட்டாவிடமிருந்து காப்பாற்ற வேண்டிய தேவையுடையதாகவும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தினைச் செய்கின்றனர்.
கலாசார நிகழ்வுகள்
அன்றாடம் பல்வேறு வகையான கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. பறை அடித்து மக்களைக் கவர்ந்து அதன்பிறகு அரசுக்கெதிரான உரைகள் ஆற்றப்படுகின்றன. நாடகங்கள், போராட்ட உணர்வுடனான பாட்டுகள் என்பனவும் இசைக்கப்படுகின்றன. (படம் 27)
பாதையெங்கும் சேர்ந்து நின்று மக்கள் போராடுகின்றனர். (படம் 28)ஆங்காங்கே ‘கோட்டாகோ’ ஓவியங்கள் காணப்படுகின்றன. அங்கு வருவோர் தமது கருத்தை பதிவதற்கான நீண்ட பதாகையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. (படம் 29)
இங்குள்ள மக்கள் மத்தியில் அரசுக்கும் அதன் முறைகேடான ஆட்சிக்கும் எதிராக கடுமையான கோபமும், விமர்சனமும் காணப்படுகின்றபோதும், போராட்ட வழிமுறைகள் அனைத்தும் வன்முறையற்ற முறையில் செய்யப்படுகின்றன. வித்தியாசமான வாசகங்களையும், ஓவியங்களையும், காண்பிய நிறுவுதல்களையும் கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் வந்து இணைந்து கொள்ளும் இந்தப் போராட்டங்கள் ஏனைய மக்களுக்குத் தொந்தரவு செய்யும் வகையிலோ அல்லது போராடுபவர்களது பாதுகாப்புக்கு அச்சம் தரக்கூடிய வகையிலோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்களால், போராட்டக்காரர்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்படுகின்றன. ‘யாராவது உங்களைத் தாக்கினால், உங்களைப் பார்த்துக் கத்தினால் தயவு செய்து எதிர்வினையைக் காட்ட வேண்டாம். மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தின் பொலிஸூக்கு அறிவிக்கவும். அத்தனையையும்; படம் எடுக்கவும். திறக்கப்பட்ட போத்தல்களிலிருந்து தண்ணீரை அருந்த வேண்டாம். போராட்டம் வெல்லட்டும்.’
குறிப்பு- இவை தவிரவும் அரசுக்கு எதிராக இந்த கோட்டாகோகமவில் அன்றாடம் வேறும் பல நிகழ்வுகளும், முகாம்களும் இடம்பெறுகின்றன. இது முழுமையான பதிவொன்றல்ல.
வேறு இடங்களில் கோட்டாகோகம
தற்போது (26.04.2022) காலி, கண்டி, நீர்கொழும்பு, அனுராதபுரம், புத்தளம் போன்ற பல இடங்களில் கோட்டாகோகம கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காலியில் 17.04.2022 இக்கிராமம் மக்களால் தொடங்கப்பட்டதும், பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானது. ஆனாலும் மக்களின் குரல் ஓங்கி ஒலித்தமையால் சட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டனர். இன்று தொடர்ச்சியாக காலி, கண்டி போன்ற இடங்களில் இவை கோட்டாவை வீட்டுக்குப்போகச் சொல்லி தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.
ஏனைய போராட்டங்கள்
ரம்புக்கனை
ரம்புக்கனையில் 19.04.22 அன்று சுமார் 15 மணித்தியாலங்களாக எரிபொருளுக்காக மக்கள் போராடிய நிலையில், பாதையில் டயர்களைப் போட்டு மக்கள் வீதித் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். எரிபொருள் விலையை 65சதவீதத்தால் அரசு அதிகரித்திருந்த நிலையில் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த சூழலில், இது ரம்புக்கனையில் தீவிரமடைந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது. இந்த அரச வன்முறைச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். உணவுப் பொருளுக்காகத் தெருவுக்கு இறங்கிய பொது மக்களைத் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காக்கியமை நாட்டில் அனைத்து மக்களிடையேயும் துயரையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. உடனடியாக பொலிஸாரை தம்முன் ஆஜராகும்படி மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்வழக்கைக் கையாண்டது.
ஜே.வி.பி இதே தினத்தில் கொழும்பில் (19.04.22) மூன்று தினங்களாக நடந்த நடைப்பயணத்தினை மொரட்டுவையில் இருந்து கொழும்பு நகரமண்டபம் வரை நடந்து அரசியல் கட்சியான ஜே.வி.பி முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்ததனைக் காண முடிந்தது. ஒரு பக்க பாதை முற்றாக மூடப்பட்டிருந்தபோதும், பொதுவாக பாதைகள் மூடப்பட்டால் அதிருப்தி அடையும் மக்கள் இந்த நடைபவனியின்போது பாதை இருமருங்கிலும் திரண்டு கைகளை அசைத்தும், வாகனங்களில் இருந்து ஒலி எழுப்பியும் தமது ஆதரவினைத் தெரிவித்திருந்தனர். (படம் 30)
அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்;டு ஊர்வலம்: (19.04.2021) இதே தினத்தில் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் சங்கமானது ஊர்வலமொன்றை ஏற்பாடு செய்து பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் கோட்டாகோகம வினை வந்தடைந்திருந்தது.
பிரதமர் மகிந்தவின் வாசஸ்தலம் முற்றுகை – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (ஐருளுகு) ‘கோட்டாகோகம’ விலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொள்வதாக நடைப்பயணத்தை ஆரம்பிக்கவிருந்தது (24.04.22) இந்நிலையில் கொழும்பு, புறக்கோட்டை புகையிரதநிலையத்திலிருந்து பவனி வரவிருந்த அத்தனை வழிகளையும் இரும்புக் கம்பிகளாலும், முள்பதித்த கம்பிகளாலும் அரசு தடைசெய்திருந்தது. இதன் விளைவாக தமது பயணப்பாதையை மாற்றிய ஐருளுகு நேரடியாக பிரதமரின் விஜேயராமவிலுள்ள வாசஸ்தலத்தை நோக்கி பவனி சென்றதுடன், அவ்வீட்டை முற்றுகையிட்டது. சில மணித்தியாலங்கள் அங்கிருந்து கோசம் எழுப்பி, பின்னர் மதில் சுவரில் ஏறிய சில மாணவர்கள் இந்த அரசின் மோசடிகளைப் பற்றி உரை நிகழ்த்தியிருந்தனர். மாணவர்கள் அவ்வீட்டு மதில் சுவரில் போராட்ட வாசகங்களை எழுதியிருந்தனர். அதில் பின்வரும் வசனம் குறிப்பிடத்தக்கதாகும்.’த்ரிமா இங்கிருந்தார்’. (படம் 31)
1988ஆம் ஆண்டு பல்கலைக் கழகங்களை தனியார் மயப்படுத்துவதை எதிர்த்து வீராவேசமாக முன்னிலையில் நின்ற மருத்துவபீட மாணவனான பத்மஸ்ரீ த்ரிமாவிதான அன்றைய ஜே.ஆர் அரசால் படுகொலை செய்யப்பட்டார். இன்று, சுமார் 3 தசாப்தங்களிற்குப் பிறகு மாணவர்களால் போராட்டத்தின் போது அவர் நினைவு கூரப்பட்டமையும், நடைபவனியில் அவர்கள் ‘நாம் செல்லும் பாதை எந்தப் பாதை? த்ரிமா சென்ற பாதை’ என்று கோசமிட்டபடியே நடந்து சென்றமையும் வரலாற்றை மீட்டும் முக்கிய நினைவாக இருக்கிறது.
‘நாகி மைனா கோஹோம’; – பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என தன்;னந்தனியே ஒரு பெண் பிரதமர் இல்லமான அலரி மாளிகையின் முன் கொடிபிடித்து நின்றிருந்தார். (24.4.22) பின்னர் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டியதொரு குழு இம்மாளிகைக்கு முன்ன மரணச் சடங்கை நடாத்தி வெள்ளையில் இரத்தம் தோய்ந்தவாறான பல கொடிகளை ஏற்றி விட்டுச் சென்றமை உள்ளடங்கலாக, பலகுழுக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் (26.4.22) நாகி மைனா(மகிந்த ராஜபக்ஷ வுக்கான பட்டப்பெயர்) வீட்டுக்குப் போ என்று ‘மைனாகோகம’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (படம் 32)
அரசுக்கு சார்பாக நடந்த ஆர்ப்பாட்டங்கள்
பௌத்த பிக்குகள், சிறுவர் பிக்குகள் உள்ளடங்கலாக பௌத்த அரசே எமக்கு வேண்டும் என்று பதாதைகளை ஏந்தி ஊர்வலம் சென்றிருந்தனர். அநுராதபுரம், சிலாபம், கொழும்பு சுதந்திர சதுக்கம் போன்ற இடங்களில் ஒப்பீட்டளவில் மிகமிகச் சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் அரசசார்பு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தபோதும், மக்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டதுடன், சிலாபத்தில் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்னர்.
கவனிகக்கத் தக்க சமகால நிகழ்வுகள்
இவை தவிரவும் பொதுவான விடயங்களாக, இந்;த நாட்களில் சட்டத்தரணிகளின் முனைப்பான தன்னார்வத்துடனான செயற்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருக்கின்றன. அதேபோன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு மிகவும் ஊக்கமளிக்கின்றவையாக உள்ளன. பொதுவாக இத்தகைய சூழ்நிலைகளில் அதிகாரமாகச் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ‘கோட்டாகோகம’ காலிமுகத்திடலினைப் பொறுத்தளவில் அமைதியாவும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சுமுகமான உறவைப் பேணுபவர்களாகவும், ஒரு சிலர் தாமும் இதற்கு முழுமையான ஆதரவைத் தெரிவிப்பவர்களாகவும் இருக்கின்றனர். ஒரு பொலிஸ் அதிகாரி வெளிப்படையாக இப்போராட்டத்தில் இணைந்து கொண்டமையால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை முன்னர் அதிகாரத்தின் மீதிருந்த பயம் நீங்கி தற்போது நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களிலேயே மிகத் துணிச்சலாகவும்,
வெளிப்படையாகவும் ராஜபக்ஷ குடும்பத்தின் பதிவுகளுக்கு எதிர்ப்பாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
கள விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களும், கலந்துரையாடலும்
1. ஜோசப் ஸ்டாலின் – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் (20.04.2022)
இன்றைய போராட்டத்தைப் பற்றிய உங்களது கருத்து என்ன?
கோட்டா, அரச இனவாதத்தை முன்கொண்டு வந்து வாக்குகளைப் பெற்று மக்களை ஏமாற்றிக் கொண்டு வந்தார். பொருளாதார நெருக்கடி வந்ததும்தான் அரசின் உண்மையான நிலை மக்களுக்குத் தெரிய வந்ததுள்ளது. இந்தச் சூழலில் பொதுவாக மக்கள் கோட்டாவுக்கு எதிராக வருகையில், மக்களது கோரிக்கைக்கு அமையச் செயற்படுவதை விட்டுவிட்டு அவரோ தனது நிலையை உறுதிப்படுத்தும் முயற்சிகளிலேயே இருக்கிறார். நேற்று, அமைச்சரவையை விலக்கியதும் ஒரு நாடகமே. தற்போது பெற்றோல், டீசல் பற்றாக்குறைக்கு எதிராக வீதிகளில் இறங்கி இலங்கை எங்கும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அவர் நினைத்த மாதிரி பதவியில் இருக்க முடியாது. மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அவர் நிச்சயமாக போகத்தான் வேண்டும். இங்கு மக்களை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு எங்களிடமே இருக்கிறது.
இந்த போராட்டம் தொடங்கி 10 நாளாயிற்று. இந்த போராட்டம் நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்குமா அல்லது போராட்டத்தின் அடுத்த கட்டம் எதுவாக இருக்கும் எனக் நினைக்கிறீர்கள்?
போராட்டத்தில் அனைவரது கோரிக்கையும் கோட்டா வீட்ட போகவேண்டும் என்பது மட்டும்தான். உண்மையில் ஜனாதிபதி முறையை இல்லாமலாக்க வேண்டும் என்பதோ 19வது திருத்தம் அல்லது 20வது திருத்தத்தை 21 இனைக் கொண்டு வந்து இல்லாமல் செய்ய வேண்டும் என்பதோ இங்கு உண்மையில் கோரிக்கைகளாக வைக்கப்படவில்லை. அந்தப் பொறுப்பு ஏனைய அமைப்புகளிடமே உள்ளன. கோட்டா வெளியேறு என்று சொன்னா போதாது. எப்படி வெளியேறுவது? அதற்கொரு பொறிமுறை இருக்கு. அரசியலமைப்பு இருக்கு. மக்கள், அரசியல் கட்சிகள் அனைவரும் திட்டமொன்றைச் செய்து செயற்படுத்த வேண்டும். 2015இலும் இப்படி ஒரு நிலை வந்தது. ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டு நல்லாட்சி அரசை சிவில் அமைப்புகள் கொண்டு வந்தன. அதில் 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் அவ்வரசு மக்களது அபிலாஷைகளுக்கு முரணாகவே நடந்தது. அதனாலேயே இந்த அரசு வந்தது. எனவே சரியானதொரு பொறிமுறையை அமைத்து எல்லோரும் போராட்டத்துடன் இணைந்தே இதனை செய்ய வேண்டும். தொழிற்சங்கமாக நாங்கள் இதனை முன்னெடுத்துச் செல்கிறோம்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தைப் பொறுத்தளவில் எது இடைக்காலத் தீர்வாக இருக்கலாம்?
ராஜபக்ஷ குடும்பம் வெளியேற வேண்டும். அரசியல் மாற்றம் வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இவ்வாசிரியர் சங்கமானது தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும் தொழிற்சங்கம். இதுவரை தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வு இதில் முன்வைக்கப்படவில்லை. இச்சூழலில், தமிழ் மக்களது காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்படல், அதிகாரப் பரவலாக்கல், அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினை என்பனவற்றுக்கு தீர்வு கி;ட்ட வேண்டும்.
இதில் பெரும்பான்மையின மக்களுடன் சிறுபான்மையின மக்கள் இணைந்து செயற்படுகின்றனரா?
உண்மையில் இப்போராட்டத்தில் தேசிய ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறார்கள். ராஜபக்ஷாக்கள் மக்களைப் பிரி;த்தனர் என்று கூறுகிறார்கள். ஆனாலும் அதற்கான தீர்வுகள் அங்கு இல்லை. அதனை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். இந்தப் போராட்டாத்தை யார் பொறுப்பெடுத்துச் செய்கிறார்கள் என்று பார்த்தால் மக்கள் சுயமாகவே வருகிறாரகள். இதனை இப்படியே முன்கொண்டு செல்லும்போது அதற்கான குழுவொன்றை அமைக்க வேண்டும். தமிழ் மக்களது கோரிக்கைகள், முஸ்லிம் மக்களது கோரிக்கைகள் என்னவென்று நாமே அவற்றை முன்வைத்து கொண்டு செல்ல வேண்டும். நாமே அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். கோல்பேஸ் போராட்டத்தில் அது வரும் என்று எதிர்பார்க்க கஸ்டம். அதனை நாம் வெளியே போராட்;டங்களை எடுத்து அப்போராட்டத்துடன் இணைக்க வேண்டும். அவ்வாறில்லாமல் இப்போது அதற்குள் நாம் இந்தப் போராட்டத்தைப் போட்டால் அது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம். அதனால் வெளியிலுள்ள அமைப்புகளிடமே இது சார்ந்த பொறுப்புண்டு.
நாம் என்று நாம் குறிப்பிடுவது தொழிற்சங்கங்கள் அல்லது இடதுசாரகள் அல்லது இடதுசாரி நோக்கங்களை உடையவர்கள். மற்றது இனங்களுக்கிடையே ஒற்றுமைக்காக வேலை செய்பவர்கள்.
கோட்டாபய மற்றும் ராஜபக்ஷாக்கள் தொடர்பாக ‘வீட்டுக்குப் போ’ என்று இங்கு கோசமிடப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் போர்க்குற்றவாளிகள் என்ற கருத்திருக்கிறது. இதனால் தமிழ் மக்களிடையே இப்போராட்டங்களில் ஈடுபடுவதில் அச்சமும், நம்பிக்கையின்மையும் காணப்படுகிறது. இவற்றுக்கப்பால் இப்போராட்டத்தில் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொள்வதாயின் அதற்கு என்ன செய்ய வேண்டும்?
தற்போதைய போராட்டாங்களை பலமுறை வடக்கு, கிழக்கி;ல் ஏற்படுத்த முனைந்தாலும் அது சாத்தியப்படவில்லை. தமிழ் மக்களுக்கு இப்போராட்டத்தில் ஆர்வமில்லை. இங்கு வைக்கப்படுகின்ற கோரிக்கையில் அவர்களுக்கு ஒரு விருப்புமில்லை. ஏனென்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமது நிலை அதுதான் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இன்மையால் அவர்கள் இதில் ஈடுபடவில்லை. உதாரணமாக தமிழ் மக்கள் பெற்றோல் இன்றி வாழ்ந்தார்கள். சாப்பாட்டிற்கு பாரிய கஸ்டத்தை எதிர்கொண்டிருந்தார்கள். தற்போது சி;ங்கள மக்கள் எதிர்கொள்ளும் கஸ்டத்தை அவர்கள் ஏற்கனவே போர்ச்சூழலில் எதிர்கொண்டிருந்தார்கள். எனவே அவர்களுக்கு இந்த நிலமை அப்படியொன்றும் விசேடமாகத் தெரியவில்லை. ‘நாம் கஸ்டப்பட்டபோது நீங்கள் எதுவுமே பேசவில்லை. தற்போது நாங்கள் எப்படி இணைந்து கொள்வது’ என்பது அம்மக்களிடம் இருக்கலாம். அதனால்தான் தமிழ் மக்கள் பற்றிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டும், நாங்களும் முன்வந்து இக்கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். அதனையும் இந்;தப் போராட்டத்தில் இணைக்க வேண்டும்.
தேசியக் கொடியைப் போர்த்திக் கொண்டு இங்கு போராடுவதும் பிரச்சினைதான். ராஜபக்ஷ வந்ததும் தேசியக் கொடியைக் காட்டிக் கொண்டுதான். இதில் தமிழ் மக்கள் ஒதுங்கி இராமல் தமது கோரிக்கைகளைக் கொண்டு வந்து இதில் இணைக்க முடியுமாக எனப்பார்க்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்;தவர்கள் பல வருடங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். காணிப்பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற போராட்டங்களையும் செய்து வருகின்றனர். இப்போராட்டங்களை தற்போது நடைபெறுகின்ற போராட்டத்துடன் இணைக்க முடியுமா? அல்லது இப்போராட்டக்காரர்கள் அதற்கான இடமிருக்கிறது என்று பொதுவெளியில் தமது நல்லெண்ண சமிக்ஞையை வழங்குவார்களா? உங்களது பார்வை எவ்வாறு இருக்கிறது?
அதற்கான பாதையை நாங்கள் உருவாக்க வேண்டும். அவர்கள் அப்படி வரமாட்டார்கள். தமிழ் மக்களுக்கு ஆதரவான அமைப்புகளுக்கே அந்தப் பொறுப்புண்டு. அதற்கான பாலம் ஒன்றை உருவாக்க வேண்டும். மெல்ல மெல்ல அதனைச் செய்ய வேண்டும்.
தலைமைத்துவம் அல்லது கூட்டுத் தலைமைத்துவம் இன்றி இப்போராட்டத்தின் எதிர்காலம் என்னவாகும்?
அரசாங்கம் இப்போராட்டத்தினை இல்லாமல் செய்ய காத்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காலம் மட்டும்தான் தேவை. அரசு பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்க காரணம் சர்வதேச நிதியைப் பெறுவதற்காக. வேறு எதுவித காரணமுமில்லை. அவர்கள் நசுக்கவே பார்ப்பார்கள். இதனால் கோல்பேஸ் போராட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதற்கு வெளியே ஏனைய போராட்டங்களை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அதனை தொழிற்சங்களால் மட்டுமே செய்ய முடியும். அதாவது வேலை செய்யும் மக்களால். அதனால்தான் வெளியே போராட்டங்களைச் செய்து அதனை இப்போராட்டத்துடன் இணைக்க வேலை செய்கிறோம். அந்த அடிப்படையில் 28.04.2022 அன்று முழு இலங்கையிலும் தொழிற்சங்கங்களது போராட்டங்களைச் செய்யவிருக்கிறோம். இளைஞர்களது போராட்டம் எங்களுக்கு முக்கியமானது. அதனைப் பாதுகாத்துக் கொண்டு நாங்கள் ஏனைய போராட்டங்களை வெளியில் இருந்துகொண்டு முன்னெடுக்க வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதி, மற்றும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு கொடுக்கப்பட்ட எதுவித வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இலங்கையில் நிரந்தர சமாதனத்திற்காக செய்யப்பட வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன?
அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசுதான் பிரச்சினைகளை உருவாக்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அரசின் ஊடாக இவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியது நாங்களே. இதே அரசியல்வாதிகளே மீண்டும் பதவிக்கு வரப் போகின்றனர். எனவே மக்களே அதனைக் கோரிப் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்போராட்டத்தின் ஊடாக ஒரு மூன்றாவது சக்தி உருவாக்கப்படல் வேண்டும். அது ஒரு அழுத்தக் குழுவாகத் தொடர்ந்து அனைத்து அரசாங்கங்கள் மீதும் அழுத்;தத்தைப் பிரயோகிக்கத்தக்கவாறு காணப்படல் வேண்டும். அதனையே நாம் எதிர்பார்க்கிறோம்.
2. மக்களுக்கான சட்ட உதவி முகாம் – ( டுயறலநசள கழசரஅ கழச வாந pநழிடந)- கொழும்பு பல்கலைக்கழக சட்ட மாணவி (20.04.2022)
நாம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள். இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காணப்படுகிறது. எனவே சட்ட மாணவர்களாக அரசியல் நெருக்கடி தொடர்பாக அதாவது ஜனாதிபதியின் பதவி, அவரை எவ்வாறு பதவி நீக்கலாம், அதற்கான சட்டச் செயன்முறைகள், மக்களது உரிமைகள், அரசு மக்களை நசுக்க முடியுமா என்பவை பற்றி மக்களுக்கு அறிவூட்ட வேண்டியுள்ளது. நாங்கள் இலவச கல்வியைப் பெற்றுக் கொள்கிறோம். எனவே அதற்குப் பிரதியுபகாரமாக மக்களுக்கு இச்சேவையைச் செய்ய முன்வந்திருக்கிறோம். அனைத்து அரசியல் உரிமைகளும் அரசியலமைப்பின் ஊடானவை என்பதுடன் அதனை மக்கள் அறிதல் வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் உங்களது எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கை என்ன?
இந்தப் போராட்டத்தைப் பொறுத்தளவில் பொறுப்புடமையும், வெளிப்படைத்தன்மையும் வாய்ந்ததொரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பது எதிர்ப்பார்ப்பாக உள்ளது. தற்போதைய அரசில் ஊழலும், அதிகார சமமின்மையும் காணப்படுகின்றது. இதன் காரணமாக மக்களது அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன. மக்களது உயிர் வாழ்வதற்கான உரிமை,
சட்டத்தின் கீழ் சமத்துவமான பாதுகாப்பு போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். எனவே மக்களுக்கு அரசை பதவி விலகும்படி அல்லது அம்மீறல்களை நிறுத்தும்படி கூறுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே நாமும் மக்களுக்கு ஆதரவளிக்க விரும்பினோம். வன்முறை இல்லாமல், சட்டம்பற்றிய அறிவை, அரசியலமைப்பு ரீதியாக, இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை அடைய முடியும் என்பது பற்றிய சட்ட அறிவை வழங்க விரும்பினோம். அதுவே எமது நம்பிக்கை.
இந்த அரசாங்கத்தை மாற்றுவதன் மூலம் இலங்கையின் நிலைமை சீராகிவிடும் என நினைக்கிறீர்களா?
இலங்கையில் மாறிமாறி அதுவே நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு அதுதான் தீர்வாக அமையும் என நான் நம்பவில்லை. அரசியல் கலாசாரம், மக்களது சிந்தனை, கருத்தியல்கள் என்பன மாறவேண்டும். மக்கள் தங்களது உரிமைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அரசியல்வாதிகள் ஊழலைச் செய்கையில் நாம் அதனைக் கண்டும் காணாமல் இருக்கிறோம். அப்படி இருக்க முடியாது. அவர்களைக் கேள்வி கேட்பது எமது பொறுப்பு மட்டுமல்ல கடமையுமாகும். எமது நாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. நாம் அலட்சியமாக கடந்து போக முடியாது.
இலங்கை பன்மைத்துவமான நாடு. இங்கு பெரும்பான்மையான சிங்கள மக்களே போராட்டத்தில் காணப்படுகின்றனரா?
நான் அப்படி நினைக்கவில்லை. இரவுகளில் முஸ்லிம்கள் உணவுகளை வழங்குகிறார்கள். தமிழ் மக்கள் உரைகளை நிகழ்த்தியிருந்தனர். இது உண்மையில் மிகவும் வரவேற்கத்தக்க வகையிலேயே இந்த இடத்தில் நிகழ்ந்து வருகிறது. அதேசமயம், இந்தப் போராட்டம் அனைவரதும் போராட்டம் என்பதில் எனக்கு ஐயமுண்டு. அதாவது இன்றளவும் பலபேர் இந்த நெருக்கடியினால் இன்னும் பெரியளவில் பாதிக்கப்படவில்லை. அவர்களும் நிச்சயமாக இந்நெருக்கடியினால் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பதனை உணர்ந்து இப்போராட்டத்தில் இணைந்து கொள்ளல் வேண்டும். ஏனைய சில சமூகங்களுக்கு மத்தியில் இப்போராட்டத்தில் இணைந்து கொள்வதில் பெரியதொரு ஆர்வமிருப்பதாக நான் உணர்கிறேன். அவர்களைஇங்கு வரும்படி மனப்பூர்வமாக அழைக்கிறேன். ஏனெனில் இந்நெருக்கடி இலங்கையில் ஒட்டுமொத்தமாக பாரியதொரு விளைவை ஏற்படுத்தப் போகிறது.
இந்தத் தளம் அனைத்து மக்களும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை, இடத்தைக் கொண்டுள்ளதா?
உதாரணமாகக் கூறுவதாயின் நாங்கள் 13வது திருத்தத்தினை அறிமுகப்படுத்தியிருந்தாலும் உண்மையில் அதனூடாக எதுவிதமான அதிகாரங்களையும் அரசு கைளிக்கவில்லை. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகார சமமின்மையால் பாரிய பாதிப்புக்குள்ளாக்கப்பட்டார்கள். நாம் அதனை மாற்ற விரும்புகிறோம். தற்போது எமக்கு முன்னுள்ள நெருக்கடியில் உடனடியாக நாம் மாற்றங்கள் அனைத்தையுமே செய்ய முடியாதுள்ளோம். ஆனால் நாம் இதனை இப்போது செய்வோமாயின் அடுத்த அரசாங்கத்தோடு நாம் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். ஆனால் நிச்சயமாக இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும். ஊழலற்ற அரசாங்கம் உருவாக்கப்படல் வேண்டும். அதிகார சமமின்மை காணப்படுவதனால் நாங்கள் சிறுபான்மை மக்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
இந்த நாட்டில் சிலர் இந்தப் போராட்டத்தில் இணைய ஆர்வம் காட்டவில்லை என்று சொன்னீர்கள். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்த நபராக இருக்கிறேன். அதேநேரம் சிறுபான்மை இனமக்கள் மீது பல துரதிஸ்டவசமான சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன என்பதனை நான் அறிவேன். பல சந்தர்ப்பங்களில் அவர்களது உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அவர்கள் இலங்கையர்களாக வாழ விரும்பினாலும் ஏனைய சமூகங்கள் அல்லது அரசியல்வாதிகள் அதற்கான இடத்தை வழங்கவில்லை. இப்போராட்டத்தில் இணைவதற்கான அழைப்பினை நான் விடுப்பதாயின் இந்த நெருக்கடி ஒரு சமூகத்தை மட்டும் தாக்கப் போவதில்லை. முழு இலங்கையையும் பின்வரும் ஒரு காலத்தில் தாக்கத்தான் போகிறது. எனவே உங்களது ஏனைய உரிமைகளுக்கான கோரிக்கைகளை பின்பொரு நேரத்தில் கேட்கலாம். இந்த சந்தர்ப்பத்தில் தமிழராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் எந்த நபரையும் இந்நெருக்கடி பாதிக்கும். இந்தப் போராட்ட களம் நீங்கள் தமிழ், முஸ்லிம், எந்நபராக இருந்தாலும், வர்க்க வித்தியாசமின்றி உங்களுக்கான பாதுகாப்பை வழங்கும். நாங்கள் இளைஞர்கள். ஏனைய அனைவரை விடவும் நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம்.
3. ஊடகத்துக்கான முகாம் -இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் (லுழரபெ துழரசயெடளைவ யுளளழஉயைவழைn ) (21.04.2022)
இங்கு அனைத்து ஊடகங்களும் இணைந்துள்ளன. இங்கு நடக்கும் விடயங்களை, இங்கு போராட்டக்காரர்களுக்கு ஏதும் சிக்கல்கள் எழுமாயின், அவற்றைப் பற்றி மக்களுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் தகவல் வழங்குவது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் தகவல்களை வழங்கல். ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பதே எமது நோக்காக இருக்கிறது. முதலாவது மிரிஹானை சம்பவத்திலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இருக்கிறோம். அன்று தாக்கப்பட்டதனை உடனே ஐஜீபிக்கு அறிவித்தோம். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் எழுதினோம். சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் அறிவித்தோம். அன்றிலிருந்து வீடு செல்லாமல் இந்த முகாமிலேயே தங்கி இருக்கிறோம்.
சமூக வலைத்தளம் இங்கு முடக்கப்பட்டதனைப்பற்றி முறைப்பாடு செய்துள்ளோம். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டமையினை அறிவித்தோம். ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு, ஒன்றுகூடுவதற்கான ஆணைக்குழு, கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கான ஆணைக்குழு என்பவற்றுக்கு முறைப்பாடு செய்துள்ளோம்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. அடிக்கடி எம்மைத் தொடர்பு கொண்டு இற்றைப்படுத்திக் கொண்டுள்ளனர். கனேமுல்ல முகாமைப் பற்றி அறிவித்தோம். அங்கு இராணுவ வீரர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் போன்று தயார் செய்து பிரச்சினையைத் தோற்றுவிக்க முயற்சி நடப்பதாக அறிவித்தோம். மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டது.
அனைத்து ஊடகங்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. சில ஊடகங்கள் அரச ஆதரவு ஊடகங்களாயினும் அதில் வேலை செய்யும் பலர் அரசுக்கு எதிராகவே இருக்கின்றனர்.
2015 இலும் மஹிந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் இன்று மீண்டும் பதவியில் உள்ளனர். இனி என்ன நடக்கும்?
ராஜபக்ஷ குடும்பம் பல கொலைகளைச் செய்தது. ஆயினும் ரணில், மைத்ரி அரசுகள் அவர்களை விசாரிக்காமல் புறக்கணித்தது. இப்போது ராஜபக்ஷ குடும்பத்தை விரட்டுவது மட்டுமல்லாமல் இனிவரும் அரசாங்கங்களையும் ஊழல் செய்யவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாது போனால் இந்த ஆர்ப்பாட்டத்தால் எதுவித பயனுமில்லை. அவர்கள் குற்;றமிழைக்காத அளவுக்கு மக்கள் அழுத்தம் காணப்பட வேண்டும்.
இந்தக் குடும்ப அரசு மிகப் பெரும் ஊழலைச் செய்துள்ளது. இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப மக்களால் முடியுமாயின் அடுத்த அரசையும் மக்கள் அனுப்புவார்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும்?
இன, மத, பால், சாதி என பிரித்;து ஆள்வது அரசாங்கத்துக்கு மிக சுலபம். இங்கு அந்த வித்தியாசங்கள் எதுவுமின்றி மக்கள் இணைந்துள்ளனர். ஈஸ்டர் சம்பவத்துக்கும், இந்த அரசுக்கும் தொடர்புண்டு என்பது அனைவரும் அறிந்த விடயம். அதனை நாங்கள் நன்கு ஆவணப்படுத்தியுள்ளோம்.
இப்போதைக்கு கோட்டாவும், ராஜபக்ஷ குடும்பமும் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான் அனைவருக்கும் பொதுவான கோரிக்கை. ஏனையவை ஒருவருக்கொருவர் மாறுபடலாம். அடுத்த நிலைப்பாடு என்ன என்பது பற்றி இன்னும் உரையாடலில்லை. ஏனைய கோரிக்கைகளுக்கு கலந்துரையாடல்கள் தேவை. இங்கு சுயமாக மக்கள் சேர்ந்து இயங்குகின்றனர். அங்குள்ள மக்களும் சுயமாகவே இணைந்து போராடல் வேண்டும்.
கோட்டாவை வீட்டுக்கு அனுப்பாமல் சிறைக்கனுப்புவதைப் பற்றி?
முதலாவது பதவியில் இருந்து நீக்குவது. அத்தோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். அது உள்ளகப் பொறிமுறையாகவோ, வெளியகப் பொறிமுறையாகவோ இருக்கலாம். தற்போதைய நிலை என்னவெனில் ராஜபக்ஷ குடும்பத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டதொரு தரப்புதான் ஊடகம். அவரது பெயரைச் சொல்வதற்கே பயந்ததொரு காலம் இருந்தது. முழுப்பெயரையும் சொல்லவே பயந்து ஒரு எழுத்தை மட்டுமே சொன்ன காலம் இருந்தது. ஆனால் இப்போது மக்கள் வீதிக்கு இறங்கி வீட்டுக்குப் போ என்று சொல்லுகின்றனர். அது மிகவும் சந்தோசமான விடயம். எனவே முதல் குறிக்கோள் அவர்களை அதிகாரத்திலிருந்து நீக்குதல்தான்.
இந்த இளம் ஊடகவியலாளர் சங்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்களுடன் இணைந்து வேலை செய்கிறோம். காணாமல் ஆக்கப்பட்டோருடைய விடயத்திலும் நாங்கள் வேலை செய்கிறோம். ஆனால் தற்போதைய உடனடித் தேவையாக இருப்பது இவர்களை வீட்டுக்கு அனுப்புவது.
இங்கு ஒரு தலைமைத்துவத்தை அல்லது கூட்டுத் தலைமைத்துவத்தைக் காணவில்லை. இதன் எதிர்காலம்?
இப்போதுள்ள நிலைமை இங்குள்ள அனைத்து குழுக்களும், முகாம்களும் சின்ன சின்ன ஒழுங்குபடுத்துநர்களால் நடாத்தப்படுகின்றன. அந்த குழுக்களை நிர்வகிப்பவர்கள் ஒன்றிணைந்து சின்னச் சின்ன கலந்துரையாடல்களை இரவுகளில் வைக்கிறோம். இப்போராட்டத்தை இல்லாமல் செய்வதற்கு அரசால் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எனவே அதனை முறியடிப்பதற்காக எவ்வாறு கவனமாக செயற்படுவது என கலந்துரையாடப்படுகிறது. எங்களது குறிக்கோள் ஆட்சியலிருந்து இவர்களை நீக்குவது. இப்போதைக்கு, ஒன்றுபட்ட நிலைப்பாடு அதுவே. அவர்கள் போனதுக்குப் பிறகு என்ன என்பதற்கு, அரசியலமைப்பின் படி ஜனாதிபதி நீக்கப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று உள்ளதோ அதன்படி செயற்பட வேண்டும். அதற்கும் புதிய அரசாங்கத்துக்கும் நாங்கள் அழுத்தம் கொடுப்போம். அதிகாரங்களைப் பகிர்தல் வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படல் வேண்டும்.
வடக்கு மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமைக்கு நியாயமான காரணங்கள் உண்டு. கோட்டா பதவியிலிருந்து நீங்குவதால் வடக்கு மக்களுடைய பிரச்சினை தீரப் போவதில்லை. அதற்கு அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியை நீக்கல் போன்ற இதற்கு அடுத்ததாகவுள்ள படிமுறைகள் நடந்தால்தான் அவர்களது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். எனவே இவரை அனுப்புவதால் எமக்கு ஒரு மாற்றமும் கிட்டப் போவதில்லை என்ற எண்ணம் எவருக்கும் வரலாம். அது நியாயமான நிலைப்பாடு. ஏனெனில் அவர்கள் இத்தனை காலமாகப் போராடி வந்துள்ளனர். அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முதல், இப்போது நாங்கள் இவரை வீட்டுக்கு அனுப்புவதைச் செய்ய வேண்டும்.
4. பெண்ணிலைவாதிகள், செயற்பாட்டாளர்கள், கோட்டாகோகம பங்குபற்றுநர்களாக இருந்த மூவருடனான குழுக் கலந்துரையாடல் (21.02.2022)
நாம் கோட்டாகோகமவில் அமர்ந்திருக்கிறோம். இங்கு நடைபெறுபவற்றைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
1வது நபர்: இக்கிராமம் திடீரென தோன்றியதல்ல. இது விவசாயிகள், ஆசிரியர்கள், மீனவர்கள், மெழுகை ஏந்திப் போராடிய சிறு குழுக்கள் என்பவற்றின் தொடர்ச்சியே இது. மிரிஹான சம்பவம் இதற்கான திருப்புமுனை. இதனை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. என் வாழ்வில் நான் முன்னெப்போதும் கண்டிராத ஒரு நிகழ்வு இது. அது மிக அபூர்வமானது. இது எண்ணிக்கையிலும் சரி, இதில் ஈடுபட்டுள்ள நபர்களிலும் சரி இது மிக வித்தியாசமானது. வெளியிலுள்ள பலர் கூறுவது போலன்றி இங்குள்ளவர்களுடன் பேசத் தொடங்கினால் அவர்கள் குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல என்பதனை தெளிவாக அறியலாம். இது ஒரு கலவையான மக்கள் கூட்டம். உதாரணமாக 14 இளம் பெண்கள் நடுத்தெருவால் ‘கோட்டா கோ ஹோம்’ என சத்தமாக, உற்சாகத்துடன் கோசமிட்டுக் கொண்டு வந்தனர். அவர்கள் இதற்காகவே காலியிலிருந்து இரண்டு வேன் பிடித்து வந்திருந்தனர். உண்மையில் எங்களுக்கு இதற்கான ஒரு வடிவமைப்பு முறையியல் இருக்கிறதா என்றால் இல்லை. இதனை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. இங்கு கேஸ் இல்லை என்பதால் மட்டும் மக்கள் வரவில்லை. ஊழல் பற்றியும், இலங்கை அரசியல் நிலை பற்றியும் ஆழமாக உணர்ந்து கொண்டதனாலேயே இங்கே வந்துள்ளனர். இது வெறுமனே ராஜபக்ஷ குடும்பத்தின் மீதான வெறுப்பு மட்டுமல்ல.
2வது நபர்: நான் காலையில் அல்லது மாலையில் வருவதுண்டு. இது மக்கள் போராட்டமாக இருக்கிறது. இது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இது வெறுமனே பதாகைகளை ஏந்திக் கொண்டு நிற்கின்ற ஆர்ப்பாட்டமாக இல்லாமல், கற்றலுக்கும், கற்றவற்றை கேள்விக்குள்ளாக்கி மீள்கற்றலுக்குமான இடமாக இருக்கிறது. இது ஆர்ப்பாட்டம் எவ்வாறு செய்யப்படலாம் என்ற சிந்தனையை மாற்றியுள்ளது. பிளாஸ்ரிக் போத்தல்கள், சுவர் சித்திரம்- யாரும் ஒரு தூரிகையை எடுத்து எதுவும் எழுதலாம், வரையலாம், பறை அடித்தல், நாடகம், கலந்துரையாடல்கள் என வித்தியாசமான நிகழ்வுகள் மூன்று மொழிகளிலும் நடக்கின்றன. ஆயின் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அதிகமாக உள்ளன. இந்த இடம் இளைஞர்களால், மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலேயே நடாத்தப்படுகிறது என்பது உண்மையல்ல. இது கோட்;டா சார்பு தரப்பால் பரப்பப்படும் கருத்தாக இருக்கிறது என்பது இங்கு வந்து பார்த்தால் தெரியும்.
இங்கு கூறப்படும் கருத்துகளை அல்லது கோசங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம். ஒன்று, சமூக, பொருளாதார காரணங்கள். அதாவது விலைவாசி உயர்வு, கேஸ் இல்லை, பெற்றோல் இல்லை போன்றன. அடுத்தது, அரசாங்கத்தைப் பற்றியது- கோட்டா வீட்டுக்குப்போ என்பது. ஆனால் இன்று அது இன்னும் வளர்ச்சி கண்டு ‘கோட்டா சிறைக்குப் போ’ என்று
சொல்லப்படுகிறது. மூன்றாவது, ஆட்சி பற்றியது. அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியலமைப்பு திருத்தங்கள் போன்றன. இனத்துவ அடையாளங்கள் பற்றிய கருத்துகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் அடையாளங்கள், தேசிய ஒற்றுமை பற்றியன. இங்கு இது பற்றி உரையாடக்கூடிய தளமொன்று காணப்படுகிறது. அது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மக்கள் ஏன் இத்தனை காலமாகப் போராடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். பெற்றோல் இல்லை என்றதும் தமிழ் மக்கள் எப்படி அவற்றுக்கு ஏற்கனவே முகங்கொடுத்தார்கள் என்பதைப் பற்றி கதைக்கிறார்கள். இன்று போராட்டம் நடக்கும் இந்த இடத்தில் கிட்டத்தட்ட 66 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்களால் அஹிம்சா முறையில் நடத்தாப்பட்ட போராட்டத்தில் எவ்வாறு அவர்கள் தாக்கப்பட்டார்கள் என மக்கள் தற்போது அறிந்து கொள்கிறார்கள். பண்டாரநாயக்க, செல்வநாயகம் ஒப்பந்த்தின் விளைவாக என்ன நடந்தது என்று இந்த வரலாற்றைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் இதனைத் தேடிக் கற்றுக் கொள்கின்றனர். இந்த கோட்டாகோகம அதற்கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் நிறைய நடக்கவேண்டியுள்ளது. ஆனால் முயற்சி என்பது நிச்சயமாக இருக்கிறது.
இந்த ‘கோட்டாகோகம’ இங்கு மட்டுமன்றி தற்போது காலி, பொலன்னறுவை, கண்டி போன்ற இடங்களிலும் பரவியுள்ளன. இங்கு போல் கூடியஅளவு மக்கள் இன்மையால் அங்கே தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. இங்கே அதற்கு பொலிஸார் துணிய மாட்டார்கள்.
நான்காவது விடயம், ராஜபக்ஷ குடும்பத்தினர் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்பது.
3வது நபர்: உண்மையில் மக்களை இங்கே வரச் செய்வதும், இங்கேயே தங்கிவிடச் செய்வதும் என்ன என்று நான் யோசிக்கிறேன். ஆரம்பத்தில் ஒரு 5000 போல் மக்கள் திரண்டனர். நாங்கள் வருவதும் போவதுமாக ஆரம்ப ஓரிரு நாட்களில் ஒன்று கூடியிருந்தோம். பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களை ஒரு இடத்தில் ஒன்றுகூடி நடாத்துவோம் என்று இங்கு சந்தித்தோம். அதேவேளை அவசரகால நிலைமை, ஊரடங்கு என்பன பிரகடனப்படுத்தப்பட்டதும் மக்கள் பதட்டமடைந்தனர். திங்கட் கிழமை வந்ததும், இனி நாங்கள் போகப்போவதில்லை என்று நிலைமை மாறியது. கொழும்பு 7 இல், வானைமுட்டும் வசதியான கட்;டிடங்களில் வாழ்பவர்கள் கூட தங்களது இல்லங்களை விட்டுத் தெருவுக்கு இறங்கினார்கள். அந்த மாயக் கணம் தோன்றியது.
சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் வந்த மக்கள் திங்கள் முதல், மழையையும் பொருட்படுத்தாமல் தங்கவாரம்பித்தனர். இந்த இடம் மக்கள் தமது அழுத்தத்தினை வெளிப்படுத்தவும் வருகின்றனர். பலவிதமான மக்கள் வருவதை நீங்கள் அவதானிக்கலாம். முதல் இரு நாட்களில் முகாம்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன என்றும் பார்க்கலாம். சிலர் 5 தண்ணீர்ப்போத்தல்களோடு வந்தனர். ஒரு பெட்டி பனிஸ் உடன் வந்தனர். சிலர் ஒரு லொறி தண்ணீர்ப் போத்தல் கொண்டு வந்தனர். இப்படியானதொரு அபூர்வமான கணத்தை சுனாமியின் பின்னர் நான் கண்டதில்லை. சுனாமி பல வடுக்களை ஏற்படுத்தியிருப்பினும், அப்போது ஒவ்வொருவராலும் எவ்வளவு முடியுமோ அதனை அவர்கள் சமூகமாக ஒன்றுபட்டு திரட்டினார்கள். இந்தப் போராட்டம் அரசியல் சார் முறையில் இது ஒழுங்கமைக்கப்படவில்லை. இது அரசியல் கட்சிகள் சார்ந்ததல்ல என்பதைக் குறிப்பிடுகையில் அரசியல்வாதிகளுக்கு எதுவும் புரிவதாகத் தெரியவில்லை. எவ்வாறு அரசியல் கட்சி சார்பற்று இவ்வளவு மக்கள் சுயமாக வர முடியும் என்பதனை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அரசியல் வட்டத்தில் , அரசசார்பற்ற நிறுவனங்களுக்குள்ளும் கூட நன்கு பழக்கப்பட்ட ஆணாதிக்க கட்டமைப்பு முறைகளை இங்கு காணாமல் அவர்கள் திக்கித்து நிற்கின்றனர். அந்த அதிகாரக்
கட்டமைப்பைக் காணாமல் இந்த விடயத்தில் தமது இடம் என்ன என்பதனையிட்டு குழம்பியுள்ளனர். அதனை அவதானிப்பது மிக சுவாரசியமாக உள்ளது.
1வது நபர்: இனத்துவ அடையாள விடயத்தை எடுத்துக் கொண்டால் மக்கள் எவ்வாறு இந்த இன அடையாளங்கள் பாவிக்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் கூறுவதைக் கேட்பது ஆச்சரியமாக உள்ளது. அனைவரும் அரசியல்வாதிகளால் நாம் பிரிக்கப்பட்டோம், ஆனால் இனி அது நடக்காது என்று கூறுகின்றனர். இது எவ்வாறு கொள்கையாக்கங்களில் உள்வாங்கப்படப் போகிறது அல்லது மக்களுடைய வாழ்வில் பிரதிபலிக்கப் போகின்றது என்பதனைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும். தொடர்ச்சியாக நாம் பிரிக்கப்பட்டோம். ஆனால் இனி அவ்வாறு நடக்க விடமாட்டோம் என்று பலரும் கூறுவதைக் கேட்கையில், நெகிழ்வாக இருக்கும் அதேநேரம், இது நிலைத்திருக்குமா என்பதும் தெரியாதுள்ளது. இதனை எவ்வாறு புரிந்து கொள்வது? ஒரு வேளை எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இப்படியானதொரு பிரதிபலிப்பு வருவது மிக முக்கியமானது என்றே கருதுகிறேன்.
2வது நபர்: அது மிக முக்கியமான விடயம். ஏனெனில் எமது வரலாறு, நிறுவனமயப்படுத்தப்பட்ட கல்விமுறை –பாடசாலை அல்லது பல்கலைக்கழகம் எதுவாயினும், ஊடகங்கள் கூட இவற்றை தொடர்ச்சியாக புறத்தொதுக்கியுள்ளன. இந்த வேளையில் இனங்களைப்பற்றி இன ஒற்றுமையைப் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்பு தன்னிச்சையாகவே இங்கு எழுந்துள்ளது. அவை ஆழமான கலந்துரையாடல்களாக மாற்றப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
கோட்டா அல்லது ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவி விலக்கப்பட்ட பின்னர் என்ன நடக்கும்?
1வது நபர்: இதுவொரு விடையில்லா கேள்வி. இதுவரை காலமும் நடந்த போராட்ட வரலாறுகள் -அரபு வசந்தம், போன்றன இவ்வகையான மக்கள் போராட்டங்கள் எப்போதும் நிரந்தரமான நீண்ட கால தீர்வுகளை வழங்குபவனவாக இருக்கவில்லை என்பதையிட்டு நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன். முடிவில், ‘தியவன்னவுக்கு அப்பாலுள்ள அதிகாரம்’ என்று சுலோகத்தை ஏந்தியுள்ளனர். ஆனால் கடைசியில் பாராளுமன்றில் உள்ளவர்களே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இது மக்களன்றி சிவில் சமூகமாக நாங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. மக்கள் மீதே அத்தனையையும் எதிர்பார்ப்பது அவர்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தும்.
3வது நபர்: வேறும் பல போராட்டங்கள் இடம்பெறுகின்றன. மக்கள் இங்கு பல காரணங்களுக்காக ஒன்றுபடுகின்றனர். செல்வந்தர்கள், கார்ப்பரேட்காரர்கள், ஐவுகாரர்கள், இன்னும் பலர் டொலர்களை திருப்பிச் செலுத்தும் படி கேட்கிறார்கள். அது முடிவுக்கு வரக் கூடும். பின்னர் அவர்களே மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து திட்டக் கூடும். வேறும் சிலர் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக தொடர்ந்தும் போராடுகின்றனர்.
1வது நபர்: உண்மையில் இப்போராட்டம் 21ஆம் திருத்தத்தைச் செய்ய வேண்டும் என அழுத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அரசாங்கம் அழுத்தத்தை உணர்கிறது. ‘கோட்டா செல்லும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு அகல மாட்டோம’; என்கிறது மற்றுமொரு பதாகை. எனவே இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் அழுத்தத்தை பிரயோகிக்கின்றனர். உண்மையில் இறுதியில் இது அரசியல் கட்சிகளுடைய பொறுப்பாகும். இதே பொறுப்பற்ற நிலை அடுத்த அரசாங்கத்திலும் தொடருமா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.
3வது நபர்: அதேவேளை எதிர்க்கட்சிகள் ஏதோ காரணங்களுக்காக அரசியல் செய்கின்றன. மக்களைப் போல அவர்களும் பாராளுமன்றத்துக்குள் பதாதைகளை ஏந்திப் போராடுகின்றனர். இது நகைப்புக்குரியது. உண்மையில் அவர்கள் திட்டவட்டமான முடிவுகளுக்கு வர முடியும்.
ஆனால் அதனை அவர்கள் செய்வதாக இல்லை. இதுதான் பிரச்சினை. நாம் இடைக்கால அரசாங்கத்தை நிறுவப் போனாலும், மறுபடியும் இதே அரசியல்வாதிகளுடனேயே நாம் அதனைச் செய்ய வேண்டியுள்ளது. எனவே மறு தேர்தல் வரும்வரைக்குமாவது அதனைச் செய்வதற்கு எம்மிடம் கூருணர்வுள்ள அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனரா என்பது கேள்வியே. மக்கள் 225 உம் வேண்டாம் என்கின்றனர். அதுவும் பிரச்சினைக்குரியதே.
நாங்கள் எமது தேர்தல் சட்டங்களை மாற்ற வேண்டும். அதில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. உதாரணமாக தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகை பற்றிய வெளிப்படைத்தன்மை உள்ளடங்கலாக எத்தனையோ விடயங்களை உள்வாங்கலாம். எமது சட்டத்தில் எதுவுமே இல்லை.
1வது நபர்: உண்மைதான். ஒரு பிரகடனமாக அதனைக் கொண்டு வரலாம். ஒரு அரசியல் கலாசாரமாக இச்சந்தர்ப்பத்தில் நாம் மாற்றங்களைக் கொண்டு வரமுடியுமா எனப் பார்க்கலாம். ஜே.வி.பி என்பதனை எடுத்துக் கொண்டால், அவர்கள் பேரணிகளை நடாத்துவதை விட பாராளுமன்றில் ஏதும் செய்ய முடியுமா எனப் பார்ப்பது அதிக பொருத்தமாக இருக்கும். அவர்கள், அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீங்கினால் அது இன்னும் பிரச்சினைக்குரியதாக இருக்கும். இராணுவம் தலையிட்டால் நிலைமை இன்னும் சிக்கலுக்குரியதாகும்.
இதனை நாட்டை மீளமைப்பதற்கான சந்தர்ப்பம் அன்றி நாட்டை புதிதாக உருவாக்குவதற்கான சந்தர்ப்பமொன்றாக அமையக் கூடும் என்று கருதுகிறீர்களா?
3வது நபர்: இதனை குறுகிய மற்றும் நீண்ட கால நோக்குகள் என்று பார்க்கலாம். தற்போது ஐ.எம்.எப் (ஐஆகு) நிதியைப் பெற வேண்டியுள்ளது. அவர்கள் நிலையான அரசாங்கத்தை வேண்டுகிறார்கள். தற்போது இடைக்கால அரசாங்கம் முக்கியமானதாக உள்ளது. அதன்பிறகு என்ன நடக்கும் என்பது சுவாரஸ்யமாக இருக்கக்கூடும். ஏனெனில் மக்கள் கேட்டுக் கொண்டிருக்கும் விடயங்களோடு மறுபடியும் வழமையான அரசியலைச் செய்ய முடியும் என நான் நம்பவில்லை. அதேநேரம் சிங்கள பெரும்பான்மையாக இருந்து கொண்டு இன ஒற்றுமையைப் பற்றி பேசுவது இலகுவாக இருக்கலாம். ஆனால் சிறுபான்மை மக்கள் இத்தகைய இடத்தில் எந்தளவு சௌகரியமாக உணர்வார்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை. அன்றாட வாழ்க்கை சிக்கலுக்குள்ளானதும் இங்கு மக்கள் வருகின்றனர். அது மாறியதும் என்ன நடக்கும் என்பதும் தெரியவில்லை. உண்மையில் அரசியலமைப்பின் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை என்றிருப்பது தொடர்பாக இம்மக்கள் என்ன சொல்வார்கள் என்பதனை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.
இங்கு நடைபெறும் வகுப்புகள் பற்றி?
3வது நபர்: முன்னர் சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் மத்தியில் பல்வேறு கோசங்கள் காணப்பட்டன. ‘கப்புட்டு காக்கா.. பசில் பசில்…’ போன்றன. அதனை சில நாட்களாக அவதானித்து வந்தேன். வீடு சென்றதும் வெறுமையாக உணர்ந்தேன். ஏதோ பிழை என்று தெரிகிறது. நாங்கள் போராடுகிறோம். ஆயின் எதனை கோருகிறோம் என்பதில் தெளிவில்லாமல் இருந்தது. எங்களுக்கு பிரச்சினைக்குரிய விடயங்களைப் பற்றித் தெரிந்திருக்கிறதா? பெண்களாக? சிவில் சமூகமாக? பிரச்சினை என்ன? அதன் தீர்வென்ன என்பது பற்றி வௌ;வேறு தலைப்புகளில் வகுப்புகளை ஒழுங்கு செய்தோம். முதலாவதாக நிறைவேற்று ஜனாதிபதி முறை, அவரது அதிகாரம் பற்றி ஒரு சட்டத்தரணி பேசினார். முதலில் அங்குள்ள மக்கள் போராட்டத்துக்கும், நாம் பேசியவற்றுக்கும் என்ன தொடர்பு என்பது போல பார்த்தார்கள். ஆனால் சில நாட்களில் அவர்களது கோசங்களில் மாற்றம் தெரிந்தது. பிறகு பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி, ஆர்ப்பாட்டங்களது வரலாறு பற்றி,
பேசினோம். இது வரவேற்கப்பட்டு, தற்போது கோட்டாகோகமவிலும் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்கின்றது. நானும் ஒவ்வொன்றிலும் புதிய விடயங்களைக் கற்றுக் கொள்கிறேன். இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நாம் கனவிலும் நினைக்கவில்லை. ஆகையினால் சில இடங்களில் நாம் என்ன செய்யலாம் என்று எமக்கும் தெரியவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
இந்த கணத்தை ஒரேவிடயத்துக்கான கணமாக யோசித்து, அதன் பின்னர் அனைத்தையும் மேசைக்குக் கொண்டு வரலாமா என்று பார்க்கலாம். ஆனால் நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.
2வது நபர்: சில இடங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களது படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. யார் இதனை எதிர்பார்த்தார்கள்? நிறைய இளைஞர்களுக்கு இவற்றைப் பற்றித் தெரியாது. பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கூட.
1வது நபர்: ஆர்ப்பாட்ட வரலாறு பல்வேறு தலைவர்களைத் தோற்றுவித்துள்ளது. தற்போது அந்த செயன்முறையும் நடக்கிறது. பிரதானமாக ஒரு கோரிக்கை இருப்பினும் இங்கு நடக்கும் நிகழ்வுகள் மூலம் இந்த நிகழ்வு குறித்த அந்த குறிக்கோளுடன் மட்டும் முடிந்து போகப்போவதில்லை என்றே நான் கருதுகிறேன். அரசியல் குடும்பங்களோ, பல்கலைக்கழகமோ இன்றி பலர் இங்கு வந்து மிகத் தெளிவாக பேசுகின்றார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்கதாயும் புதிய தலைவர்களை அடையாளங் காட்டுவதாயும் உள்ளது. அவற்றைச் செய்வதற்கான முழு சுதந்திரமும் இங்கும் கிடக்கிறது. ஒரு ஆர்ப்பாட்டத்திற்குச் சென்று தாக்கப்படாமல், சித்திரவதைக்குள்ளாக்கப்படாமல், ஏச்சுப்படாமல் இருக்க முடிவதற்கான சலுகைவாய்ந்த ஆர்ப்பாட்ட இடமாக இது உள்ளது. அது பாரிய வித்தியாசம். மக்கள் அவ்வளவு நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் உணர்கிறார்கள் என்பது பெரிய விடயம்.
2வது நபர்: ஊரடங்கு போடப்பட்டபோதும் மக்கள் அதனையும் பொருட்படுத்தாமல் வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். நாங்கள் மூவர். வீட்டுக்கு அருகில் பதாகைகளை ஏந்தி இருந்தோம். எங்களை பொலிஸ் திருப்பி வீட்டுக்கு அனுப்பினர். ஆனால் சந்தியில் பலர் போராடினர். அவர்களை பொலிஸ் ஒன்றும் சொல்லவில்லை. எண்ணிக்கை கூடவும் பொலிஸ் அமைதியாக இருந்து விட்டது.
3வது நபர்: உண்மையில் இத்தனை வசதி படைந்த செல்வந்தர்களையும், அவர்கள் கொண்டுவரும் செல்வச் செழி;ப்பான நாய்களையும் பொலிஸார் ஒருநாளும் தெருக்களில் ஆர்ப்பாட்டங்களில் கண்டதில்லை என்பதனால் அவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாத குழப்பமும் காணப்படுகிறது.
அதேநேரம் இங்கு தமிழர்கள் வந்து கலந்து கொள்வார்கள் ஆயின் அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்குமா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. ஆனாலும் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டபோது ஒரு பிக்குவினால் பிரச்சினை எழுப்பப்பட்டாலும் அது முறியடிக்கப்பட்டது. அந்த நம்பிக்கையை இந்தத் தளம் தருகிறது.
5. கோட்டாகோகமவினைப் பார்வையிட வந்தவர் (20.04.2022)
இந்த இடத்துக்கு உங்களை அழைத்து வந்தது எது?
இந்தப் போராட்டத்தை நானும் பார்க்கணும் என்று வந்தேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம். நானும் இருக்க வேண்டும் என்று வந்தேன். வித்தியாசமான பல நிகழ்வுகள் நடக்கின்றன. வாசிகசாலையைக் கூட புதிய முறையில் அமைத்திருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். வரவேண்டும் என்ற ஆசையில் வந்தேன். இந்தியாவில்
ஜல்லிகட்டு நடந்தநேரம் மக்கள் போராட்டம் பற்றி ஆசைப்பட்டேன். ஆனால் எங்களுக்கு அந்த சுதந்திரம் இருக்கவில்லை. எங்களுக்கு குத்திய முள் உங்களுக்கு குத்தும் போது நான் சந்தோசப்படப் போவதில்லை. இப்போது நாங்கள் பட்ட கஸ்டத்தை நீங்கள் படும்போது நான் அதனைக் கண்டு சந்தோசப்படவில்லை.
இங்கு அதிகம் தமிழ்பேசுபவர்களைக் காண முடியவில்லை. தமிழில் பேசும்போது ஒருவர் வந்து கேட்டார். அனைவரும் சிரித்து நட்போடு பேசுகிறார்கள்தான். ஆனால் தொடர்ந்தும் தமிழில் பேசினால் அதனை வித்தியாசமாகப் பார்ப்பார்களோ தெரியவில்லை. நான் தாய்மொழியில்தான் எனது கருத்துக்களை சொல்ல சௌகரியமாக இருக்கும் என்று சொன்னேன். அவர் அதனை புரிந்து கொண்டார். நாடாளாவியரீதியில் இது அனைவரையும் பாதிக்கக் கூடிய பிரச்சினை.
நாம் யுத்தத்தைப் பார்;த்திருக்கிறோம். இந்நாட்டில் மக்களை பிரித்து நோக்குகிறார்கள். இப்பொழுது நாட்டில் பிரச்சினை என்றால் அனைவருக்கும்தான் பிரச்சினை. நமக்கும்தான் பிரச்சினை. நாமும்தான் 350 ரூபாய் கொடுத்து பெற்றோல் போடப்போகிறோம். அந்தவகையில் உணர்வு ரீதியாக விடயங்கள் மாற்றப்பட வேண்டும்.
சிங்கள மக்கள் ஒருவிதத்தில் இன்று ஐக்கியபட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டதாய் தெரியவில்லை. ஏற்கனவே இனவாதத்தைக் கக்கியே இந்த நாட்டை கட்டியெழுப்பியுள்ளனர். இதனை தொடர முடியாது. இங்குள்ள யாராவது குறுகிய சிந்தனையில் எதனையும் செய்யலாம். அப்படி நடக்கக் கூடாது. அதனால் தமிழ் மக்கள் வரவேண்டும். வரவில்லை என்று சொல்ல முடியாது. அதிகமாக வரவேண்டும். மலையக மக்களும் தங்களுக்கு முடியுமான வகையில் கலந்து கொள்கிறார்கள்.
இது பொருளாதார நெருக்கடியால் சேர்ந்த கூட்டம். அவர்களது கோரிக்கை இந்த அரசு வேண்டாம் என்பது. இச்சந்தர்ப்பத்தில் எமது ஏனைய கோரிக்கைகளை இங்கு கொண்டு வந்து சேர்ப்பது ஆரோக்கியம் இல்லை என்றே பார்க்கிறேன். இப்போது அதனைக் கொண்டு வந்தால், கோட்டாகோஹோம் என்பவர்கள் அதனை அனுமதிக்காமல் இருக்கலாம். அவர்களது நோக்கம் தவறிவிடும் என அவர்கள் கருதக் கூடும். அனைவரும் ஒரு தொனியில் போகும் போது நாம் எமது கோரிக்கைகளை இங்கு முன்வைத்து, போராட்டம் பிசகிப் போனால் மொத்தப் பழியையும் தூக்கி சிறுபான்மைகளின் தலையில் போட்டு விடுவார்கள்.
அரசை மாற்றுவதில், வெற்றிபெறுவதில் நிறைய சவால்கள் உண்டு. கோட்டாகோஹோம் என்பதற்கு அடுத்தது என்ன என்பது கேள்விக்குறியே. ஆனால் இளைஞர்கள் முதலில் நீங்கள் போங்கள் என்பதில் குறியாக இருக்கிறார்கள். ஒருங்கிணைந்த எமது நாட்டுக்கான தீர்வு என்ன என்பதற்கு எனக்குப் பதில் இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்தால் இந்த மக்கள் தானாக அடங்கி விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
தமிழ்பேசும் அனைத்து அரசியல்வாதிகளும் சரியான ஊழல் பேர்வழிகள். இடத்துக்கேற்ப வளைந்து கொடுத்து போகிறார்கள். தமிழ்பேசும் மக்களுக்கு ஆகக் குறைந்தது சுய ஆட்சி, சுயநிர்ணயம் அல்லது சமஷ்டி என்பது வழங்கப்பட வேண்டும்.
6. லக்மாலி ஹேமசந்ர– சட்டத்தரணி, விடுதலை இயக்கம் (21.04.2022)
இன்று பத்தரமுல்லையில் விடுதலை இயக்கத்தினால் இந்தப் போராட்டம் செய்யப்பட்டது. இவ்வியக்கம் இடதுசாரி பெண்ணிலைவாதிகளைக் கொண்டது. இது ரம்புக்கனை கொலைக்கு எதிரான கண்டனையைப் பதிவு செய்வதற்காகச் செய்யப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கில் நடந்தவை உட்பட, ரத்துபஸ்வெல, ஹலாவெத்த, கட்டுநாயக்க, போன்ற இடங்களில் நீண்ட காலமாக ராஜபக்ஷ அரசு கொலைகளைச் செய்து வந்துள்ளது. தற்போதைய
போராட்டத்தைப் பொறுத்தளவில் மக்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதனால் ஏற்பட்டது. பெற்றோல் விலை கூடியமை. விவசாயிகள், மீன்பிடிகாரர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இப்போராட்டத்தில் இவர்கள் உட்பட தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், பெருமளவிலான முஸ்லிம் மக்கள் என பலரும் போராடுகின்றனர். மிக அடிப்படையான அனைவரும் இணங்கிய கோரிக்கை கோட்டாபய பதவி விலக வேண்டும் என்பதுவே.
விடுதலை இயக்கத்தைப் பொறுத்தளவில் அவர் பதவி விலகினால் அடுத்த கட்டம் என்னவாக இருத்தல் வேண்டும்?
அரசியலமைப்பு முறைப்படி நடக்க வேண்டும். அதாவது பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்தல் வேண்டும். ஆனால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் தெரியப்பட்டது. எனவே அரசாங்கம் மக்களது ஆணையை இழந்து விட்டது என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே மக்கள் யாரின் தலைமையின் கீழ் இயங்க விரும்புகிறார்கள் என்ற தெரிவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எமது புரிதல். தற்போது இதனை நாங்கள் எவ்வாறு அமுல்படுத்துவது? தேர்தல்களுக்கு செலவளிக்க காசு இருக்கிறதா? போன்ற சிக்கல்களுண்டு. ஆயின் இப்போதைக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதா? இப்போராட்டத்தின் பின் அது எவ்வாறு இருக்கும் என்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதாவது தனியே பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல. மாறாக, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழித்தல், அரசாங்கத்தை மக்களுக்கு பொறுப்புச் சொல்லத்தக்கதாக மாற்றல், கடன்சுமைக்கு எதிரான எமது உரிமைகளைப் பேணல் போன்றன.
அரசாங்கத்தை மாற்றுவது பிரச்சினையைத் தீர்க்குமா?
இல்லை. ஆயின், பொறுப்புடமை என்பதொன்று உண்டு. மக்களது அன்றாட வாழ்க்கை சிக்கலில் உள்ளது. இதற்கு இந்த அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டும். மக்கள் இந்த பொறுப்பற்ற அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடியும், அதற்கெதிராக போராட முடியும் என்பவை முக்கியமானவை. எனவே ஜனநாயகம் என்பது மக்கள் எழுச்சியின் மூலம் நிலைநாட்டப்பட முடியும் என காட்டுவது. இவை அனைத்தும் ஜனநாயக, அஹிம்சைப் போராட்டங்கள். அரசு இதனை வன்முறையானது எனக் காட்ட முயற்சிக்கிறது. இப்போராட்டம் வெல்லுமாயின் அது இனிவரும் அரசாங்கங்கள் தன்னிச்சையாக ஆட்டம் போட முடியாதளவு எச்சரிக்கையாக இருக்கச் செய்யும். வேறும் பல நாடுகளில் இவ்வாறு நடந்துள்ளது. ஆனால் இலங்கையில் 1978ஆம் ஆண்டின் பின்னர் அத்தனை ஊழலையும் தாங்கிப் பிடித்து அரசாங்கத்தை நிலைநிறுத்தக் கூடிய தூணாக நிறைவேற்று ஐனாதிபதி முறைமை காணப்படுகிறது. இதனையே நாம் தற்போது அனுபவிக்கிறோம். யார் அதிகாரத்துக்கு வந்தாலும் இனி மக்கள் சக்திக்கு பயப்படுவார்கள். அந்த ஜனநாயகம் முக்கியம். அதற்காகவே நான் இதில் ஈடுபடுகிறேன்.
2015இலும் ராஜபக்ஷ வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மறுபடியும் ஆட்சிக்கு வந்தார். இனி எதிர்காலத்தில்?
2015இல் மக்கள் திரண்டு வந்து அவர்களை வீட்டுக்கு அனுப்பவில்லை. மைத்ரியை ஆட்சிக்குக் கொண்டு வந்ததில் பொதுமக்களது ஈடுபாடு இருக்கவில்லை. தற்போது பொதுமக்கள் பங்கேற்பும், இணக்கப்பாடும் காணப்படுகிறது. அப்போது வாக்கு அளிக்கப்பட்டது. வாக்களித்தல் பாரிய தெரிவுகள் உள்ள முறையல்ல. தற்போதைய அரசியல் நிலை அதிகளவான பொறுப்புடமையைக் கோரி நிற்கிறது. கடந்த அரசாங்கம் கூட அவர்களைக் விசாரணைக்குள்ளாக்காமல் விட்டு வைத்திருந்தது.
தென்பகுதி மக்கள் வடபகுதி மக்களுக்கு எவ்வாறான ஆதரவை தெரிவித்திருந்தார்கள்?
தென்பகுதி மக்கள் போதியளவு ஆதரவினை தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. இலங்கை அரசியலில் கடந்த காலத்தில் இனவாத அரசியலுக்கு ஒரு இடமிருந்தது. அது பலமுள்ள காரணியாக இருந்தது. குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரானதாக. அது முற்றாக இல்லாமல் போய் விட்டது என்று என்னால் கூற முடியாது. ராஜபக்ஷ குடும்பத்தினர் விற்று சீவித்த ஒரு விடயம் இனவாதம். ஆனால் இந்தப் போராட்டத்தை எடுத்து நோக்கினால், மக்கள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக உணர்வதாகக் தெரிகிறது. தமிழ் மக்களது உரிமைகள் மீறப்பட்டன. மஹிந்த மீண்டும் நான் யுத்தத்தை வென்றேன் என்று கூறியபோது அதற்கு மக்களிடமிருந்து எதுவிதமான அங்கீகாரம் இந்த முறை கிடைக்கவில்லை. யுத்தம் வென்ற பின் தமிழ், முஸ்லிம் மக்களை நடாத்தியது போல் சிங்கள மக்களையும் கொன்று, பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுகையில் பொறுப்புடைமை இன்றிய நிலையை மக்கள் கேட்கவாரம்பித்துள்ளனர். அரசுக்கு வால் பிடித்த அரசியல்வாதிகளுமே இவ்வரசுக்கு எதிராக பேச வேண்டிய நிலைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.
கிராம மக்களைப் பொறுத்தளவில் இந்தக் கோரிக்கைகள் மிக எளிதானவை. எரிவாயு, எரிபொருள், மின்சாரம் என்பன. ஆனால் கொழும்பைப் பொறுத்தளவில் அரசியலமைப்புத் திருத்தம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு போன்றன. இவை மக்களிடம் இருந்து வருபவை என்பதன்றி நாம் கொண்டு வருகிறோம். இங்கு இனவாதத்துக்கு எதிரான கோரிக்கையை அதேயளவு முக்கியத்துவத்துடன் நாம் முன்வைக்கிறோமா? அன்றொருநாள் முஸ்லிம்களின் பங்கேற்பு பாரியளவில் இருந்;தமை அந்;தப் போராட்டத்தின் திசையையே மாற்றியமைத்ததை அனைவரும் கண்டார்கள். அதன்பிறகு தொடர்ந்து இனவாதத்துக்கு எதிரான சுலோகங்கள் காணப்பட்டன. இந்த அரசுதான் தமிழர்களை தாக்கியது, இந்த அரசுதான் முஸ்லிம்களை தாக்கியது, இந்த அரசுதான் எம்மையும் தாக்குகிறது என்ற புரிதல் காணப்பட்டது. கோட்டாகோகமவினைத் தாண்டி அந்த கோசங்கள் வெளியில் செல்லவில்லை. இதற்கு பாரியளவிலான அரசியல் செயல்வாதம் தேவையாக இருக்கும்.
சுமந்திரன் எம்.பி கூறினார். ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஆனால் எங்களது கோரிக்கைகளுக்கு என்னவாகிற்று; என்று. நான் நினைக்கிறேன் அது மிக நியாயமான கேள்வி என்று. சிங்கள அல்லது தெற்கு அரசியல் கட்சிகள் இதற்கு பதிலளிக்க வேண்டும். கொழும்பிலுள்ள தமிழ் தோழர்கள் ‘எங்களால் போராட முடியும். ஆனால் பிறகு எங்களைத் துரத்தியடிப்பார்கள். எங்களது அனுபவம் வேறாக இருக்கிறது’ என்கின்றனர். இந்தப் பயம், மிகவும் நியாயமானதும், புரிந்து கொள்ளக் கூடியதுமாகும். இந்த தெளிவை உண்டாக்க வேண்டிய பொறுப்பு தென்பகுதி அரசியல் கட்சிகளுக்குண்டு. அல்லது அரசியல் செயல்வாதத்திற்குண்டு. எங்களுக்கு நாங்கள் எங்கே செல்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.
நான் காணும் மூன்று பிரதான விடயங்கள். பொறுப்புடமை. ஊழலின்மை, இனவாதமின்மை என்பன முக்கியம். சிங்கள மக்கள் அல்லது தென்பகுதி மக்கள் ஒருவாறாக தமிழ் மக்கள் எதற்கு முகங்கொடுத்தார்கள் என்பதனை உணர்வதாகத் தெரிகிறது. இனி எம்மைப் பொறுத்தது. நாம் இப்போது தெருவில் போராட நிற்கிறோம் என்பதற்காக நம்பிக்கையைக் கட்டி எழுப்பாமல் தமிழ் மக்களை எம்முடன் வந்து இணையக் கோர முடியாது. ஒரு சிங்கள பௌத்த சமூக செயற்பாட்டாளர் என்ற வகையில், நாங்கள் முன்னோக்கிச் செல்வதாயின், நான் தமிழ் மக்களை போராட்டத்துக்கு அழைப்பேன். ஆனால் அவர்களது பாதுகாப்புக்கும், அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் எந்தவொரு பிரச்சினைக்கும் தெற்கின் சிங்கள தோழர்கள் பொறுப்பேற்க வேண்டும். அதே நேரம் தமிழ் மக்களது கோரிக்கைகள் இப்போராட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும். கோட்டா போவது என்பது பௌதிகரீதியான விலகல் அல்ல.
அது இனவாதத்தையும், பொறுப்பின்மையையும் விலக்குவது. ஒடுக்குமுறையான, மக்களுக்கு எதிரான அரசை நீக்குவது.
நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முள்ளிவாய்க்கால் நினைவு செய்யலாம் என கருதுகிறீர்களா?
நிச்சயமாக. மே 18 வருகிறது. இதுவொரு நல்ல வாய்ப்பாக அமையும். அது பாரியளவில் பங்கேற்பை கொண்டதாக இல்லாவிட்டாலும் இதனை நாம் செய்ய வேண்டும். ராஜபக்ஷாக்கள் எமது மக்கள் மீது குற்றமிழைத்தார்கள் என்பதனை வரலாற்றில் காட்டுவதற்கான சந்தர்ப்பமாக இது அமையும்.
அவதானமும், பிரதிபலிப்பும்
எதிர்பாராதளவு இளம் சந்ததியினர் ஈடுபட்டுள்ளமை, நடுத்தரவர்க்க, தொழில்சார்ந்த, பொருளாதார அடிப்படையில் மேல்மட்ட, அடித்தர மட்ட மக்களின் பங்கேற்பு காணப்படுகின்றது. ஒருசில கட்சி அரசியல் சார்ந்த எதிர்ப்பலைகள் நாடெங்கிலும் இடம்பெறும் அதேவேளை இங்கு பொதுமக்களே இதனைச் செய்து வருகின்றனர்.
இந்த எதிர்ப்பலைகள் பரிணாம வளர்ச்சியடைந்து அரசியல் வடிவமெடுப்பதனை உணர முடிகிறது. அதாவது மக்களது நாளாந்த வாழ்க்கையில் உண்டாகும் தடைகளுக்கு எதிரான எதிர்ப்பலையாக உருவாகி, நாளாந்தம் ஒருவிதமான அரசியலை எடுப்பதான தோற்றப்பாடு தெரிகிறது. உத்கோசங்களிலும், போராட்டங்களிலும் காணப்படும் தொனி இந்நிலைமை மக்கள் அரசியலாக மாறிவருவதனை உணர்த்துகிறது.
கோட்டாகோகமவில் புதிய ஜனநாயக இடைவெளியொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. எப்படி எனில் அனைவரது கருத்து சுதந்திரமும் மதிக்கப்படுகிறது. அவர்களது கருத்துகளைச் சொல்வதற்கான உறுதிப்பாட்டை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இங்கு ஈடுபடுபவர்களிடம் காணப்படுகின்றது.
அதேவேளை பெரும்பாலானவர்கள் இலங்கைத் தேசியக் கொடியை தம்மில் போர்த்திக் கொண்டு அல்லது தாங்கிக் கொண்டு செல்வது, அக்கொடி தொடர்பான ஆழமான பார்வை இருக்கின்றதா என்ற கேள்வியை உண்டு பண்ணியது. இக்கொடி இனவாத அரசியலுக்குப் பின்னால் வந்ததொரு விடயம் என்பதனை உணராத தன்மை காணப்படுவதைப் போன்று தோன்றியது. இங்கு கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதே நோக்கம் என்ற அடிப்படையில் சிலர் அதனைத் தெரிந்தே செய்யவும் கூடும். இந்த அவதானத்தை நேர்காணல் செய்யப்பட்டவர்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனாலும் காணுமிடமெங்கும் தேசியக் கொடிகளைக் காண்பதையிட்டு அதே கொடியை எதிர்கொண்டு சிறுபான்மையாக யுத்தத்தை முகங்கொண்ட தமிழ் மக்களை இப்போராட்டம் உள்வாங்கிக் கொள்ள பலத்த ஆயத்தங்கள் செய்ய வேண்டியிருப்பதாகத் தோன்றியது. இதுபற்றி ஒரு சிங்கள பௌத்த சமூக செயற்பாட்டாளர் ‘ஒரு காட்டு மிருகத்தின் கையில் வாளையும் கொடுத்து, அதனை அரச இலைகள் நான்கு மூலைகளிலும் இருந்து ஆசீர்வதிப்பதாக அல்லது பாதுகாப்பதாகவும், சிறுபான்மை மக்கள் என அடையாளப்படுத்தி சிறு வர்ணக் கோடுகளை மட்டும் போட்டு வைத்திருக்கும் தேசியக் கொடி மிகவும் ஆபத்தான அடையாளம். இதன் அரசியல் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. என்னைப் பொறுத்தளவில் அதில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை. ஆனால் இங்கு அதனைப் போர்த்திக் கொண்டிருக்கும் சாதாரண மக்களுக்கு அந்த அரசியல் தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. அநேகமானவர்களைப் பொறுத்தவரை அது ஒரு
பாதுகாப்பு கவசம். போராட்டத்தில் ஈடுபடுகையில் தாம் தாக்கப்படாமல் இருப்பதற்காகக் கைக்கொள்ளும் ஒரு யுக்தி’ எனத் தெரிவித்தார்.
சிலர் தமது சொந்த இனவாதக் கருத்துகளையும், நிலைப்பாடுகளையும் கேள்வி கேட்கும் தன்மையை அவதானிக்க முடிந்தது. ‘நாங்கள் பிழை விட்டு விட்டோம், எனது நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்க வேண்டும்’ என நாங்கள் நேர்காணல் செய்தவர்களிடம் அல்லது கதைத்தவர்களிடம் உணர முடிந்தது.
போராட்டம் என்றால் அதில் பங்குபற்றுபவர் யாராக இருப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்றியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது உழைக்கும் மக்கள் அல்லது இழப்பை முகங்கொடுத்தோர் செய்வது என்ற அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இங்கு போராடுபவர்களது நடை, உடை, பாவனை, சிந்தனை என்று எதிர்பாராத அளவு மக்கள் இருக்கின்றனர். அலுவலகம் முடிய நேரே அங்கே வந்து தமது கழுத்துப்பட்டியைக் கழற்றி வைத்துவிட்டு பதாகை ஏந்திப் போராடும் மக்கள் இங்கிருக்கின்றனர். தங்களுடைய அலுவலக அடையாள அட்டையுடன் போராட்டம் செய்யும் மக்கள் இருக்கின்றனர். இது மக்கள் சிந்திக்கத் தொடங்கிவி;ட்டார்கள் என்ற எண்ணத்தைக் கொடுக்கிறது.
பொதுவாக போராட்டங்களில் குறித்த துறை சார்ந்த அல்லது பிரச்சினைசார்ந்த அல்லது பிரதேசம்சார்ந்த மக்கள் பங்கெடுப்பார்கள். ஆயின் இதில் அரச துறையினர் உட்பட தனியார் துறை, தொழிற்துறை ஊழியர்கள், கலைஞர்கள், என அனைவரும் திரண்டு வருகின்றமை எந்தளவு தூரம் இந்த அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பதனைக் காட்டுவதாய் உள்ளது.
இதுவரை காலமும் தமிழர்கள் பயங்கரவாதிகள். யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற எடுகோள்கள் உடைவதையும், அவ்வாறு உடைகையில் அதனை தாம் எவ்வாறு கையாளப் போகிறோம் என்ற பயமும், தெளிவின்மையும் இருப்பதாகத் தெரிகிறது. சிலர் அதனைப் பற்றிக் கதைக்கவும் விரும்பவில்லை.
காலங்காலமாக, ஒரு முற்போக்கு இடதுசாரி சிந்தனையுடன் இந்நாட்டில் போராடியவர்கள் பலர், தற்போது இது நல்லதொரு சந்தர்ப்பம் என அடையாளப்படுத்திக் கொண்டு எல்லா சமூகத்தையும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டவை, முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்தப்பட்டவை போன்றவற்றிற்கு சிங்கள சமூகத்துடன் சேர்ந்து இப்பிரச்சினைகளை அணுக வேண்டும், செயற்பட வேண்டும் என நினைக்கின்றனர். இதுவொரு புதிய சந்தர்ப்பம், அங்கீகாரம் என்றரீதியில் நடந்து கொள்வதனைக் காண முடிகிறது.
இங்குள்ள மக்கள் இன, மத, மொழி, பால், பால்நிலை, பாலியலீர்ப்பு, மாற்றுத்திறன், வர்க்கம், சாதி போன்ற எதுவித வேறுபாடுகளுமின்றி, ஒரே நோக்கில் ஜனாதிபதியை அல்லது ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றித்து செயற்படுகின்றனர்.
இங்கு எவருக்கும்; கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் காணப்படுகின்றது. கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் போராட்டமாகவும் காணப்படுகின்றது. கிறிஸ்தவ மதகுருக்களும், பௌத்த பிக்குகளும் ஒரே தரையில் அமர்ந்து கொள்கின்றனர். முஸ்லிம்களுக்கு நோன்பு திறக்கவென அங்குள்ள மக்கள் அனைவரும் இணைந்து ஒழுங்குகளைச் செய்கின்றனர். இதுவொரு போராட்ட களம். அனைவரும் பிணக்குகள் இன்றி சேர்ந்து இயங்க வேண்டும் என்ற வேண்டுதலோடும், புரிதலோடும் கோட்டாவை வீட்டுக்கு அனுப்புதலே குறியாக அனைவரும் போராடுகின்றனர். வழமையாக ஒருபோதும் காணாதளவு இனரீதியான ஒற்றுமையை அவதானிக்க முடிகிறது.
ஒரு ஆபத்தான அவதானிப்பாக உணர்ந்த விடயம், ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் அனைவரும் ஒருமித்து இருப்பினும், அதற்குப் பிறகு என்ன என்ற விடயத்தில் விடையில்லாத நிலை அல்லது அதை முக்கியத்துவப்படுத்தாத அல்லது அதை எடுத்தால் இந்தப் போராட்டம் பிசகி விடும் எனப் பயப்படுகின்ற அல்லது எங்களது வேலை இவர்களை வீட்டுக்கு அனுப்புவதுதான் போன்ற பல பக்கங்களைக் காண முடிந்தது. நீண்ட காலமாக, பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்ததென்ற அடிப்படையில் இந்த நாட்டிற்கான நிரந்தரத் தீர்வாக இந்நாட்டின் பிரச்சினைகள் என்ன என்பதனைப் புரிந்து கொண்டதாகக் தெரியவில்லை. உதாரணமாக தற்போதைய தேசியப் பிரச்சினை, இனக்குழுமங்களது உரிமைகள், அங்கீகாரம் பற்றியவை இன்றி, அவற்றை ஆழமாகப் பார்க்காமல் நாம் அனைவரும் இலங்கையர் என மேலோட்டமாக கொண்டு செல்லல் ஆபத்தில் முடியக் கூடிய நிலையும் உண்டு. இந்த ஆழமான புரிதல் இல்லை என்பதால், நாளாந்த வாழ்வின் நெருக்கடிகள், பெற்றோல், மின்சாரம், எரிவாயு நிவாரணமாகக் கிடைத்தால் பெரும்பாலானவர்கள் இப்போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டு வரக்கூடும் என்ற உணர்வும் மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அநேகமாக இங்கு வருகை தராதவர்களால் இதனைப் பற்றி, இங்கு கார்னிவெல்தான் நடக்கின்றது என்ற விமர்சனம் சமூக வலைத்தளங்களில் பரவலாக்கப்பட்டது. போராட்டம் என்பதனை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எதுவித நியமமுமில்லை. இங்கு பலவித குழுக்கள் பலவிதமான முறைகளில் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. இந்த பன்மைத்துவமும், உற்சாகமும் மக்களை இதன்பால் ஈர்க்கின்றன. குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களையும் உற்சாகமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. கலாசார, பண்பாட்டு அடிப்படைகளிலான போராட்டமாக உதாரணமாக பறை அடித்து, பாடல்களைப் பாடி, மேடை நாடகங்கள் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தமை. இது ஜனரஞ்சக அடிப்படையில் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதனைக் காண முடிந்தது.
‘கோட்டாகோகம’. இதுவொரு புதுவிடயம். இதனைப் போய்ப் பார்ப்போம் என்று பலர் வருவது களியாட்டத்துக்கானதா? ஈர்ப்புக்கானதா, அவர்களது சிந்தனைக்கானதா, அல்லது விளங்கிக் கொண்டு போராட்டத்துக்கானதா என்பதை யோசிக்கலாம். உதாரணமாகச் சொல்வதாயின் போராட்டம் பற்றியதொரு பாட்டை மூன்று மொழிகளிலும் மாறிமாறிப் போட்டுக் கொண்டிருக்கின்றமை. இங்கு வருகின்றவர்கள் வந்த பின்னர் தொடர்ந்தும் தம்மை போராட்டத்தில் இணைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக வேலை முடிந்த நேரங்களிலும், சனி, ஞாயிறு விடுமுறை தினங்களிலும் இங்கு ஆயிரக்கணக்கான மக்களைக் காண முடிகின்றது. இது இத்தனை காலமும் பழகிப் போன ஆர்ப்பாட்ட முறைகளைப் பற்றி எம்மையும் மீள்சிந்தனைக்குள்ளாக்க வைத்துள்ளது.
தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடப்பட்டிருந்தது. தமிழ் மொழியில் பாடப்படாமையினால் அது உடனடியாக பலத்த விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. ஏற்கனவே தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது குறித்த சர்ச்சைகளை இந்த அரசு ஏற்படுத்தியிருந்த அதேவேளை, அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போதும் தமிழ் ஒதுக்கப்பட்டமை கண்டனத்துக்குள்ளானது. உடனடியாக சமூக வலைத்தளங்களில் தமிழ் தேசிய கீதம் பரவலாக ஆங்கில எழுத்தில் பகிரப்பட்டதுடன் அடுத்த நாள் தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட அழைப்பும் விடுக்கப்பட்டது. அதிகமானளவில் தமிழ் இளைஞர்களையும், தமிழ் பதாதைகளையும் காணக்கூடிய நாளாக அது இருந்தது. தமிழ் பேசுவோருடன் இணைந்து சிங்கள மக்களும் தமிழில் தேசிய கீதத்தை இசைத்தனர். பாடி முடிந்ததன் பின்னரான உரையின் போது ஒரு
பௌத்த மதகுரு தமிழ் பாடியது தொடர்பாக பிரச்சினை எழுப்பியிருந்தார். ஆனால் அங்கு இருந்த சிங்கள இளைஞர்கள் அவரது கருத்தை முறியடித்து அங்கிருந்து அவரை அகற்றியிருந்தனர். தொடர்ந்தும் தமிழில் உரை இடம்பெற்றது. இது நிச்சயமாக, நல்லிணக்கத்துக்கான ஒரு முனைப்பாக அமைந்துள்ளது என பலராலும் கருதப்படும் அதேவேளை, நீண்ட காலமாக ஒடுக்குமுறைக்குள்ளாக்கிப் பழகியவர்களை அதே சமூகத்தைச் சேர்ந்;த இளைஞர்கள் கேள்விகேட்கவாரம்பிப்பதும், தவறைத் திருத்திக் கொள்ள முயற்சிகள் எடுத்து முனைப்புடன் செயற்படுவதும் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்கிறது.
கோட்டாகோகம வில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வியக்கத்தகு அளவில் வன்முறையற்ற விதமாக தமது விரோதத்தையும், பகிஷ்பரிப்பையும் அரசுக்குத் தெரிவித்து வருகின்றனர். இது வன்முறையற்ற போராட்டமாக வளர்ந்து வருகின்றது. அதனைப் பற்றி அனைவரும் உணர்ந்து நடந்து கொள்கின்றனர். காலிமுகத்திடலில் மக்கள் திரண்டு ஓரிடத்தில் தொடர்ச்சியாக வன்முறையற்று, ஆக்கபூர்வமான வழிவகைகளில் போராடி வருகின்றபோதும், இக்கால கட்டத்தில் நாட்டில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்தப் போராட்டத்தின் அழுத்தத்தினால் விளைந்தவையாகவே அறியப்படுகின்றன. பல தடவைகள் அமைச்சரவை மாற்றப்பட்டமை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் அரசியற் கட்சிகளுக்குள்ளேயும் பரவியுள்ளமை, அரசியலமைப்புத் திருத்தம், கொழும்பு பல்கலைக்கழக உயர்பீடத்தின் கல்வியாளர்கள் அரசியல் நியமனதாரிகளை எதிர்த்து பதவி விலகியுள்ளமை, பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தம் நிலையை அரசுக்கு எதிராக அறிவித்துள்ளமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளமை, ஆர்ப்பாட்டம் தொடர்பான சம்பவங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினது முனைப்புடனான செயற்பாடுகள், வழமைக்கு மாறாக பொலிஸ் அதிகாரிகள் அநேக சந்தர்ப்பங்களில் அடக்கி வாசிக்கின்றமை, அடிக்கொரு தடவை தான் பதவி விலக மாட்டேன் என ஜனாதிபதியும், பிரதமரும் மாறிமாறி அறிக்கை வெளியிடல், நாமல் ராஜபக்ஷ நடப்பு அமைச்சரவையில் எதுவித பதவிகளிலும் நியமிக்கப்படாமை போன்ற சில விடயங்களை உதாரணமாகக் கூறலாம். இவை அனைத்தும் மக்கள் போராட்டங்களின் விளைவாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி எனவே கூறமுடியும்.
படத்தொகுப்பு
நன்றி- த கார்டியன்