காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு எதிரே நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக சாட்சியங்கள் ஏதும் இருப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 பேரை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணை அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கவனத்திற்கொண்டதன் பின்னரே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குற்றத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு மேலதிகமாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மிலன் ஜயதிலக, மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ, சுயதொழில் செய்பவர்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த கஹந்தகம மற்றும் சமூக ஆர்வலர் டான் பிரியசாத் ஆகியோரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பில் வினவியபோது, சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் சுருக்கத்தை உன்னிப்பாக அவதானித்து, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.