ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான பிரேரணையை ஆராய்ந்து சமர்பிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 09ஆம் திகதி கொழும்பில் அமைதியான முறையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸார் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது தொடர்பில் தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ள பிரதமர், தேவைப்பட்டால் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.