யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்காக காணி அளவீடு செய்யும் முயற்சி மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
கொடிகாமம் மத்தி J/ 326 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான 10.5 பரப்பு காணியில் 15ஆவது கஜபாகு படைப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ளனர்.
குறித்த காணியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை நிரந்தர முகமாக அக்காணியில் நிர்மாணிக்கும் முயற்சியில் முதல் கட்டமாக அக்காணியை சுவீகரிப்பதற்காக நிலஅளவை செய்வதற்கான பணிகள் நேற்று முன்னெடுக்கப்படவிருந்தது.
இந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமை காரணமாக, காணி அளவீட்டு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.