ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, முழு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யா மீது 6 புதிய பொருளாதாரத் தடைகளுக்கான உத்தேச திட்டத்தை ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொண்டெர் லெயென் வெளியிட்டார்.
அதில் ஒரு பகுதியாக, சர்வதேச பணப் பரிவர்த்தனை அமைப்பான ‘ஸ்விஃப்ட்’ இணைப்பிலிருந்து ரஷ்யாவின் 3 முக்கிய வங்கிகளைத் துண்டிக்க அவர் பரிந்துரைத்தார்.
அத்துடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடுகள் படிப்படியாகக் குறைத்து இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் பல நாடுகள் நாலாபுறமும் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளதால், அவை மாற்று வழியில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். இருந்தாலும், கச்சா எண்ணெய் தேவைக்காக ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்றப்படவேண்டும் என அவர் மேலும் கூறினார்.
கச்சா எண்ணெய் இறக்குமதி தடைக்கு உறுப்பு நாடுகள் அங்கீகாரம் அளித்தால், ரஷ்யாவுக்கு மிகப் பெரிய வருவாயை ஈட்டித் தரும் எரிசக்தி ஏற்றுமதி மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் இரண்டாவது தடையாக அது இருக்கும். ஏற்கெனவே, ரஷ்ய நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.