நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப்பொருட்கள் எதிர்காலத்தில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சற்றுமுன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது பற்றாக்குறையாக காணப்படும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது இலங்கை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதும் ஆழமானதுமானதென்றும் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட அனைவருக்கும் தேசிய பொறுப்பு உள்ளது எனத் தெரிவித்த அவர், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஓரிரு மாதங்களில் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் கடந்த காலங்களில் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டிய காலப்பகுதியில் அரசாங்கம் வரிகளை குறைத்ததாகவும் அதன் பலனை இன்று அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையின் சரிவு, எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணிகள் வெளிநாட்டு கையிருப்பு இழப்புக்கு பங்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தற்போது இலங்கையில் வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே காணப்படுவதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.