இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொற்றுநோய்க்கு பின்னர், சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் எல்லைகளை நியூஸிலாந்து திறந்துள்ளது.
நியூசிலாந்து தனது எல்லைகளை அதிகமான சர்வதேச பார்வையாளர்களுக்கு மீண்டும் நேற்று (திங்கட்கிழமை) திறந்துள்ளது.
நாட்டின் ஒக்லாந்து விமான நிலையத்தில் பயணிகள், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உணர்வுபூர்வமாக மீண்டும் இணைந்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் எல்லையை மீண்டும் திறப்பதாக அறிவித்த பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், தென் பசிபிக் நாடு ‘உலகைத் திரும்ப வரவேற்கத் தயாராக உள்ளது’ என கூறினார்.
தடுப்பூசி மற்றும் எதிர்மறை கொவிட் சான்றிதல் இருந்தால், 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்போது நாட்டிற்குள் நுழைய முடியும்.
குடிமக்கள் மார்ச் முதல் உள்ளேயும் வெளியேயும் பயணிக்க முடிந்தது, அதே நேரத்தில் அவுஸ்ரேலியர்கள் ஏப்ரல் மாதம் முதல் அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு 2020ஆம் ஆண்டு நியூஸிலாந்து அதன் எல்லைகளை மூடியது.
நியூஸிலாந்தின் ஐந்து மில்லியன் மக்கள்தொகைக்கு 713 இறப்புகள் பதிவாகின. அதன் தனிமைப்படுத்தும் உத்தி மற்றும் விரைவான சோதனை, தடமறிதல் மற்றும் முடக்கநிலை ஆகியவற்றின் கொள்கைகள் மூலம் தொற்றுப்பரவலை வெகுவாக குறைத்தது.
ஆனால், சில நியூசிலாந்தர்கள் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கநிலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நியூஸிலாந்தின் பொருளாதாரம் சர்வதேச பார்வையாளர்களிடமிருந்து சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது, மேலும் செயற்பாட்டை மீண்டும் தொடங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கட்டுப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.