நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் 60,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும் எனினும் மார்ச் மாதம் கிட்டத்தட்ட 110,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிற்கு தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 1000-1500க்கு இடையில் குறைந்துள்ளதுடன், மார்ச் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 4000-5000 வரை காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு போன்றவை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சுற்றுலா சேவைகளை வழங்கும் பல ஹோட்டல்கள் நெருக்கடியில் உள்ளன. இதனால் சுற்றுலாத்துறையில் தொழில்புரிபவர்களும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.