மே 18 இம்முறை மிகவும் வித்தியாசமான ஒரு சூழலுக்குள் வருகிறது. எந்த மே மாதம் ராஜபக்சக்கள் நாட்டை சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்ததாக பிரகடனப்படுத்தினார்களோ, அதே மே மாதம் அவர்களை சிங்கள மக்களை அவர்களுடைய சொந்த தேர்தல் தொகுதிகளில் இருந்து துரத்தியிருக்கிறார்கள். இப்பொழுது மஹிந்த ராஜபக்ச நாட்டின் வடக்குக் கிழக்கில் எங்கேயோ ஒரு படைத் தளத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாக கருதப்படுகிறது.அவர்கள் பாதுகாத்து கொடுத்த தேசமே அவர்களை ஓட ஓட விரட்டுகிறது. அவர்கள் எங்கேயும் தப்பி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விடாமல் இருக்க நீதிமன்றங்களில் தடையுத்தரவை வாங்கி வைத்திருக்கிறது.
இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முன்னெப்பொழுதும் இடம்பெற்றிராத சம்பவங்கள் கடந்த சுமார் 45 நாட்களுக்கு மேலாக நடந்துவருகின்றன. மார்ச் மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன் தொடங்கிய ஆர்ப்பாட்டம் அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது. அதன் விளைவாக கோட்டாபயவை தவிர ஏனைய எல்லா ராஜபக்சக்களும் பதவி விலகிவிட்டார்கள்.
ராஜபக்சக்கள் கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரணிலைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற முற்பட்டார்கள். ஆனால் இப்பொழுது அதே ரணிலை செங்கம்பளம் விரித்துக் கூப்பிட்டு பிரதமராக நியமித்திருக்கிறார்கள். ரணில் விக்ரமசிங்க இப்பொழுது ஆளுங்கட்சியின் பிரதமரா? அல்லது எதிர்க்கட்சிகளின் பிரதமரா? வழமையான நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர்தான் பிரதமராக வரலாம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஆளுங்கட்சி உறுப்பினர் அல்ல. எதிர்க் கட்சி உறுப்பினரும் அல்ல. எதிர்க்கட்சியாக அமர்வதற்குக் கூட அவரிடம் ஆசனங்கள் இல்லை. ஒரே ஒரு ஆசனம்தான் உண்டு. அதுவும் தேசியப்பட்டியல் ஆசனம். உலகிலேயே தேசியப்பட்டியல் ஆசனத்தின் மூலம் தனி ஒருவராக தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவர் நாட்டின் பிரதமராக வந்திருப்பது என்பது ஆசியாவின் அதிசயம் மட்டுமல்லை, உலகத்தின் அதிசயமும்தான்.
அவர் ஆளும் கட்சியின் பிரதமரும் அல்ல. எதிர்க்கட்சியின் பிரதமரும் அல்ல. சரியான வார்த்தைகளில் சொன்னால் அவர் தோல்விகளின் பிரதமர். இலங்கைத்தீவின் நாடாளுமன்ற அரசியல் தோல்விகளின் பிரதமர். தோற்றுப்போய் ஒரு ஆசனத்தை கூட வெல்ல முடியாத ஒரு கட்சியின் பிரதிநிதி அவர். ஆனால் நாடாளுமன்றத்தின் தோல்வி அவரை பிரதமர் ஆக்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் தோல்வி அல்லது அவருடைய அரசியல் எதிரிகளின் தோல்வி அவரை தவிர்க்க முடியாதபடி தெரிவு செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் அவருக்கு வெற்றிதான். ஒரேசமயத்தில் அவர் இரண்டு எதிரிகளை வென்றிருக்கிறார். முதலாவது தனது கட்சியின் எதிரியான தாமரை மொட்டை வென்றிருக்கிறார். இரண்டாவதாக உட்கட்சி எதிரியான சஜித்தை வென்றிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அது வெற்றி.ஆனால் அவர் தலைமையேற்றிருப்பது ஒரு தோல்விக்கு. இந்த தோல்வியை அவர் வெற்றியாக மாற்றிக் காட்ட வேண்டும்.
இவ்வாறு தென்னிலங்கையில் நாடாளுமன்றம், ஜனநாயக அரசியலின் நகைக்கத்தக்க நூதனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், மே18 வருகிறது. இப்போதிருக்கும் அரசியல் நிலவரங்களின்படி தென்னிலங்கை குழம்பிப் போயிருக்கிறது. ஒப்பீட்டளவில் வடக்கு-கிழக்கில் சமூக அமைதி காணப்படுகிறது. ஆனால்தென்னிலங்கை குழம்பிப்போய் இருந்தாலும் அதன் படைக் கட்டமைப்பு அப்படியே பலமாக இருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் படையினரின் பிரசன்னம் அப்படியே இருக்கிறது.
இப்படிப்பட்ட ஓர் அரசியல் சூழலில் தமிழ் மக்கள் மே 18ஐ நினைவு கூரும் பொழுது அதை படைத்தரப்பு தடுக்குமா ? ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தடுக்குமா? நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தடுப்பாரா? அந்த ஜனாதிபதியை வீட்டுக்கு போ என்று கேட்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மே18 அனுஷ்டிப்பார்களா? அந்த ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக என்ன நிலைப்பாட்டை எடுக்கும்? கடந்த ஆண்டு நினைவு கூர்தலின்போது சஜித் பிரேமதாச தமிழ் மக்களுக்குச் சாதகமாக அறிக்கை விட்டார். அந்த நிலைப்பாட்டை அவர் இந்த ஆண்டும் புதுப்பிப்பாரா? போன்ற கேள்விகளின் மத்தியில் மே 18 வருகிறது.
கோட்டாபய ஆட்சியின் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மக்கள் துப்பாக்கியின் நிழலில்தான் நினைவுகூர முடிந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பில் நினைவுகூர்ந்த காரணத்துக்காக பத்துப் பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் நான்கு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின் அண்மையில்தான் விடுவிக்கப்பட்டார்கள். மேலும்.அண்மையில் மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவு தினம் வந்தது. அதை அனுஷ்டிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சில செயற்பாட்டாளர்களின் மீது தடை உத்தரவு வாங்கப்பட்டது.
இப்பொழுது ரணில்விக்கிரமசிங்க வந்திருக்கிறார்.அவர் எதிரிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர். ஆயின்,அவர் நினைவுகூர்தல் தொடர்பாக எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்? கோட்டா கோ கம கிராமம் தொடர்பாக அவர் எடுத்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகவே அது அமையும் என்று எதிர்பார்க்கலாமா?
அவரும் மைத்திரியும் ஆட்சி புரிந்த காலத்தில் நினைவு கூர்தலுக்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது. நிலைமாறுகால நீதியின் கீழ் நினைவு கூர்தல் அனுமதிக்கப்பட்டது. இம்முறையும் அவ்வாறு அனுமதிக்கப்படுமா?
ரணில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தமிழ் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியிருக்கும்.இப்போதும் அவருக்குரிய பெரும்பான்மையை உருவாக்குவதற்கு அரசாங்கத்தோடு இணைந்து நிற்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. எனவே நினைவு கூர்தல் பொறுத்து கடந்த இரண்டு ஆண்டுகளை விட ஒப்பீட்டளவில் அதிகரித்த வெளி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
ஏற்கனவே கடந்த வாரத்தில் இருந்து தமிழ் பகுதிகளில் நினைவு கூர்தல் தொடங்கிவிட்டது. முள்ளிவாய்க்கால் நினைவுகளைப் பகிரும் விதத்தில் வெவ்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்படுகிறது.இவ்வாறான செயற்பாடுகளை படையினரும் பொலிசாரும் பெரும்பாலும் தடுப்பதாகத் தெரியவில்லை.எனவே இச்செயற்பாடுகளின் உச்சக்கட்டமாக முள்ளிவாய்க்காலில் மக்கள் கூடி தங்கள் கூட்டுத் துக்கத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளுக்கும் அரசாங்கம் அனுமதிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
அதேசமயம் அரசாங்கத்துக்கு எதிராக கிராமங்களை அமைத்து போராடும் செயற்பாட்டாளர்கள் தமிழ் மக்களின் நினைவுகூர்தல் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்ற கேள்வி தமிழ் மக்களிடம் உண்டு.
கடந்த வெள்ளிக்கிழமை அக்கிராமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படும் ஒரு இளம்பெண்ணும் பௌத்த மத குருவும் கிறிஸ்தவ மத குருவும் இணைந்து ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் புதிய பிரதமரை நோக்கி அவர்கள் கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்கள். அக் கோரிக்கைகளில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பான ஆழமான கோரிக்கைகள் எவையும் இருக்கவில்லை.அது தொடர்பாக தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் கசப்பான எதிர்வினைகளை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.
தமிழ் மக்கள் மத்தியில் கோட்டா கோ கம கிராமத்தோடு இணைந்து தமிழ் மக்கள் போராட வேண்டும் என்று கேட்பவர்களை விடவும் அந்தப் போராட்டங்களில் சம்பந்தப்படாமல் விலகி நிற்க வேண்டும் என்று கூறுபவர்களின் தொகைதான் ஒப்பீட்டளவில் அதிகமாகும். தமிழ் அரசியல் பரப்பில் சுமந்திரனைத்தவிர பெரும்பாலானவர்கள் விலகி நிற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் கொண்டிருப்பதாக தெரிகிறது. இப்படிப்பட்டதோர் பின்னணியில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஊடகச் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அப்போராட்டக்காரர்கள் மீது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் நம்பிக்கை வைக்க முடியாது என்று கூறும் தரப்புக்களை உற்சாகப்படுத்தியிருக்கின்றன.
மேற்படி ஆகப் பிந்திய நிகழ்வுகளின் பின்னணியில் கோட்டாகோ கம கிராமத்தில் இருப்பவர்கள் மே18ஐ நினைவு கூர்வார்களா என்ற கேள்வி தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பலமாக மேலெழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்த உரையாடல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. குறிப்பாக ஆங்கிலத்தில் நிகழும் அவ்வாறான உரையாடல்களில் சிங்கள செயற்பாட்டாளர்களும் பங்குபற்றவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களில் அநேகர் நினைவு கூர்தலுக்கு ஆதரவாகக் காணப்படுவதாக தெரிகிறது. அப்படிப்பட்ட உரையாடல்கள் தொடர்ச்சியாக நடக்கவேண்டும். தமிழ் மக்கள் தமது போராட்ட நியாயத்தை கோட்டா கோ கமவுக்கு விளங்கப்படுத்த வேண்டும். சிங்கள நடுத்தர வர்க்கம் மிகவும் நொந்து போயிருக்கிறது. யுத்த வெற்றியை ஓர் அரசியல் முதலீடாக வைத்து ஒரு குடும்பம் நாட்டைச் சூறையாடி விட்டது என்ற அபிப்பிராயம் அவர்கள் மத்தியில் பலமாக காணப்படுகிறது. யுத்த் வெற்றியைச் சாப்பிட முடியாது என்பதனை கடந்த சில மாதங்கள் அவர்களுக்கு உணர்த்தி விட்டன. எனவே அவர்களோடு உரையாடலைத் தொடங்க வேண்டிய நேரம் இதுதான். மே பதினெட்டுத் தொடர்பாக கோட்டா கோ கம கிராமத்தில் இருப்பவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது இனங்களுக்கு இடையிலான உரையாடலைத் தீர்மானிக்கும் ஆகப் பிந்திய தொடக்கமாக அமையும்.